Sunday Dec 22, 2024

திரிசூலம் திரிசூலநாத சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு திரிசூலநாத சுவாமி திருக்கோயில், திரிசூலம், சென்னை – 600 043. காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 – 2264 2600, 9444914713

இறைவன்

இறைவன்: திரிசூலநாதர் (திரிச்சுரமுடையார்) இறைவி: திரிபுரசுந்தரி

அறிமுகம்

திரிசூலம் திரிசூலநாதர் கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் திரிசூலம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் திருச்சுரம் என்றழைக்கப்பட்டது. இக்கோயிலின் மூலவராக திரிசூலநாதர் உள்ளார். இங்குள்ள இறைவி திரிபுரசுந்தரி ஆவார். கோயிலின் மரம் மரமல்லி ஆகும். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகும். கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கஜபிருஷ்டம் எனப்படுகிறது. இத்தல விநாயகர் நாக யக்ஞோபவீத கணபதி எனப்படுகிறார். பிரகாரத்தில் விநாயகர், சீனிவாசப்பெருமாள் காட்சி தருகின்றனர். வைகுண்ட ஏகாதசியின்போது சீனிவாசர் முத்தங்கி சேவையில் காட்சி தருவார். தனிச்சன்னதியிலுள்ள மார்க்கண்டேஸ்வரர், “சோடச லிங்க’ (பதினாறு பட்டை லிங்கம்) வடிவில் காட்சி தருகிறார். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் முருகன், ஐயப்பன், ஆதிசங்கரர் சன்னதிகளும் உள்ளன.

புராண முக்கியத்துவம்

பிரம்மா தனது படைத்தல் பணி சிறப்பாக நடப்பதற்காக, லிங்க பிரதிஷ்டை செய்து நான்கு வேதங்களையும் சுற்றிலும் வைத்து பூஜை செய்தார். சிவபெருமானும் அவ்வாறே அவருக்கு அருள் செய்தார். லிங்கத்தைச் சுற்றியிருந்த நான்கு வேதங்களும் மலைகளாக மாறின. மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை, “சுரம்’ என்பர். எனவே சிவன், “திருச்சுரமுடைய நாயனார்’ என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் “திரிசூலநாதர்’ ஆனார்.

நம்பிக்கைகள்

கல்வியில் சிறக்க திரிசூலநாதர், வீராசன தட்சிணாமூர்த்தியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இங்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகம் செய்கின்றனர்

சிறப்பு அம்சங்கள்

இரண்டு அம்பிகையர்: கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்த சன்னதிக்குள், சிவன் அருகில் சொர்ணாம்பிகை இருக்கிறாள். முன்பு பிரதான அம்பிகையாக இருந்த இவள், ஒரு அர்ச்சகரின் கனவில் தோன்றி சொன்னதின் அடிப்படையில், சிவனின் கருவறைக்குள்ளேயே பிரதிஷ்டை செய்யப்பட்டாள். பிரதான அம்பிகை திரிபுரசுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். நவராத்திரி விழாவின்போது, விசேஷ ஹோமம், 18 சுமங்கலிகள், 18 குழந்தைகளை வைத்து, சுமங்கலி, கன்யா பூஜைகள் நடத்தப்படும். தை, ஆடி வெள்ளி நாட்களில் “பூப்பாவாடை’ என்னும் வைபவமும் நடக்கிறது. நாகதோஷம் நீக்கும் விநாயகர்: சிவன் சன்னதி கோஷ்டத்தில், “வீராசன தட்சிணாமூர்த்தி’, இடது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். பொதுவாக தட்சிணாமூர்த்திக்கு கீழேயுள்ள சீடர்கள், வணங்கியபடிதான் இருப்பர். ஆனால், இங்கு சீடர்கள் இருவர், சின்முத்திரை காட்டியபடி இருக்கின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். சிவன் கோஷ்டத்திலுள்ள விநாயகர், “நாக யக்ஞோபவீத கணபதி’ என்றழைக்கப்படுகிறார். உடலிலுள்ள ஆறு ஆதாரங்களில், மூலாதார சக்தியான குண்டலினி, நாக வடிவில் இருக்கிறது. இவரது சிலை சுவரைக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். சுய ரூப சரபேஸ்வரர்: கோயிலைச் சுற்றியுள்ள நான்கு மலைகளிலும், கார்த்திகை தீபத்திருவிழாவின்போது தீபமேற்றுகின்றனர். நரசிம்மரின், உக்கிரம் தணிக்க வந்த சரபேஸ்வரர், தன் சுயரூபத்துடன் ஒரு தூணில் காட்சி தருகிறார். சரபேஸ்வரருக்கு “சரபம்’ என்ற பறவையின் இறக்கை இருக்கும். ஆனால், இங்கே இறக்கை இல்லை. இரண்டு முகங்கள், இரு கைகளில் மான், மழு ஏந்தியுள்ளார். மற்ற இரு கைகளாலும் நரசிம்மரை பிடித்த கோலத்தில் உள்ளார். இத்தகைய அமைப்பில் சரபேஸ்வரரைக் காண்பது அபூர்வம். பயம் நீங்க, அமைதியான வாழ்க்கை அமைய இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

திருவிழாக்கள்

திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திரிசூலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திரிசூலம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

0
Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top