Friday Dec 27, 2024

திருமுட்டம்

திருமுட்டம் என்று பெயர் வந்ததால் பழமையான இலக்கியங்கள் எதுவும் இவ்வூருக்கில்லை, சிறப்பான மாலியக்கோயில்களில் (வைணவ தலம்) ஒன்றாக இவ்வூர் இருந்தும் ஆழ்வார் திருமொழிகளோ  நாயன்மார் திருபதிகங்களோ இவ்வூரினை பற்றி பேசவில்லை.

பதினைந்தாம் நூற்றாண்டு காளமேக புலவரின் தனிபாடலும் அருணகிரியாரின் திருபுகழுமே இவ்வூரின் தொன்மையை விளக்குகின்றன. ஓர் பெருந்தொகை பாடலும் “முட்டத்து பன்றி முளரி திருப்பாதம்”  என்றும் காளமேக புலவர் “திருமுட்டத்தூரிலே கண்டேனொரு புதுமை” என்றும் “திருமுட்டத்து மேவு பெருமானே” என அருணகிரியாரும் போற்றும் போது முட்டத்து பெயர் அறிகின்றோம்.

இவ்வூரில் சோழன் வீரராஜேந்திரன் காலம் முதல் (கி.பி 1070) வரை கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அக்கல்வெட்டுக்களில் குலோத்துங்கனின் முப்பத்து இரண்டாம் ஆட்சியாண்டு வரை இவ்வூர்  இருங்கோங்ளப்பாடி நாட்டு விளந்தையூர் கூற்றத்து திருமுட்டமென்றும் 44-ம் ஆட்சி ஆண்டு முதல் வடகரை விருதராஜ பயங்கர வளநாட்டு விளந்தையூர் கூற்றத்து திருமுட்டம் என்றும் அழைக்கப்பட்டது.  

குலோத்துங்கன் காலத்தில் திருமுட்டத்து சிவ – வைணவ கோயில், நில சிக்கலை தீர்க்க ஊர் இரண்டாக பிரிக்கப்பட்டு சுங்கம் தவிர்த்த சோழ நல்லூர், ஆதிவராக நல்லுர் என பெயரிடப்பட்டது. இருந்த  போதிலும் இரு பகுதிகளும் திருமுட்டம் என்ற பெயரிலேயே வழங்கப்பட்டது.

திருமுட்டத்தில் இரண்டு பெருங்கோயில்கள் உள்ளன. ஒன்று திருமுட்டமுடைய நாயனார் எனும் சிவாலயம் மற்றொன்று திருமுட்டத்து ஆழ்வார் எனும் வைணவ ஆலயம். இவையன்றி ஊரின் புறத்தே  பாழடைந்த சில கோயில்களும் உள்ளன.

குலோத்துங்கனது கல்வெட்டின் படி கி.பி 1102-க்கு முன்னரே இவ்வூரில் பிடாரி என்றழைக்கப்படும் காடு கிழாள் கோயில், திரு நாராயண ஈசுவரம் என்ற சிவன் கோயிலும் இருந்தததாக தெரிகிறது.  இவற்றில் திரு நாராயண் ஈசுவரமுடையார் கோயில் கி.பி.16-ம் நூற்றாண்டு வரை வழிபாட்டில் இருந்ததற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன தற்போது அழிந்துவிட்டது.

 சிவன்கோயிலை திருமுட்டமுடைய நாயனார் கோயில் என்றும் திருமுட்டமுடைய மகாதேவர் கோயில் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. வடமொழி தாக்கத்தால் நித்தீச்வரர் என வடமொழி  கறைபடிந்து விட்டது. திருமுட்டமுடைய நாயனார் கோயில் வீரராஜேந்திரனின் ஆறாவது ஆட்சி ஆண்டிற்கு முன்னரே இக்கோயில் கற்றளியாக இருந்துள்ளது. இது சிவன் கோயிலாக இருந்த போதிலும்  இவூர் வைணவ கோயில் பற்றி கல்வெட்டுக்களில் பொறித்துள்ளமையால் இக்கோயில் வைணவ தலத்தினும் முற்பட்டது என அறியலாம் சிவன் கோயில் கட்டட அமைதியும், உண்ணாழிகையும்,  மண்டபமும் இக்கோயில் பத்தாம் நூற்றாண்டினை சார்ந்தது என தெரிவிக்கின்றன. ஆயிரம் ஆண்டு பழமையே இக்கோயிலை தொல்லியல் துறை காப்பில் இடம் பெற செய்துள்ளது.

