திருவலிவம் மனத்துணைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
![](http://lightuptemples.com/wp-content/uploads/temple/profile_image/valivalam-sri-manathunai-nathar-temple-nagapattinam.jpg)
முகவரி
அருள்மிகு மனத்துணை நாதர் / இருதய கமலநாதேஸ்வரர் திருக்கோயில் வலிவலம் – 610 207, திருக்குவளை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4366 – 205 636
இறைவன்
இறைவன்: மனத்துணைநாதர் இறைவி: மாழையொண்கண்ணி (மத்யாயதாட்சி)
அறிமுகம்
வலிவலம் மனத்துணைநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 121ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கரிக்குருவி (வலியன்) பூசித்தது என்பது தொன்நம்பிக்கை.
புராண முக்கியத்துவம்
முன்னொரு காலத்தில் ஒழுக்க சீலனாக விளங்கிய ஒருவன், முன் வினைப்பயனால் சில பாவங்கள் செய்தான். இதனால் அவன் அடுத்த பிறவியில் கரிக்குருவியாக பிறக்க நேரிட்டது. மிகச்சிறியதான இப்பறவையை பெரிய பறவை ஒன்று தாக்கியதால் ரத்தம் வந்தது. ரத்த காயமடைந்த குருவி அருகிலிருந்த மரத்தில் தஞ்சம் அடைந்தது. அந்த மரத்தின் கீழ் முதிய சிவயோகி ஒருவர் அடியார்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அந்த உபதேசங்களை தற்செயலாக கரிக்குருவியும் கேட்டது. “”அன்பர்களே! சிவத்தலங்களில் சிறந்தது மதுரை. தீர்த்தங்களில் சிறந்தது அங்கிருக்கும் பொற்றாமரை. மூர்த்திகளில் சிறந்தவர் மதுரை சொக்கநாதர். மதுரைக்கு சமமான தலம் உலகில் வேறொன்றும் இல்லை. சோமசுந்தரக்கடவுள் தன்னை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் வேண்டும் வரங்களை அள்ளித்தருபவர்,”என்று யோகி சொல்லிக்கொடுத்ததை கரிக்குருவி கேட்டது. ஞானம் பெற்றது. பின்னர் தனது முன்பிறப்பையும், தான் ஏன் கரிக்குருவியாக பிறந்தோம் என்பதை அறிந்து மதுரையை நோக்கி பறந்தது. மதுரையை அடைந்த குருவி சோமசுந்தரர் கோயிலை வலம் வந்து பொற்றாமரைக்குளத்தில் மூழ்கியது. சிவனை உருகி வழிபட்டது. மூன்று நாட்கள் இவ்வாறு தொடர்ந்து செய்தது. குருவியின் பூஜைக்கு இறைவன் மகிழ்ந்தார். குருவியை அழைத்து அதற்கு “மிருத்தியுஞ்சய’ மந்திரத்தை உபதேசித்தார். கரிக்குருவியின் சிற்றறிவு நீங்கி பேரறிவு பெற்றது. மேலும் குருவி சிவனிடம்,””இறைவா! நான் உனது கருணையால் நான் ஞானம் பெற்றேன். இருந்தாலும் ஒரு குறை உள்ளது. மிகச்சிறிய பறவையாகிய நான் மற்ற பெரிய பறவைகளால் துன்புறுத்தப்படுகின்றேன். பார்ப்பவர்கள் கேலி செய்யும் நிலையில் உள்ளேன்,”என முறையிட்டது. அதற்கு சிவபெருமான்,””எல்லாப் பறவைகளை விட நீ வலிமை அடைவாய்,”என கூறினார். மீண்டும் குருவி,””சிவபெருமானே! எனக்கு மட்டுமின்றி, எனது மரபில் வரும் அனைவருக்கும் வலிமையை தந்தருள வேண்டும்,”என வேண்டியது. இறைவனும் அவ்வாறே அருளினார். இவ்வாறு வரம்பெற்ற கரிக்குருவி “வலியான்’ என்னும் பெயரையும் பெற்றது. இக்குருவியின் மரபில் தோன்றிய ஒரு குருவி இத்தலம் வந்து மனத்துணை நாதரை வழிபட்டு முக்தி அடைந்தது. இதனால் இத்தலத்திற்கு வலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது.
நம்பிக்கைகள்
இருதயம் சம்பந்தப்பட்ட நோய், மனக்கலக்கம், புத்திசுவாதீனம் இல்லாதவர்கள், மன சஞ்சலம் உள்ளவர்கள் வழிபாடு செய்வது சிறந்தது.
சிறப்பு அம்சங்கள்
இத்தல விநாயகர் வலம்புரி விநாயகராக அருள்பாலிக்கிறார். “பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர் கடி கண பதிவுர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே’ என்ற பாடலில் இந்த வலம்புரி விநாயகரை போற்றி சம்பந்தர் பாடியுள்ளார். சிவாலயங்களில் தேவாரப்பாடல் பாடும் ஓதுவார்கள், தேவாரப்பாடல் பாடும் முன் இத்திருப்பாடலை பாடிய பின்னரே அடுத்த தேவாரப்பாடல் பாட வேண்டும் என முறை செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து இத்தல விநாயகரின் சிறப்பை அறியலாம். கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயிலில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதர் இத்தல முருகனைகுறித்து திருப்புகழ் பாடியுள்ளார். இத்தலத்தைப்பற்றி சம்பந்தரும், அப்பரும் பாடிய பாடலை சுந்தரர் மிகைப்படுத்தி பாடியுள்ளார்.
திருவிழாக்கள்
ஆண்டு தோறும் சித்திரையில் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆவணி ஞாயிறு, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை.
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருத்துறைப்பூண்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருத்துறைப்பூண்டி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி