Sunday Dec 22, 2024

திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் திருக்கோயில், காஞ்சீபுரம்

முகவரி

அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில்,திருக்கச்சூர்- 603 204, காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 – 2746 4325,2746 3514,2723 3384, 93811 86389

இறைவன்

இறைவன்: கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் இறைவி: அஞ்சனாட்சியம்பாள்

அறிமுகம்

காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காஞ்சிபுரம் ஆகும். இந்த மாவட்டம் 4393.7 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளது. பட்டு கைநெசவு சேலைகளுக்கு புகழ் பெற்ற மாவட்டம். தமிழ்நாட்டின் வடகிழக்கு கடற்கரையோரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் கோயில் நகரம் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். நிர்வாக காரணங்களுக்காக மாவட்டம் 2 வருவாய் கோட்டங்கள், 5 வட்டங்களுடன் 633 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளது. 633 கிராம பஞ்சாயத்துகளாகவும் 5 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 2019இல் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து புதிய செங்கல்பட்டு மாவட்டம் நிறுவப்பட்டப் பின்னர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வட்டம், உத்திரமேரூர் வட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வாலாஜாபாத் வட்டம் மற்றும் குன்றத்தூர் வட்டம் என 5 வருவாய் வட்டங்களுடன் செயல்படுகிறது.

புராண முக்கியத்துவம்

கச்சபேஸ்வரர் திருக்கோயில்: தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது. கலங்கிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்ட அவர் கச்சப (ஆமை) வடிவமெடுத்து மந்திரமலையை தாங்க எண்ணம் கொண்டார். அதற்காக அவர் ஆமை வடிவில் இத்தலத்திற்கு வந்து தீர்த்தம் உண்டாக்கி அதில் நீராடி, சிவனை வேண்டி மலையை தாங்கும் ஆற்றல் பெற்றார். எனவே இத்தலத்து சிவனுக்கு, கச்சபேஸ்வரர் என்ற பெயரும், தலத்திற்கு திருக்கச்சூர் என்ற பெயரும் ஏற்பட்டது. கச்சபேஸ்வரர் திருக்கோயில் அம்பாள் அஞ்சனாட்சி தெற்கு நோக்கியபடி தனிச்சன்னதியில் அருளுகிறாள். அஞ்சனம் என்றால் கண் என்று பொருள். இவள் மக்களை தன் கண்போல காப்பதால் இப்பெயர் பெற்றாளாம். அழகு மிகுந்தவளாக இருப்பதால் இவளுக்கு சுந்தரவல்லி என்றொரு பெயரும் உண்டு. இவளது சன்னதிக்கு முன் உள்ள மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் உள்ளது. இங்கு பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பம் சிறப்பதாக நம்பிக்கை.விஷ்ணுவுக்கு அருள் செய்த சிவன் அவருக்காக இத்தலத்தில், தியாகராஜராக அஜபா நடனம் ஆடிக் காட்டியுள்ளார். எனவே, இத்தலம் உபயவிட தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உற்சவராக ஒரு சிறு தொட்டிக்குள் அமர்ந்த கோலத்தில் இருக்கும் தியாகராஜருக்கே திருவிழாக்கள் நடப்பதும், அவரது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுவதும் சிறப்பு. அருணகிரியார் தனது திருப்புகழில் இத்தலத்து முருகனை குறித்து பாடியுள்ளார். தலவிருட்சம் கல்லால மரம் என்பதால் இக்கோயிலுக்கு ஆலக்கோயில் என்றொரு பெயரும் உள்ளது. நவக்கிரக சன்னதி கிடையாது. மருந்தீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு ஒருசமயம் இந்திரன், தான் பெற்ற சாபத்தின் பலனால் நோய் உண்டாகி அவதிப்பட்டான். தேவலோக மருத்துவர்களான அசுவினி தேவர்கள் அவனுக்கு எவ்வளவோ மருத்துவம் செய்தும் நோயை குணப்படுத்த முடியவில்லை. எனவே நோயை குணப்படுத்தும் மூலிகையைத்தேடி தேவர்கள் பூலோகம் வந்தனர். பல இடங்களில் தேடியும் மருந்து கிடைக்கவில்லை. அவர்கள் நாரதரிடம் ஆலோசனை கேட்க, அவர் மருந்துமலை எனும் இம்மலையில் குடி கொண்டிருக்கும் சிவனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால் அவர்கள் அருளால் மருந்து கிடைக்கும் என்று கூறினார். அதன்படி இங்கு வந்த அசுவினி தேவர்கள் சுவாமியை வழிபட்டனர். அவர்களுக்கு இரங்கிய சிவன் மருந்து இருக்கும் இடத்தை காட்டி அருள்புரிந்தார். தேவர்கள் பலா, அதிபலா எனும் இரண்டு மூலிகைகளை எடுத்துக் கொண்டு தேவலோகம் சென்று இந்திரனின் நோயை குணப்படுத்தினர். இந்திரனுக்கு மருந்து கொடுத்தவர் என்பதால் சிவனுக்கு மருந்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.மருந்தீஸ்வரர் திருக்கோயில் அம்மனின் திருநாமம் இருள்நீக்கிய அம்பாள்.சிவன், அசுவினி தேவர்களிடம் மருந்து இருந்த இடத்தை காட்டிய போதிலும், அவர்களால் எது சரியான மருந்து என கண்டுபிடிக்க முடியவில்லை. குழப்பத்தில் தவித்த அவர்களின் மனநிலையை கண்டு இரக்கம் கொண்ட அம்பாள், மூலிகையின் மீது ஒளியை பரப்பி அதனை சூழ்ந்திருந்த இருளை அகற்றி அருள்புரிந்தாள். இதனால் அம்பாளை இருள்நீக்கியம்பாள் என்றழைக்கின்றனர். பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் அடுத்தடுத்து இருக்கிறது. சண்டிகேஸ்வரர், பிரம்ம சண்டிகேஸ்வரராக நான்கு முகங்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு திங்கட்கிழமைகளில் தேன் அபிஷேகங்கள் செய்து வழிபடுவது சிறப்பு சிறிய மலையின் மீது அமையப்பெற்ற கோயில் இது. சுந்தரர் இத்தலத்து சிவனை, மாலை மதியே! மலைமேல் மருந்தே!’ என பாடியுள்ளார். கோயில் கொடிமரத்தின் அருகில் சிறிய மண் குழி ஒன்று உள்ளது. இம்மண்ணை மருந்து என்கிறார்கள். இதனை உட்கொள்ள நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் உள்ள மருந்துதீர்த்தக் கிணறு சற்று தூரம் நடந்து சென்று தீர்த்தம் எடுக்கும்படி கரையுடன் இருக்கிறது. மலை அடிவாரத்தில் தாலமூல விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். கலைஞர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் புகழ் பெற்று சிறக்கலாம் என்பது நம்பிக்கை.

