Sunday Dec 22, 2024

திருமுண்டீச்சரம் சிவலோகநாதர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம் (திருமுண்டீச்சரம்) – 607 203. உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம். போன்: +91- 4146-206 700.

இறைவன்

இறைவன்: சிவலோக நாதர், முண்டீச்சுரர், முடீசுவரர் இறைவி: சவுந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வாம்பிகை

அறிமுகம்

முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அப்பர் பாடல் பெற்ற தலமாகும். இறைவனின் காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் தென் பெண்ணை (மலட்டார்) கரையில் திருவெண்ணெய் நல்லூர் அருகில் 3 கி.மீ கிழக்கில் திருமுண்டீச்சரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. கடலூர்- திருக்கோவிலூர் திருவண்ணாமலை SH 68 நெடுஞ்சாலையில், விழுப்புரத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் சென்னை திருச்சிராப்பள்ளி NH 45 தேசிய நெடுஞ்சாலையில் மிக அருகில் இத்தலம் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் சிவலோகநாதசாமி என்றழைக்கப்படுகிறார். இறைவி சௌந்தர்யநாயகி ஆவார்.

புராண முக்கியத்துவம்

சிவனின் வாயில்காவலர்களான திண்டி, முண்டி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர். முண்டி வழிபட்டதால் இத்தலம் “முண்டீச்சரம்’ எனப்பட்டது. முடீச்சரம் என்பதே இத்தலத்தின் புராணபெயராக இருந்துள்ளது. இதுவே காலப்போக்கில் திருமுண்டீச்சரம் ஆனது என்பர். துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்ற மன்னன் வேட்டைக்கு வந்த போது இப்பகுதில் இருந்த குளத்தில் அதிசயமான தாமரை மலரைக்கண்டான். தன் சேவகர்களை அனுப்பி அந்த மலரை பறித்துவர கட்டளையிட்டான். அவர்களால் அந்த மலரை பறிக்க முடியவில்லை. மலர் குளத்தை சுற்றிவர ஆரம்பித்தது. எனவே மன்னனே நேரில் சென்று அந்த மலர் மீது அம்புவிட, குளம் முழுவதும் செந்நிறமாக மாறியது. இதைக்கண்ட மன்னன் மயங்கி விழுந்தான். அந்த மலரின் நடுவில் லிங்கம் இருப்பதைக்கண்டு, குளத்தின் கரையிலேயே கோயில் கட்டி லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். லிங்கத்தின் மீது மன்னன் விட்ட அம்பின் அடையாளம் இன்றும் உள்ளது. இதனால் இறைவன் “முடீஸ்வரர்’ எனப்படுகிறார். இப்பெயரே கல்வெட்டில் “மவுலி கிராமம்’ என அழைக்கப்படுகிறது. மவுலி என்றால் “முடி’ அல்லது கிரீடம் என்று பொருள். காலப்போக்கில் மக்கள் மவுலியை விட்டு கிராமம் என அழைக்கத்தொடங்கினார்கள்.

நம்பிக்கைகள்

நடனத்திலும், இசையிலும் ஆர்வமுள்ளவர்கள் இத்தல அம்மனை வழிபாடு செய்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

வீரபாண்டியன் என்ற மன்னனுக்காக சிவன் திருநீற்றுப்பை (பொக்களம்) அளித்துள்ளார். இதனால் சிவனுக்கு “பொக்களம் கொடுத்த நாயனார்’ என்ற பெயரும், ஆற்றின் கரையில் கோயில் இருப்பதால் “ஆற்றுத்தளி மகாதேவர்’ என்ற பெயரும் உண்டு.

திருவிழாக்கள்

சித்திரை வருடப்பிறப்பு, ஆனிதிருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தர்சஷ்டி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், தனுர்மாதம், திருவாதிரை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் மற்றும் பிரதோஷ வழிபாடும் கொண்டாடப்படுகிறது.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top