Thursday Dec 26, 2024

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில், இராமநாதபுரம்

முகவரி

அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி – 623 532 இராமநாதபுரம் மாவட்டம். போன்: +91-4567- 254 527; +91-94866 94035

இறைவன்

இறைவன்: ஆதிஜெகன்னாதன் (தெய்வச்சிலையார்) இறைவி: கல்யாணவள்ளி

அறிமுகம்

திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் (அல்லது ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் கோயில்) தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதான திருக்கோயில். இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் சேதுக்கரை உள்ளது. ராமர் அவதாரம் புரிய அருள் புரிந்த பெருமாளும், சயனராமரும் அமைந்துள்ளனர். தல விருட்சம்:அரசமரம் தீர்த்தம்:ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்

புராண முக்கியத்துவம்

72 சதுர் யுகங்களுக்கு முன்பு புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய, தற்போது கோயில் அமைந்துள்ள இடமான திருப்புல்லாணி காட்டில் பெருமாளைவேண்டி கடும் தவம் செய்து வந்தனர். இவர்களின் தவத்தினால் அகம் மகிழ்ந்த பெருமாள் அரச மரமாக இவர்கள் முன்பு காட்சியளித்தார். அதைக் கண்டு மகரிஷிகள் மகிழ்ந்தாலும் பெருமாளிடம் உண்மையான சொரூபத்தில் காட்சியளிக்கும்படி வேண்டினர். உடனே மகரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று ஆதிஜெகநாத பெருமாளாக காட்சியளித்தார். அந்த திருத்தலமே தற்போது திருப்புல்லாணியில் உள்ள இத்திருத்தலம். பிற்காலத்தில் தாயார் பத்மாசனிக்கு தனியாக சன்னதி எழுப்பப்பட்டது.தசரதன் இங்குள்ள பெருமாளின் புத்திர பாக்கிய மூலமந்திர உபதேசத்தை பெற்று, ஸ்ரீ ராம பிரானை மகனாகப் பெற்றெடுத்தார்.சயன ராமன்: சீதையை மீட்க இலங்கை சென்ற ராமர், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர். பிள்ளை வரம் பெற: குழந்தை பாக்கியத்திற்காக தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். யாககுண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாயாசத்தைமனைவியருக்கு கொடுத்தார். அதை பருகிய தசரத பத்தினியருக்கு குழந்தைகள் (ராம சகோதரர்கள்) பிறந்தனர். இதன் அடிப்படையில், ராமர் வழிபட்ட இத்தலத்தில் அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு கோயிலுக்கு வந்து அங்கு தரப்படும் நாகர் சிலைக்கு ஒரு நாள் முழுவதும் கணவனும், மனைவியும் உபவாசகம் இருந்து ஜலக்கிரீடை செய்ய வேண்டும். பின்பு அன்றிரவு கோயிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் முறைப்படியாக நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்து விட்டு, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.புத்திர பாக்கியத்தின் மூல மந்திரத்தை தசரதனுக்கு பெருமாள் உபதேசம் செய்த இடம். தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் இன்றும் கோயிலில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக இருக்கும் (பெருமாள் காட்சி தந்தாக கூறப்படுகிற) அரசமரம்

நம்பிக்கைகள்

பிள்ளை வரம் கேட்டல்தான் இத்தலத்தின் மிகச் சிறப்பு பெற்ற பிரார்த்தனை. சேது தீர்த்தத்தில் நீராடினால் நமது முன்ஜென்ம பாவங்கள் விலகும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். திருமணத்தடை உள்ளவர்கள் உற்சவர் கல்யாண ஜெகந்நாதரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.தாயாருக்கு புடவை சாத்துதல், தவிர பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை செய்யலாம். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். பிரசாதம் செய்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். வசதிபடைத்தவர்கள் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி அளிக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

ஆதிஜெகந்நாதருக்கு பங்குனி யிலும், ராமருக்கு சித்திரையிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இவ்விழாக்களில் ஜெகந்நாதர், ராமர் இருவரும் கருட வாகனங்களில் எழுந்தருளுவர். ஜெகந்நாதர் பங்குனி உத்திரத்தன்றும், சித்ராபவுர்ண மியன்று ராமபிரானும் தேரில் எழுந்தருளுவர்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 96 வது திவ்ய தேசம்.ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம் . பல நூற்றாண்டுகளாக இருக்கும் (பெருமாள் காட்சி தந்தாக கூறப்படுகிற) அரசமரம் .

திருவிழாக்கள்

பிரம்மோற்சவத் திருவிழா – பங்குனி மாதம் ராமர் ஜெயந்தி திருவிழா – சித்திரை மாதம். இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, பொங்கல், தீபாவளி மற்றும் வாரத்தின் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கோயிலில் கூட்டம் பெருமளவில் இருக்கும்.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்புல்லாணி

அருகிலுள்ள இரயில் நிலையம்

ராமநாதபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top