Monday Dec 23, 2024

புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி

புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், இராமாபுரம் (புட்லூர்), திருவள்ளூர் மாவட்டம் – 602 025 மொபைல்: +91 94436 39825.

இறைவன்

இறைவி: அங்காள பரமேஸ்வரி (பார்வதி)

அறிமுகம்

அங்காள பரமேஸ்வரி கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் நகருக்கு அருகில் உள்ள புட்லூர் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவில், பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலஸ்தான தெய்வம் பூங்காவனத்தம்மன் / அங்காள பரமேஸ்வரி என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் அம்மன் கர்ப்பிணிப் பெண் வடிவில் உள்ளார். கருவறைக்குள் சிவன் காணப்படுவதால், சிங்கத்திற்குப் பதிலாக, கருவறையின் முன் நந்தி சிலை உள்ளது, இது அம்மன் கோவிலில் காணப்படுவது அரிது. பௌர்ணமி நாட்களில் கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

புராண முக்கியத்துவம்

பொன்மேனி என்னும் விவசாயி வறுமை காரணமாக தன் நிலத்தை மகிசுரன் என்பவனிடம் அடமானம் வைத்தான். அதே நிலத்திலேயே வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்தான். மகிசுரன் அசுர குணம் கொண்டவன். ஊர் மக்கள் அனைவரிடமும் இப்படி நிலத்தை அடமானம் வாங்கி கொண்டு, வட்டி மேல் வட்டி போட்டு சொத்தை அபகரித்து வந்தான். பொன்மேனியாலும் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. கோபம் கொண்ட மகிசுரன் பொன்மேனியை அடித்து உதைத்தான். ஊரார் முன்னிலையில்,””நீ ஊருக்கு வெளியே இருக்கும் பூங்காவனத்தை சிவராத்திரி ஒரு நாள் இரவில் உழுது, விதைத்து, நீர்பாய்ச்சி பொழுது விடிவதற்குள் முடிக்கவேண்டும். இல்லாவிட்டால் தொலைத்து விடுவேன்,”என எச்சரித்து சென்றான். பூங்காவனம் என்பது தீய சக்திகள் உலவும் இடம். தினம் தினம் அடிவாங்கி சாவதை விட, ஒரே நாளில் செத்து விடலாம். என தீர்மானித்த பொன்மேனி சிவராத்திரி இரவில் பூங்கா வனத்தை அடைந்தான். அங்கு தன் இஷ்ட தெய்வமான கருமாரியை வணங்கி நிலத்தை உழ ஆரம்பித்தான். அப்போது ஒரு முதியவரும், மூதாட்டியும் இங்குள்ள மரத்தின் கீழ் அமர்ந்தார்கள். பாட்டிக்கு தாகத்தில் தவித்தாள். உழுது கொண்டிருந்த பொன்மேனி இதைக் கண்டு பரிதாபப்பட்டு, பெரியவரை அழைத்துக் கொண்டு தண்ணீர் கொண்டு வர சென்றான். திரும்பி வந்து பார்த்த போது மூதாட்டியைக் காணவில்லை. அவன் அதிர்ச்சியுடன் முதியவரின் பக்கம் திரும்பிய போது அவரும் அங்கு இல்லை. பின்னர் மீண்டும் உழுதான் பொன்மேனி. அப்போது கலப்பை எதன் மீதோ பட்டு ரத்தம் பீறிட்டது. இதைக்கண்ட பொன்மேனி மயங்கி விட்டான். அப்போது ஒரு அசரீரி,””பயப்படாதே. நான் அங்காள பரமேஸ்வரி. சிவனுடன் முதியவள் வடிவத்தில் வந்த நான், மண்புற்றாக மாறிவிட்டேன். ஏர் முனை என்னை குத்தியதால் ரத்தம் பீறிட்டது. வறுமையில் வாடிய நீ என்னை வேண்டியதால் ஈசனுடன் இங்கு வந்தேன். என்னை உழுது, நான் இங்கு இருப்பதை உலகிற்கு எடுத்துக்காட்டிய நீ, இனிமேல் எப்போதும் என்னையும் சிவனையும் பூஜிக்கும் பேறு பெற்றாய்,’ ‘என கூறியது. சிறிது நேரத்தில் அங்கிருந்த மண்ணெல்லாம் விலகி, புற்று தெரிந்தது. அதில் அம்மன் மல்லாந்து படுத்த நிலையில் இருந்தாள். பூங்காவனத்தில் தோன்றியவள் என்பதால் “பூங்காவனத்தம்மன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. புட்லூர் ஆலயத்துக்கு இன்னொரு தல வரலாறும் சொல்லப்படுகிறது. ஒரு தடவை சிவனும், பார்வதியும் மேல்மலை யனூருக்கு புட்லூர் வனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். நீண்ட தூரம் நடந்து களைப் படைந்ததால் வேப்ப மர நிழலில் கர்ப்பிணியாக இருந்த பார்வதி அமர்ந்தாள். தாகமாக இருப்பதால் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். உடனே சிவபெருமான் அருகில் இருந்த கூவம் நதியை தாண்டி சென்று புனிதநீர் எடுத்து வந்தார். அந்த சமயத்தில் பலத்த மழை பெய்து கூவம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சிவபெருமானால் நதியை கடந்து வர இயலவில்லை. எனவே வெள்ளம் குறையட்டும் என்று சிவன் காத்திருந்தார். இதற்கிடையே பசி-தாகத்துடன் இருந்த பார்வதி அப்படியே தரையில் விழுந்து விட்டாள். அவளை சுற்றி மண் குவிந்து புற்றாக வளர்ந்து விட்டது. இந்த நிலையில் அங்கு திரும்பி வந்த சிவபெருமான், புற்றுக்குள் பார்வதி அமர்ந்து விட்டதை அறிந்து அங்கேயே நின்று விட்டார். அதை பிரதிபலிக்கும் வகையில் புட்லூர் தலத்தில் சிவபெருமான், தாண்டவ ராயன் அம்சமாக சற்று கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை பார்க்கலாம்.

