Thursday Dec 26, 2024

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில்

முகவரி

அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் திருநெல்வேலி PIN – 627001, தொலைபேசி: +91-462-2339910

இறைவன்

இறைவன்: நெல்லையப்பர் இறைவி: காந்திமதிஅம்மை

அறிமுகம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் (Nellaiappar Temple) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்த பெருமான் திருநெல்வேலி என்ற பெயருடன் “திருநெல்வேலிப் பதிகம்” பாடியிருப்பதால் அதற்கு முன்பே “திருநெல்வேலி” என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் உள்ளன. தல விருட்சம்: மூங்கில் தீர்த்தம்: பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாரித் தீர்த்தம், சிந்துபூந்துறை

புராண முக்கியத்துவம்

பாண்டிய நாட்டை முழுவதும் கண்ட ராமபாண்டியன் ஆட்சி செய்யும்போது, ஒரு முறை கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அக் கால கட்டத்தில் வேணுவனமாகக் காட்சியளித்த திருநெல்வேலியில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக விளங்கினவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பயன்படுத்தி வந்தார். ஒரு நாள் இவ்வாறு பெற்ற நெல்லை சன்னதி முன் உலரப் போட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்துவிடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் இருந்தும் நெல்லை கொண்டு செல்லாதபடி இருப்பதையும், நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார்.மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சர்யப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காணவிரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் அசந்தார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார். நெல்வேலி தற்போது திருநெல்வேலி என அழைக்கப்படுகிறது. நெல்வேலி நாதர் நாளடைவில் நெல்லையப்பர் என அழைக்கப்படலானார். இப்படிப் புகழ் பெற்ற இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள அம்பாளம் வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். அதுபோல் விநாயகர் பொல்லாப் பிள்ளையார் என்றும், முருகன் ஆறுமுகப் பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார். கோயிலின் மூலக்கதை முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வதறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம். அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

நம்பிக்கைகள்

கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒற்றுமையுடன் இருப்பர் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தியைக் காணலாம். அடுத்துள்ள கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். மூலவரைக் காண்பதற்கு முன் சுமார் 9 அடி உயரம் உள்ள மிகப்பெரிய விநாயகரைத் தரிசிக்கலாம். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல கோஷ்ட மூர்த்திகளாக தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோரையும், மற்றும் சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் ஆகியோரை நாம் காணலாம். கோவிந்தப் பெருமாள் சந்நிதியும் சிவனுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்டலக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன. மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியதாகவும் அகலமாகவும் அமைந்துள்ளது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்ல வழி உள்ளது. மீண்டும் அம்மா மண்டபம் வழியாகத் திரும்பி வந்தால், மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இல்லையெனில் அம்மன் சந்நிதியில் இருந்து அப்படியே வெளியேறவும வழி உண்டு. மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி உள்ளது. ஒரே கல்லில் ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக நாயினார் என்னும் திருநாமத்துடன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம் திருப்புகழ் வைப்புத் தலங்களில் ஒன்றாகும். கோயிலின் உள்ளே பொற்றாமரைக் குளம் உள்ளது. நாற்புறமும் நல்ல படிகளுடனும், நடுவில் நீராழி மண்டபத்துடனும் இந்த தெப்பக்குளம் உள்ளது. இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம் போன்ற மண்டபங்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன.

திருவிழாக்கள்

சித்திரை – வசந்த்மஹோற்சவம் (பதினாறு தினங்கள்), வைகாசி – விசாகத்திருநாள் (ஆனி பெருந்தேர் திருவிழா), ஆனி – பிரம்மோற்சவம் (ஆனி பெருந்தேர் திருவிழா), ஆடி – பூரத்திருநாள் (பத்து தினங்கள்), ஆவணி – மூலத்திருநாள் (பதினொரு தினங்கள்), புரட்டாசி – நவராத்திரிவிழா (பதினைந்து தினங்கள் லட்சார்ச்சனையுடன்), ஐப்பசி – திருக்கல்யாணம்உற்சவம் (15 தினங்கள்), கார்த்திகை – கார்த்திகைதீபம், சோமவாரத் திருவிழா (ஒரு நாள்), மார்கழி – திருவாதிரைவிழா (பத்து தினங்கள்), தை – பூசத்திருவிழா (பத்து தினங்கள்), மாசி – மகாசிவராத்திரி (ஒரு நாள்), பங்குனி – உத்திரத்திருநாள் (பத்து தினங்கள்).

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

திருநெல்வேலி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top