Sunday Dec 22, 2024

தண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

தண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் திருக்கோயில் தண்டந்தோட்டம், வழி முருக்கங்குடி, கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 612202

இறைவன்

இறைவன்: நடனபுரீஸ்வரர் இறைவி: சிவகாம சுந்தரி

அறிமுகம்

தமிழ் நாடு கும்பகோணம் – காரைக்கால் சாலையில் திருநாகேஸ்வரம் தாண்டி, தண்டந்தோட்டம் 4 கி. மீ. என்று கைகாட்டி உள்ள இடத்தில் திரும்பி சென்றால் நடுவக்கரை – புண்டரீகபுரம் – முருக்கங்குடி – ஆகிய ஊர்களைக் கடந்து சற்றுத் தொலைவு சென்றால் “தண்டந்தோட்டம்” ஊரை அடையலாம். இங்குள்ள இறைவன் நடனபுரீசுவரர் ஆவார். இறைவி சிவகாமசுந்தரி ஆவார். முன் மண்டபத்தில் நேரில் இறைவி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் சித்தி விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. இத்தலம் சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும்

புராண முக்கியத்துவம்

நடனபுரீஸ்வரர் திருக்கோவில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல் பெற்ற சோழ நாட்டுத் தலம் ஆகும். கயிலாயத்தில் சிவன், பார்வதி திருக்கல்யாணம் நடைபெற்ற போது திருக்கல்யாணத்தை காண தேவர்கள், முனிவர்கள் அனைவரும் வந்தனர். இதனால் வடதிசை உயர்ந்து தென்திசை தாழ்ந்தது. பூமி தேவியின் பாரத்தை சமம் செய்வதற்காக சிவன் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். சிவன், பார்வதி திருக்கல்யாணத்தை காண முடியாமல் மனம் வருந்திய அகத்தியருக்கு அவர் விரும்பும் இடங்களில் எல்லாம் கல்யாண கோலத்தில் காட்சி தருவதாக அருள் பாலித்தார். அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள நடனபுரீஸ்வரர் திருக்கோவிலில் அகத்திய முனிவரின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் கார்த்தியாயனி சமேத கல்யாணசுந்தரராய் அகத்தியருக்கு காட்சித்தந்து அருளினார். அகத்தியருக்குக் காட்சி கொடுத்த இறைவன் அவருக்கு இரண்டு வரங்களையும் கொடுத்தார். அதன்படி இத்தலத்திற்கு வந்த நடனபுரீஸ்வரரை வழிபட்டால் திருமணம் தடைபடுகிறவர்களுக்கு திருமணத் தடைகள் விலகும் என்றும், தங்கள் வாழ்விலுள்ள சகல தடைகளும் தீக்கி கயிலாயத்தை தரிசித்தால் ஏற்படும் பலன் கிட்டும் என்றும் அருள் புரிந்தார். ஆகையில் இத்தலம் திருமணத் தடை நீங்கும் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

நம்பிக்கைகள்

இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ராசி மண்டல குரு எனப் போற்றப்படுகிறார். இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்கினால், 12 ராசிக்காரர்களின் சகல தோஷங்களையும் நீக்கி நற்பலன்களை வழங்குவார் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

நடனபுரீஸ்வரர் திருக்கோவில் தெற்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்து உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே முன் மண்டபம் உள்ளது. இங்கு தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும், இடப்புறம் கிழக்கு நோக்கிய சுவாமி சந்நிதியும் உள்ளது. நடனபுரீஸ்வரர் உயர்ந்த திருமேனி எழிலுடன் லிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிகிறார். பிராகாரத்தில் வலம் வரும் போது கோஷ்டத்தில் 12 ராசி மண்டலங்களுக்கு மேலே பீடமிட்டு அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். மேற்குப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஷண்முகர், துர்க்கை ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. பல்லவர் காலத்து 11 செப்பேடுகள் தண்டந்தோட்டத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இந்த ஊர் பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் சிறப்புடன் திகழ்ந்தது என்பதை இந்தச் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. இந்தச் செப்பேடுகள், 8-ம் நூற்றாண்டில் காஞ்சியை ஆண்டு வந்த இரண்டாவது நந்திவர்மன் பற்றிக் கூறுகிறது. காஞ்சீபுரத்திலுள்ள ஶ்ரீவைகுண்டப் பெருமாள் கோவிலைக் கட்டியவனை இரண்டாவது நந்திவர்மன் என்றும் அறிய முடிகிறது.

காலம்

8 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தண்டந்தோட்டம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top