திருவெள்ளறை புண்டரீகாட்சப்பெருமாள் திருக்கோயில், திருச்சி

முகவரி
அருள்மிகு புண்டரீகாட்சன் (தாமரைக்கண்ணன்) திருக்கோயில், திருவெள்ளறை-621 009 திருச்சி மாவட்டம். போன்: +91- 431-256 2243, 93451
இறைவன்
இறைவன்: புண்டரீகாட்சன் (செந்தாமரைகண்ணன்) இறைவி: செண்பகவல்லி
அறிமுகம்
கோயில் சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளதால் “வெள்ளறை’ என்ற பெயர் பெற்று மரியாதை நிமித்தமாக “திருவெள்ளறை’ ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள் புண்டரீகாட்சப்பெருமாள்’ ஆனார்.
புராண முக்கியத்துவம்
ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட் சுமியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருமாள், “”லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம்” என்கிறார். அதற்கு லட்சுமி, “”தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு” என்கிறாள்.இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல். இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள். அதற்கு பெருமாள், “”உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்” என்கிறார். ஒரு முறை இந்தியாவின் தென்பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் அழிக்க செல்லும் போது ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான். அதற்கு முனிவர்,””நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் உனக்கு காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய்” என்கிறார். அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சிகொடுக்கிறார். இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம்,”” நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூ பமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன்” என்கிறார் பெருமாள்.இதன் பின் அரசன் அனைவரிடமும் விடைபெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்கிறார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. அதற்கு மார்க்கண்டேயர்,””உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோயில் கட்டி திருப்தி பெறுக” என்கிறார். அரசனும் கோயில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம். நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநூறு குடும்பக்கணக்கு குறைவு படாமல் பார்த்து கொள்கிறேன் என்கிறார். பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார் செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
நம்பிக்கைகள்
குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்யப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள் உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 4 வது திவ்ய தேசம்
திருவிழாக்கள்
சித்திரை கோடை திருநாள் சித்ராபவுர்ணமி, கஜேந்திர மோட்சம், ஆவணி ஸ்ரீஜெயந்தி வீதியடி புறப்பாடு, பங்குனி திருவோணம் நட்சத்திரத்தில் பிரமோற்சவம்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவெள்ளறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி