பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோயில், சிவகங்கை

முகவரி :
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோயில்,
பட்டமங்கலம்,
சிவகங்கை மாவட்டம்,
தமிழ்நாடு – 630204
தொலைபேசி: + 91- 4577 – 262 023
இறைவன்:
தட்சிணாமூர்த்தி
இறைவி:
நவையடிக் காளி
அறிமுகம்:
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில் தெற்கே பிரசித்தி பெற்ற தட்சிணாமூர்த்தி கோயிலாகும். சிவபெருமான் மூலவர், உமாதேவி நவயாதி காளியாக அருள்பாலிக்கிறார். சிவகங்கையிலிருந்து 8 கிமீ தொலைவிலும், திருப்பத்தூருக்கு தெற்கே 9 கிமீ தொலைவிலும் இக்கோயில் உள்ளது. இது தமிழ்நாட்டின் முக்கிய குரு கோவில்களில் ஒன்றாகும். பிரதான கோவிலில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் பார்வதி தேவிக்கு தனி கோவில் உள்ளது. இங்கு சிவபெருமானின் 33வது திருவிளையாடல் (புனித நாடகம்) நடந்தது. சிவகங்கை மற்றும் திருப்பத்தூரில் இருந்து பட்டமங்கலம் 8 கி.மீ. தொலைவிலும், திருப்பத்தூரில் இருந்து 30 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் உள்ளன. அருகிலுள்ள ரயில் நிலையம் சிவகங்கையிலும், அருகிலுள்ள விமான நிலையம் மதுரையிலும் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
இறைவன் பிருங்கி, நந்தி தேவர் முதலான நால்வருக்கு சிவகதையினை கூறிக்கொண்டிருந்தார். அச்சமயம் கார்த்திகை பெண்களான நிதர்த்தனி, அபரகேந்தி, டேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய அறுவரும் இறைவன் முன் வீழ்ந்து வணங்கி எங்களுக்கும் அஷ்டமாசித்தியை உபதேசித்தருளும் என்று வேண்டினர். இறைவனுக்கு இதில் சற்று சஞ்சலம் தோன்றியது. அருகில் இருந்த உமையவள் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசிக்கும் படி சிவனிடம் சிபாரிசு செய்தார். உமையின் சிபாரிசை ஏற்று இறைவன் அஷ்டமாசித்தியை உபதேசிக்க துவங்கினார். ஆனால் கிடைத்த வாய்ப்பினை பெண்டிரோ சரிவர உபயோகிக்காமல் உமையவளையும் இறைவனையும் மறந்து, கவனக்குறைவாக செவிமடுத்தனர்.
இதைக்கண்ட இறைவன், “”நீங்கள் பட்டமங்கை என்னும் தலத்தில் கற்பாறைகளாக கடவது,” என்று சாபம் அளித்தார். தங்கள் தவறை உணர்ந்த நங்கையர் தங்களுக்கு விதிக்கப்பட்ட சாபத்தை நீக்கும்படி வேண்டினர். இறைவன் அவர்களை மன்னித்தருளினார்.
“”நீங்கள் கருங்கற்பாறைகளாய் பட்டமங்கை தலத்தில் ஆயிரம் ஆண்டுகள் கிடங்கள். அதன்பின் மதுரையில் இருந்து வந்து குருவடிவில் காட்சியளித்து உங்களுக்கு சாபவிமோசனம் அளிக்கிறேன்.” என்றார். அவ்வாறே இறைவன் மதுரையில் இருந்து எழுந்தருளி கார்த்திகைப் பெண்களுக்கு சாப விமோசனம் அளித்த தலமே பட்டமங்கை ஆகும். இது நாளைடைவில் மருவி பட்டமங்கலம் என அழைக்கப்பட்டு வருகிறது.
காளி வடிவில் உமை: இறைவன் அஷ்டமாசித்தியை நங்கையர்க்கு உபதேசிக்க யோசித்த போது அவர்களுக்கு பலமாக சிபாரிசு செய்ததற்காக உமையம்மையும் சபிக்கப்பட்டார். அவர் காளி கோலத்தில் நாவல் மரத்தடியில் நவையடிக் காளியாக அருள்பாலித்து வருகிறார். சாபவிமோசனம் வேண்டி நாவல் மரத்தடியில் நவையடிக் காளியாக கடும்தவம் செய்து அம்பிகை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அழகுசவுந்தரியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள சிவலிங்கத்தின் பின்புறமுள்ள உள்தலத்தில் கிழக்கு நோக்கி பார்த்தவாறே 5 தலை கொண்ட சண்முகநாதர், வள்ளி, தெய்வானை சகிதமாக எழுந்தருளியுள்ளார்.
நம்பிக்கைகள்:
தட்சிணாமூர்த்தி சன்னதியையும், அதன்பின் அமைந்துள்ள தெய்வ ஆலமரத்தையும் சேர்த்து சரியாக 108 சுற்றுக்கள் வலம் வந்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கி பெருவளம் ஏற்படும் என்பது நம்பிக்கை. விரும்பிய காரியம், வாழ்க்கையில் அமைதி, குழந்தை பேறு, ஆயுள் விருத்தி அடைய, செல்வம் பெருக இங்கு வந்து பிரதட்சணம் செய்தால் இறைவன் அருளால் அடையலாம் என்பது ஐதீகம்.
சிறப்பு அம்சங்கள்:
ஆலமரத்தை தல விருட்சமாகவும், மதுரை மீனாட்சி கோயிலைப் பொல பொற்றாமரை குளத்தையும் கொண்டது இந்த கோயில். தட்சிணாமூர்த்தி சன்னதி கோயிலின் வெளியே தனியாக கிழக்கு நோக்கி ஆலமரத்தடியில் அமைந்துள்ளது.
திருமால் பன்றி உருவமாகவும், பிரம்மன் அன்ன வடிவமாகவும் அதற்கு மேலாக மென்மை திருவடியுடன் வீராசனத்துடன் புன்னகை தவழும் சிவந்த திருவாய் மேனியாய், பிறைமதி, கொன்றை, வலது மேற்கரத்தில் அக்னியும், வலது கீழ்க்கரத்தில் ஞானமுத்திரையும், இடது மேற்கரத்தில் நாகமும், இடது கீழ்கரம் தொடையில் வைத்தும் தட்சிணாமூர்த்தி இங்கு காட்சியளிக்கிறார்.
தென்முகக்கடவுள் என்னும் தட்சிணாமூர்த்தி அனைத்து தலங்களிலுமே தெற்கு நோக்கியே காட்சியளிப்பார். யோகத்திற்கும், ஞானத்திற்கும் உரிய கடவுள் இவர். ஆலங்குடி, திருவாருர் போன்ற சில தலங்களில் மட்டுமே இவருக்கு தனி சன்னதி உண்டு. ஆனால், இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டுமே. சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் முப்பத்து மூன்றாவது திருவிளையாடல் நடந்த தலம் தான் பட்டமங்கை எனப்படும் பட்டமங்கலம். இத்தலத்து ஆலமரம் மிகவும் விசேஷமானது.
திருவிழாக்கள்:
திருவனந்தல், காலசந்தி, உச்சிக் காலம், சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்தசாமம் என்று ஆறுகால பூஜைகள், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கார்த்திகை தீபம், மாசி மகம், சிவராத்திரி, பிரதோஷம்.









காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பட்டமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிவகங்கை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை