Sunday Dec 22, 2024

பெண்ணாகடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில், கடலூர்

முகவரி

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் கோயில், பெண்ணாடம்-606 105 கடலூர் மாவட்டம். போன் +91- 4143-222 788, 98425 64768

இறைவன்

இறைவன்: பிரளயகாலேஸ்வரர், சுடர்க்கொழுந்துநாதர்,இறைவி: அமோதானம்பல்

அறிமுகம்

பெண்ணாகடம் பிரளயகாலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலமாகும். இது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மெய்கண்டார் அவதரித்ததும் கலிக்கம்ப நாயனார் பேறு பெற்றதும் இத்தலத்தில் எனப்படுகிறது. தேவ கன்னியரும், காமதேனுவும், வெள்ளை யானையும் வழிபட்ட தலமென்பதும் அப்பர் சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.

புராண முக்கியத்துவம்

ஒருமுறை தேவலோகத்தில் சிவபூஜை செய்ய பூலோகத்து பூக்கள் தேவைப்பட்டது. தேவகன்னியர் இருவரை தேவேந்திரன் பூலோகத்திற்கு அனுப்ப, பூக்களை பறித்து வரச் சொன்னான். பூமிக்கு வந்த கன்னியர்கள் ஒரு நந்தவனத்தில் பூக்கள் இருப்பதைக் கண்டு அதை பறிக்கச் செல்கிறார்கள். அங்கிருந்த சிவலிங்கத்தைக் கண்டதும் பக்தியால் ஈர்க்கப்பட்டு, பறித்த பூக்களை அவருக்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டனர். கன்னியரைக் காணாத இந்திரன் அவர்களை அழைத்து வர காமதேனு பசுவை அனுப்பினார். அது பூலோகம் வந்ததும் கன்னியர் செய்யும் பூஜையைக்கண்டு தானும் அவர்களுடன் சேர்ந்து ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து, அங்கேயே தங்கி விட்டது. மீண்டும், தன் ஐராவத வெள்ளையானையை அனுப்பினான் இந்திரன். யானை, பூமியில் இவர்கள் செய்யும் பூஜையை பார்த்து விட்டு தானும் தன் பங்கிற்கு, திறந்தவெளியில் இருந்த சிவலிங்கத்தை மறைத்து நின்று, வெயில் படாமல் பார்த்து கொண்டது. பொறுமை இழந்த இந்திரன் பூமிக்கு வந்துவிட்டான். தன்னால் அனுப்பபட்டவர்கள் அனைவரும் சிவபூஜை செய்வதை பார்த்து, அவனும் பூஜை செய்ய ஆரம்பித்து விட்டான். சிவனருள் பெற்று அனைவருடனும் தேவலோகம் சென்றான்.

நம்பிக்கைகள்

கை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் இத்தல சிவனை வழிபட்டால் நீங்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

ஒருமுறை உலகம் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அப்போது இத்தலம் தவிர அனைத்து இடங்களும் வெள்ளத்தால் மூழ்கியது. இதையறிந்த தேவர்கள் இங்கு வந்து, உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி வேண்டினர். சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி, ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. எனவே இங்குள்ள இறைவன் பிரளயகாலேஸ்வரர் என அழைக்கப்பட்டார். கலிக்கம்பநாயனார் தன் மனைவியுடன் இணைந்து, வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு பாத பூஜை செய்து வந்தார். ஒருமுறை அவரது மனைவி, சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட கலிக்கம்பர் மனைவியின் கையை வெட்டி விட்டார். கருணைக்கடலான் ஈசன் அந்த பெண்ணின் கையை மீண்டும் தந்தார். திருநாவுக்கரசர் இவர் சிவனிடம் தன் உடலில் திரிசூல முத்திரையும், ரிஷப முத்திரையும் பொறிக்க வேண்டினார். இவரது வேண்டுகோளை ஏற்ற சிவன் இத்தலத்தில் தன் கைப்பட அவருக்கு முத்திரையை பொறித்தார். மலைக்கோயில் சோழமன்னன் ஒருவன் இறைவனை தரிசிக்க இத்தலம் வரும்போது ஆற்றில் வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையில் இருந்தபடி சிவனை வேண்டிய போது, அவனுக்காக தன் இருப்பிடத்தை உயர்த்தி கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்க செய்தார். இப்போதும், 30 மீட்டர் உயரத்தில் உள்ள கட்டு மலைக்கோயில் என்ற மேட்டுப்பகுதி கோயிலுக்குள் உள்ளது.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி . சித்திரையில் 12 நாள் பிரம்மோற்ஸவம்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

விருத்தாசலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருத்தாசலம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top