நம்பிக்கைகள்

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தடை இருப்பவர்கள், வீட்டில் பிரச்னை இருப்பவர்கள் புடவை முந்தானையிலிருந்து சிறிது கிழித்து கோயில் வெளியே மண்புற்று அருகே உள்ள வேப்பமரக்கிளையில் கட்டி விடுகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவுடன் வந்து அம்மனுக்கு பூஜை செய்து நன்றி கூறி செல்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

அம்மன் கால் நீட்டி, மல்லாந்த நிலையில் வாய்திறந்து பிரசவ காலத்தில் துடிக்கும் பெண்ணைப் போல காட்சியளிக்கிறாள். அம்மனுக்கு பின்புறம் கருவறையில் விநாயகர், தாண்டவராயன் என்ற பெயரில் நடராஜர், அங்காள பரமேஸ்வரி ஆகியோர் உள்ளனர். எதிரில் நந்தி வாகனம் உள்ளது. சன்னதிக்குள் நுழைந்தவுடன் உடலில் சிலிர்ப்பு ஏற்படுகிறது. கோயில் முழுவதும் மஞ்சள், குங்கும வாசனை தான். பெரும்பாலும் பெண்கள் அதிகமாக வருகிறார்கள். இவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற அம்மனின் பாதத்தில் எலுமிச்சம்பழம் வைத்து, தங்கள் புடவை முந்தானையை பாதத்தின் அருகே பிடித்து வேண்டுகின்றனர். எலுமிச்சம்பழம் பாதத்தில் இருந்து உருண்டு வந்து முந்தானையில் விழுந்தால் கேட்டது கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

திருவிழாக்கள்

சிவராத்திரி, மாசி மகத்தன்று மயான கொள்ளை, ஆடி வெள்ளி, அமாவாசை சிறப்பு பூஜை.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இராமாபுரம் (புட்லூர்),

அருகிலுள்ள இரயில் நிலையம்

புட்லூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top