Thursday Dec 26, 2024

மகிமைமிகு திருநீறு…

திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஐசுவரி்யம் என்றும் கூறப்படும்.

எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துவதாக கருதப்படுகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.

அணியும் காரணம்

மந்திரமாவது நீறு” – திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.

புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.[1]

இது தற்பொழுது உள்ள குறிப்பு.

1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. அதனால் மன வசியம் (hypnotisers) எளிதாக வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே, நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது வழக்கம்.

2.அருட்சோதி புருவ நடுவில் தோன்றுவது இல்லை. அது கபாலக் குகைக்குள்தான் தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக் கபாலக் குகைக்குள் நுழைய முடியும் என்பதைக் குறிக்க வேண்டுமாகில் திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம்.

அணியும் காரணம் — மற்றொரு விளக்கம்

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.

ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.

மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம்.

நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.

எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.

அணியும் முறை

வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை “உத்தூளனம்” எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை “திரிபுண்டரம்” எனப்படும்.

திருநீறு அணியும் இடங்கள்

உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை

  1. தலை நடுவில் (உச்சி)
  2. நெற்றி
  3. மார்பு
  4. தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
  5. இடது தோள்
  6. வலது தோள்
  7. இடது கையின் நடுவில்
  8. வலது கையின் நடுவில்
  9. இடது மணிக்கட்டு
  10. வலது மணிக்கட்டு
  11. இடது இடுப்பு
  12. வலது இடுப்பு
  13. இடது கால் நடுவில்
  14. வலது கால் நடுவில்
  15. முதுகுக்குக் கீழ்
  16. கழுத்து முழுவதும்
  17. வலது காதில் ஒரு பொட்டு
  18. இடது காதில் ஒரு பொட்டு

பலன்கள்

திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!

திருநீறு அணிவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்றும்,[2] திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு முறை பாவங்களை செய்த ஒருவன் இறந்துபோனான். அவனுடைய வாசலில் இருந்த சாம்பலில் புரண்டு எழுந்த நாயொன்று அவன் மீது நடந்து சென்றது. அப்போது அந்த நாயின் கால்களிலிருந்த சாம்பாலனது அவனுடைய உடலில் பட்டது. அவன் உடலில் திருநீறு இருப்பதை அறிந்த யமதூதர்கள் விலகினர், அவனுடைய உயிரினை சிவகணங்கள் கையிலாயத்திற்கு எடுத்து சென்றன. இந்த கதையானது திருநீறு அணிவதால் அவனுடைய பாவங்கள் போகின்றன என்பதை மக்களுக்கு கூறுகிறதாகும்.

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top