Monday Dec 23, 2024

நடுப்பட்டி சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோயில், தர்மபுரி

முகவரி

அருள்மிகு சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோயில், நடுப்பட்டி, மொரப்பூர், தர்மபுரி மாவட்டம் – 635305

இறைவன்

இறைவன்: முனியப்பன்

அறிமுகம்

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட நடுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது சிங்காரதோப்பு முனியப்பன் கோயில். நடுப்பட்டி கிராமம் மொரப்பூரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோயிலில் முனீஸ்வரர் சுவாமி சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் கிராம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சித்ராபௌர்ணமி 1 நாள் மட்டும் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

புராண முக்கியத்துவம்

இந்த சிங்காரதோப்பு முனியப்பன் கோயில் உருவான விதம் பற்றிய செவிவழிக் கதை: இந்த கோயிலின் அருகாமையில், ஆங்கிலேயர்கள் காலத்தில் புகைவண்டிப் போக்குவரத்திற்காக தண்டவாளங்கள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கும்போது, இரவில் கட்டுமானப் பொருட்கள் அடிக்கடி திருட்டு போய்விடுமாம். அப்போது ஒரு பணியாளரின் கனவில் முனியப்பன் தோன்றி, இங்குள்ள தோப்பில்தான் நான் இருக்கிறேன். எனக்கு கோயில் எடுத்து வழிபட்டால் உங்கள் குறைகளைத் தீர்த்துவைப்பேன் என்று சொன்னாராம். இதைக் கேட்ட சக பணியாளர்கள் சேர்ந்து இங்கு முனியப்பன் சிலை அமைத்து வழிபட ஆரம்பித்தப் பிறகு களவு போவது நின்று விட்டதாகவும் பின்னர் ஆண்டுதோறும் அந்த பணியாளர்கள் ஒன்று சேர்ந்து இங்கு விழா எடுத்து வந்தனர் என்று சொல்லப்படுகிறது.

நம்பிக்கைகள்

தீவினைகள் போக்கும் தெய்வமாக எண்ணி, திருமணம், குழந்தைப்பேறு, தொழில்வளம் சிறக்கவும் இந்த முனியப்பனை வேண்டிக்கொண்டால், அப்படியே நிறைவேறும் என்பது சுற்றுப்பகுதி மக்களின் நம்பிக்கை. வேண்டியது நிறைவேறியவுடன், மக்கள் இங்குவந்து பொங்கலிட்டு, முனியப்பனுக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழி பலியிட்டு பூசைகள் செய்து வழிபட்டு செல்கின்றனர்.

திருவிழாக்கள்

செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. மாதாந்திர அமாவாசை நாட்கள் மற்றும் ஆடி 18ஆம் நாள், ஆயுதபூஜை, கார்த்திகை தீபம் முதலான நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இப்போது தினந்தோறுமே தருமபுரி, சேலம், வேலூர், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து முனியப்பனை தரிசித்து பூசைகள் செய்து வழிபடுகின்றனர். வார இறுதி நாட்களில் சுமார் பத்தாயிரம் பேர் வரை இந்தக் கோயிலுக்கு வருகின்றனர்.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நடுப்பட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

தர்மபுரி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top