Sunday Dec 22, 2024

சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி

அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில், சுருட்டப்பள்ளி, சித்தூர்-517 589, ஆந்திரப்பிரதேசம். போன்: +91- 8576-278 599.

இறைவன்

இறைவன்: பள்ளிகொண்ட சிவன், வால்மீகிஸ்வரர் இறைவி: மரகதாம்பிகை

அறிமுகம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ளது சுருட்டப்பள்ளி. இங்கு பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி திருக்கோவில் இருக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றது இந்தத் திருத்தலம். பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பெரும்பான்மையான மூர்த்திகள் குடும்ப சமேதராக காட்சி தருவது, இந்தக் கோவிலின் முக்கிய அம்சமாகும். இந்த ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், சர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். பரந்தாமனை போலவே பரமேஸ்வரன் பள்ளிகொண்ட ஒரே கோவில் இது என்பது சிறப்பாகும். சிவன் பள்ளி கொண்ட நிலையும், அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக இருப்பதும் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன் – சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் – மரகதாம்பிகை, விநாயகர் – சித்தி, புத்தி, சாஸ்தா – பூரணை, புஷ்கலை, குபேரன் – கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் உள்ளனர். மூலவர் வால்மீகிஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இவருக்கு எதிரில் ராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்கு பதில் சங்கநிதியும், பதுமநிதியும் உள்ளனர். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும், கற்பகவிருட்சமும் உள்ளனர். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.

புராண முக்கியத்துவம்

துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகஸ்பதி கூறினார். திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர். சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார். அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும், “”சிவபெருமானே! இந்த விஷத்தை வெளியில் வீசினாலும், தாங்களே உண்டாலும் அனைத்து ஜீவ ராசிகளும் அழியும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள்”என மன்றாடினார். உடனே சிவன் “விஷாபகரண மூர்த்தி’யாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த லோகமாதா பார்வதி, சிவனை தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கண்டத்தில் கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. அவர் “நீலகண்டன்’ ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் “அமுதாம்பிகை’ ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணத்திலும், ஸ்கந்த புராணத்திலும் கூறப்படுகிறது. பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்தார். இந்த அருட்காட்சியை சுருட்டப்பள்ளியில் பார்க்கலாம். சுவாமி பள்ளி கொண்டிருப்பதால், “பள்ளி கொண்டீஸ்வரர்’ எனப்படுகிறார். பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நம்பிக்கைகள்

பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான். இவ்வுலகை காப்பதற்காக அமிர்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

மூலவரை வால்மீகிஸ்வரர் என்கிறார்கள். இவருக்கு எதிரில் ராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்கு பதில் சங்கநிதியும், பதுமநிதியும் உள்ளனர். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும், கற்பகவிருட்சமும் உள்ளது.

திருவிழாக்கள்

இந்த கோவிலில் பிரதோஷ கால வழிபாடு பிரசித்தி பெற்றது. மேலும் திருவாதிரை, மகா சிவராத்திரி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு வருடப் பிறப்பு நாட்கள், நவராத்திரி தினங்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சுருட்டப்பள்ளி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சித்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருப்பதி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top