இக்கோயிலே தொன்மையானது என்ற போதிலும் திருமுட்டம் என்றால் மக்களின் நினைவுக்கு வருவது வைணவ கோயிலே ஆகும். ஆழ்வார் பாடல்கள் ஏதும் இல்லாத போதிலும் வைணவ திருத்தலமாக  போற்றப்படுவது இரு கோயில்கள் அவற்றுள் இது இரண்டாவது ஆகும்.

மண்ணுலகை காக்க கடவுள் பன்றி உருவெடுத்து நின்றது இவ்வூரே. இங்கு பன்றியாக உரு எடுத்துள்ள பெருமாளை திருமுட்டத்து ஆழ்வார் என்றும் வராக தேவர் என்றும் திருபன்றி ஆழ்வார் என  கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஆதி வராகர், பூவராகர் என்ற பெயர்களே மக்கள் மனதில் நிற்கின்றன. 1070-ம் ஆண்டின் கல்வெட்டில் வைணவ திருக்கோயிலுக்கு கொடையளித்த தகவல்  திருமுட்டம் சிவன் கோயிலில் கிடைத்துள்ளது. எனில் இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டு வரை முன்னர் இருந்திருக்க வேண்டும். பதின்மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டொன்றில் திருமுட்டமுடைய  ஆழ்வார் கோயிலுக்கும், திருபள்ளி எழுச்சிக்கும், திருக்கணாமடை(உணவு)க்கும் கொடை அளித்ததை குறிப்பிடுகிறது.

தற்போது பெருமாள் கோயிலை சுற்றி உள்ள சிதிலமடைந்த செங்கல், மதில் பழம் கோயிலின் எச்சமாக இருத்தல் வேண்டும். விஜய நகர நாயக்கர்களின் திருப்பதிகளே இக்கோயிலில் மிகவும்  குறிப்பிடததக்கன. இன்றுள்ள கோயிலும் கோபுரமும் திருமதிலும் பிற முற்றங்களும் விஜயநகரத்தவர் காலத்தவையே, மால் வழிபாட்டினை வளமாக பரப்பிய பெரும் பணி விஜயநகர நாயக்கர்களையே  சாரும்.

 தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கனின் தீராத பிளவை நோயை தீர்த்து வைத்தவர் இவ்வராக தேவரே என நம்பிக்கை கொண்டு அளவில்லாத திருப்பணிகளை செய்தவன். இக்கோயிலின் அம்மன்  ஆலயம் எழுப்பியதும் இவனே. இக்கோயிலுக்காக ஆறு ஊர்களையும் மேற்கில் உள்ள அகரங்களையும் தோற்றுவித்தான், மங்கம்மாள் குளமும் (மங்கான் குளம்) இவன் வெட்டியதே. இறைவனுக்கு  பொன் அணிகலன் சாமரம், தீவட்டிகள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றையும் அளித்தான்.

மேலும் மணவாள மாமுனி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார் போன்ற செப்பு திருமேனிகளையும் செய்தளித்தான். நின்றுபோன திருவிழாக்களை ஆரம்பித்து புது பொலிவூட்டினான். கோயில் பணிக்கு  பனிரெண்டு இசை கலைஞர்களையும், 360 கோயில் பணியாளர்களையும் வீடமைத்து கொடுத்து பணியமர்த்தினான்.

