Sunday Jan 05, 2025

சேங்கனூர் சோமநாத சுவாமி சிவன்கோயில், திருவாரூர்

முகவரி

சேங்கனூர் சோமநாத சுவாமி சிவன்கோயில், சேங்கனூர்ம் நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610107

இறைவன்

இறைவன்: சோமநாத சுவாமி இறைவி – சிவகாமசுந்தரி

அறிமுகம்

அச்சுதமங்கலத்தினை அடுத்துள்ள சேங்கனூர். அச்சுதமங்கலம்- நாச்சியார்கோயில் சாலையில் இரண்டு கிமீ தூரத்தில் சேங்கனூர் பேருந்து நிறுத்தம் உள்ளது, இங்கிருந்து தெற்கில் முடிகொண்டான் ஆற்றினை கடந்து அரை கிமி தூரம் சென்றால் சேங்கனூர் ஊரை அடையலாம். செங்கண்ணன் ஊர் என சிவனது பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம். பெரியதொரு குளத்தின் தென்கரையில் கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி, இறைவி – சிவகாமசுந்தரி. நடுத்தர அளவுடைய சிவாலயம் ராஜகோபுரம் இல்லை. முன்புறம் பார்க்க அகலவாட்டில் உள்ள மண்டபம் போலத்தோன்றும். முன் மண்டபம் திண்ணையுடன் கூடிய வௌவால் தொற்றா மண்டபமாக உள்ளது. சோமநாத சுவாமி கோயிலின் நுழைவாயிலில் மேலே பெரிய பலகை, சிவகாம சுந்தரி சமேத சோமநாத சுவாமி ஆலயம் – சர்வ தோஷப் பரிகாரத் தலம்’ என்று உள்ளது.. உள்ளே இறைவன் கருவறை, அர்த்தமண்டபம் என உள்ளது. பிரகாரத்தில் சன்னதிகள் ஏதுமில்லை. அடுத்து, மகாமண்டபம். இங்கே மூலவரை நோக்கிய நிலையில் சூரியன், சனீஸ்வரர், பைரவர் ஆகியோர் எழுந்தருளியிருக்கிறார்கள். பிராகார வலம் வரும்போது, கோட்டங்களில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை உள்ளனர். பிரகார சிற்றாலயங்கள் ஏதுமில்லை, மகாவிஷ்ணு, சப்தமாதர் காவலர் பெருஞ்சாத்தன் சண்டேசர் சிலைகள் வெளியில் கிடக்கின்றன. இதே பிராகாரத்தில் பழங்காலக் கிணறு ஒன்றைக் காணலாம். கோயில் காலை மாலை என இருவேளை பூஜை நடக்கிறது. குருக்கள் வீடு கோயில் அருகிலேயே உள்ளது. கோயில் விமானம்

புராண முக்கியத்துவம்

சனீஸ்வரர் மூலவரின் இடது புறமாக, அர்த்த மண்டபத்தின் ஓரமாக சந்நதி கொண்டிருக்கும் முருகப் பெருமானை நோக்கியபடி இருப்பது, அபூர்வமான, வித்தியாசமான காட்சி. ‘இங்கு வந்து முருகனை வணங்குவோருக்கு தோஷம் உண்டாக்க மாட்டேன்’ என்று சனீஸ்வரன் முருகப் பெருமானுக்கு சத்திய வாக்களித்த தலமாம் இது. அருகில் நாகரும் நர்த்தன கணபதியும் உள்ளனர். மகாமண்டப நுழைவாயிலின் இருபுறமும் விநாயகரும், பாலதண்டாயுதபாணியும் கொலுவிருக்கிறார்கள். அருகில் தெற்கு நோக்கிய நடராஜர் சன்னதி இருந்துள்ளது. மண்டபத்தின் வலதுபுறம், தெற்கு நோக்கிய நிலையில் அம்பாள் சிவகாம சுந்தரி சந்நதி. அம்பிகை, நின்ற திருக்கோலத்தில், இருகரங்களில் மலர் ஏந்தி, மேலும் இருகரங்களில் அபய, வரத முத்திரைகள் தாங்கி, அருட்கோலம் கொண்டுள்ளார். கருவறையில் கிழக்கு நோக்கிய சோமநாத சுவாமி லிங்க மூர்த்தியாக அருட்காட்சி அருள்கிறார். செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம், சகலபாப நிவர்த்தித் தலம் என்று இந்தக் கோயிலை குறிப்பிடுகிறார்கள். அதனாலேயே இக்கோயில், சர்வதோஷ பரிகாரத்தலமென்று பெயர் பெற்றிருக்கிறது. மேலும், ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, ஜாதகத்தில் தொல்லை தரும் சனி ஆதிக்கம் என்று அனைத்துவகையான சனிதோஷங்களையும் நீக்கும் சக்தி மிகுந்த ஆலயம் இது. இங்கு சனீஸ்வரரையும், முருகப் பெருமானையும் வழிபட்டு, சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்து தோஷ நிவர்த்தி பெறலாம். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அச்சுதமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top