நம்பிக்கைகள்

சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் தீராத நோய்கள், துன்பங்கள் நீங்கும், அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் ஆணவம், கிரக தோஷங்கள் நீங்கும், கண்நோய்கள் தீரும், குறைவிலாத வாழ்வு கிடைக்கும் என்பதும், மருந்தான மண்ணை விவசாய நிலங்களில் இட்டால் பயிர்கள் செழித்து வளரும் என்பதும் நம்பிக்கை. நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரங்கள் சாத்தி அபிஷேகங்கள் செய்து வழிபடலாம்.

சிறப்பு அம்சங்கள்

சுவாமி சுயம்புவாக மேற்கு பார்த்தபடி இருக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 259 வது தேவாரத்தலம் ஆகும்.காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள திருக்கச்சூரில் மலைமேல் ஒரு சிவனும், அடிவாரத்தில் ஒரு சிவனும் இருக்கின்றனர். சுந்தரர் இவ்விரு சிவனையும் சேர்த்து பதிகம் பாடியுள்ளார்.தலவிநாயகர்: மகாகணபதி, தாலமூல விநாயகர். மூலவரின் விமானம் கஜபிருஷ்டம் அமைப்பில் உள்ளது.

திருவிழாக்கள்

கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரையில் பிரம்மோற்ஸவம், சித்ரா பவுர்ணமி. மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் மாசியில் பிரம்மோற்ஸவம், பவுர்ணமியில் கிரிவலம், சோமவாரங்களில் படிபூஜை, திருக்கார்த்திகை.

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்கச்சூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top