 இக்கோயிலில் குறிப்பிடத்தக்க இடத்தினை பெறுவது பூவராகர் கோயிலில் உள்ள பதினாறு கால் மண்டபம். இம்மண்டபம் தஞ்சை நாயக்கர் கலையின் மணி முடி என புகழப்படுகிறது. இதுவும்  அச்சுதப்பனின் திருப்பணியே ஆகும். அடி முதல் உச்சி வரை மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டது. நாற்புறமும் குதிரை வீரர்களின் சிற்பங்களும் நடுவிலுள்ள தூண்களில் அச்சுதப்ப நாயக்கன்  அவன் மனைவி மூர்த்தியம்மாளின் முழு உருவ படிமமும் மிக நேர்த்தியாக வடிவமைக்கபட்டுள்ளது. அவர்களுடன், மேலும் சில படிமங்களும் உள்ளன அவை அவன் தம்பியரான அனந்த்தப்பன்,  கொண்டப்பன், கோவிந்தப்பன் என கூறப்படுகிறது. இம்மண்டபமும் இதன் பின் உள்ள கொடிமரமும் அச்சுதப்பனின் திருப்பணிகளாகும். இதனை உள்ளடக்கி கட்டப்பெற்ற மகா மண்டபம் சோழர்  திருப்பணிகளாகும்.

 திரு முட்டத்து ஆழ்வார் திருமேனி முன்பு வெள்ளை கல்லால் ஆனதாக இருந்துள்ளது. இச்சிலை மைசூர் கிருஷ்ணராஜ உடையாரால் எடுத்து செல்லப்பட்டு கர்நாடகாவில் உள்ளது. ஆழ்வார் வெள்ளை  கல்லால் ஆனதால் வெள்ளை பன்றி என அழைக்கப்பட்டார், பதின்மூன்றாம் நூற்றாண்டில் வெண் பன்றி நாழி என்றொரு முகத்தல் அளவை இருந்துள்ளதை கல்வெட்டு குறிப்பு உறுதி செய்கிறது.

 கல்வெட்டுக்களில் காணப்படும் மற்றொரு செய்தி திருமுட்டத்திலிருந்து பெண்ணாகடத்திற்கு ஒரு பெரு வழி ஏற்படுத்தபட்டிருந்தது. அது முன்னர் பாகம் ஒன்றில் சொல்லப்பட்ட பராந்தகன் துறை  (பெலந்துறை) அணைகட்டில் இருந்து அக்கால்வாய் கரையிலேயே பெண்ணாகடம் செல்ல வழி ஏற்படுத்தி இருக்கவேண்டும். பார்க்க செயற்கை கோள் படம் அந்த அணைகட்டில் இருந்து 6 கி.மீ தூரமே  உள்ளது பெண்ணாகடம்.

 இஸ்லாமிய தில்லி பாதுஷா இக்கோயிலுக்கு கிபி 1765 கீழ்புளியங்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள ஐந்து ஊர்களை கொடை அளித்துள்ளமை சிறப்பு. கிள்ளை தைகால் குடும்பத்தினர் 150 ஏக்கர்  நன்செய் நிலமும் 5௦ புன்செய் நிலத்தினையும் கொடையாக அளித்துள்ளனர். ஆண்டு தோறும் மாசி மகத்திற்கு பெருமாள் கடல் நீராட வரும்போது கிள்ளை மசூதியில் மண்டகப்படி சிறப்பாக  நடத்தபெறும்.

கிள்ளை இஸ்லாமியர் பெயரில் பூராசாயுபு (பூவராக சாயுபு) என பெயர் சூட்டியிருப்பது மதம் கடந்த இறைஅன்பின் வெளிப்பாடு. வெள்ளையரான தென்னார்க்காடு ஆட்சியர் Mr.Hide கிபி 1826-ல் தங்கத்தில்  கல் வைத்த இரண்டு சங்கிலிகளை அளித்துள்ளார் மேலும் பொன்கவசம் போர்த்திய வீதிஉலா கருட வாகனத்தையும் அளித்துள்ளார்.

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top