Saturday Dec 21, 2024

பெரம்பூர் பிரமபுரீசுவரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

பெரம்பூர் பிரமபுரீசுவரர் திருக்கோயில், பெரம்பூர், தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609406.

இறைவன்

இறைவன்: பிரமபுரீசுவரர் இறைவி: ஆனந்தவல்லி

அறிமுகம்

பெரம்பூர் பிரமபுரீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். தரங்கம்பாடி வட்டம் பெரம்பூரில் இக்கோயில் உள்ளது. இவ்வூர் பிரம்பில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் பிரமபுரீசுவரர் ஆவார். இறைவி ஆனந்தவல்லி ஆவார். முன்பு இக்கோயில் பின்புறம் இருந்ததாகவும், நாளடைவில் சிதலமாகிய நிலையில் இறைவனையும், இறைவியையும் எடுத்துவந்து சுப்பிரமணியர் கோயிலில் வைத்துவிட்டதாகவும் கூறுகின்றனர். மூலவராக சுப்பிரமணியர் உள்ளார். வெளிச்சுற்றில் விநாயகர், கந்தபுரீசுவரர், லட்சுமி நாராயணப்பெருமாள் உள்ளனர். அடுத்து பிரம்மபுரீசுவரர், ஆனந்தவல்லி திருமேனிகள் உள்ளன. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.

புராண முக்கியத்துவம்

கோயில் பிரகாரத்தில் ஆதி விநாயகர், மகாவிஷ்ணு, ஐயப்பன், துர்க்கை, பிரம்மபுரீஸ்வரர், ஆனந்தவல்லி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, பிரம்மா, நந்தி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கிழக்கு நோக்கிய நிலையில் ஐந்து நிலைகளுடன் கூடிய பிரமாண்ட கோபுரம். இரண்டு பிரகாரங்கள், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என கோயில் பெரியதாக அமைந்துள்ளது. கோயில் வாசலில் விநாயகருக்கும் இடும்பனுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. மிளகு செட்டியார் என்பவர் இத்தலத்தில் தங்கி இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளார். எனவே அவரது சிலை நந்திக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது. திருவாதிரை நாளில் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

பொதுவாக சிவன் கோயில்களில் சிவன் சன்னதிக்கு பின் புறம் வட மேற்கு திசையில் முருகனுக்கு தனி சன்னதி இருக்கும். ஆனால் இத்தலத்தில் முருகன் குருவாக விளங்குவதால், முருகனின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் வட மேற்கு திசையில் தனி சன்னதியில் குபேரலிங்கேஸ்வரரும், ஆனந்தவல்லி அம்மனும் வீற்றிருந்து அருளுகின்றனர். இதனால் இத்தலத்தில் தந்தை ஸ்தானத்தில் மகனும், மகன் ஸ்தானத்தில் தந்தையும் அருளுவதாக கூறப்படுகிறது. இது போன்ற அமைப்புள்ள கோயில்களை காண்பது மிகவும் அரிது. முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் ஆறுமுகத்துடன் திகழ்கிறார். பெரும்பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்குள்ள மூலஸ்தானத்தில் முருகனின் வாகனமான மயிலின் தலைப்பகுதி இடது பக்கம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.மயிலுக்கு இத்தலத்தில் தான் உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. தெய்வானை இங்கு தனி சன்னதியில் அருளுகிறாள்.

திருவிழாக்கள்

பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், சித்ரா பவுர்ணமி, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரம்பூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பேராளம் / மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top