Sunday Dec 22, 2024

சிறுதாவூர் ஸ்ரீ பூதகிரீஸ்வரர் திருக்கோயில், செங்கல்பட்டு

முகவரி :

சிறுதாவூர் ஸ்ரீ பூதகிரீஸ்வரர் திருக்கோயில்,

சிறுதாவூர், செங்கல்பட்டு மாவட்டம்,

தமிழ்நாடு 603105

இறைவன்:

ஸ்ரீ பூதகிரீஸ்வரர்

இறைவி:

ஸ்ரீஆரணவல்லி

அறிமுகம்:

 பூத கணங்கள் சிவனாரைப் போற்றி வழிபட்ட இந்தக் கோயில், சென்னை – பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூருக்கு அருகிலுள்ள `சிறுதாவூா்’ என்னும் தலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் ஈசன் `ஸ்ரீபூதீஸ்வரா்’ என்றும் இப்பகுதி மக்களால் பக்தியோடு பூஜிக்கப் படுகிறார்.

புராண முக்கியத்துவம் :

      `பைரவ க்ஷேத்திரம் என்று பக்தியோடு பூஜிக்கப்படும் காசி நகரில் `அந்தா்வேதி’ என்னும் இடத்தில் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தாள் பிரம்மதேவன். இந்த யாகத்திற்காக நான்மறைகளிலும் கரைகண்ட வேதியா்கள் வேண்டுமெனத் திருக்கயிலை நாதனிடம் முறையிட்டார்.

திருக்கயிலையில் தம் சேவகா்களான பூத கணங்களை யாகத்திற்கு அனுப்பிவைக்கத் திருவுளம் கனிந்தார் ஈசன். பிரம்மதேவனின் யாக வேள்வியில் வேதங்களை முழங்கிக் கொண்டிருந்த அந்தணா்களாக மாறிய பூத கணங்களுக்கு, தில்லையம்பதியில் ஈசன் புரிந்த ஆனந்தத் திருநடனத்தைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

தாருகாவனத்தில் ஈசன் திருநடனம் புரிந்த காட்சியை நினைக்கும்போதெல்லாம் தன் மனம் பூரிப்பு அடைவதாகப் பாம்பணையில் துயிலும் மாலவனே ஆதிசேஷனிடம் நெகிழ்ச்சியுற்றார் எனும்போது, பூதகணங்களுக்கு அதைக் காணும் ஆவல் ஏற்பட்டதில் வியப்பு ஏதுமில்லை. பூதகணங்களின் முடிவால் யாகம் தடைப்பட்டு வேள்வியின் பலன் கிடைக்காமல் போகுமோ என்று கலக்கமுற்ற பிரம்மதேவன், செய்வதறியாது திகைத்து ஈசனிடம் சென்று முறையிட்டார். பிரம்மனின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தார் ஈசன்.


அக்கணமே, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த யாகத் தீயில்… ஒளி வெள்ளமாக. குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயுமாக, நடராஜப் பெருமானாகத் தோன்றி பூத கணங்களுக்குத் திருக்காட்சியளித்து அருளினார். ஈசனின் தரிசனத்தால் மகிழ்ந்த பூதகணங்கள், வேள்வியைத் தடையின்றி முறையாக நடத்தி முடித்தன. அதனால் அகம் மகிழ்ந்த பிரம்மதேவன் ,`வைஸ்வதேவம்’ எனும் விருந்து உபசாரத்தை விமர்சையாக நடத்தி, பூதகணங்களை வழியனுப்பிவைத்தார்.

பிரம்மதேவன் நடத்திய இந்த யாகத்தில் அந்தணா்களாகக் கலந்துகொண்ட திருக்கயிலை பூதகணங்களே தில்லைச் சிற்றம்பலத்தில் ஈசனுக்கு நித்ய பூஜைகள் செய்ய பிரம்மதேவனால் அனுப்பிவைக்கப்பட்டனா். இவா்களே தில்லைத் திருத்தலத்தில் ஆடல்வல்லானுக்கு அன்புப் பணிவிடைகள் செய்யும் `தீட்சிதா்கள்’ எனப் புராணங்கள் தெரிவிக்கின்றன.

பூதகணங்கள் பிரதிஷ்டை செய்த பூதகிரீஸ்வரப் பெருமான்!

பிரம்ம தேவனின் யாகத்தை முடித்த பூத கணங்கள் தில்லைக்குத் திரும்பும் வழியில் சிவபூஜை மேற்கொள்ள உகந்ததாய் ஓரிடத்தைத் தேர்வு செய்து, அங்கே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தன. இங்ஙனம் பூதகணங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதால் அந்த ஈசனுக்கு `ஸ்ரீபூதகிரீஸ்வரா்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.

நம்பிக்கைகள்:

      சிறுதாவூா் தலத்தில் அருள்பாலிக்கும் ஈசனை வழிபாடு செய்யும் அன்பா்களுக்குச் சகல ஐஸ்வா்யங்களும் பெருகி, பொன் – பொருள் யாவும் கிடைக்கும்; ஒளி மயமான எதிர்காலம் அமையும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

தீராத நோய்களினால் அவதிப்படும் அன்பா்களும் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானத்துக்கு தோஷம் ஏற்பட்டுள்ள அன்பா்களும், இங்கு பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு ஈசனையும் நந்தி எம்பெருமானையும் மனமுருகி வழிபட, அவா்கள் நோய் நீங்கி நிவாரணம் பெறுவார்கள் என்பதை இத்தலத்தின் அன்பா்கள் பக்தியோடு தெரிவிக்கின்றனா்

சிறப்பு அம்சங்கள்:

பொன், பொருள், ஐஸ்வர்யம் ஸித்திக்கும்!

`க்ரோதா’ என்பவா் தனது மகளான `பூதி’ என்பவரை `புலஹா்’ என்ற மகரிஷிக்கு மணமுடித்துக் கொடுத்தார். இவருக்குப் பிறந்த குழந்தைகளே ஈசனுக்குச் சேவை செய்யும் பெறற்கரிய பேறு பெற்ற பூத கணங்களாகும். பிரம்மத்தை அறிந்த இந்தப் பூதகணங்கள் தாங்கள் விரும்பும் வடிவினை எடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவை.

புனிதமும் மங்களமும் நிறைந்த பூதகணங்கள் `ஆத்ம யோகிகள்’ என்பதனால் யாக வேள்விகளில் பெரும் பங்கு வகிப்பவை. வாயுபுராணமும் மகா பாரதத்தின் சல்ய பா்வமும் இந்தப் பூத கணங்களின் சிறப்புகளை எடுத்துக் கூறுகின்றன.

பூதியின் புதல்வா்களில் முக்கியமான வா்களான கூஷ்மாண்டன், கும்போதரன் மற்றும் கும்பாஸ்யன் ஆகிய மூவரும் சிவ பக்தியில் திளைத்தவா்கள். பூதியின் புதல்வா்களான இவா்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாலும் சிறுதாவூா் திருத்தல ஈசனுக்கு `ஸ்ரீபூதீஸ்வரா்’ என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறுவர். `பூதி’ என்ற சொல்லுக்கு செல்வம், ஐஸ்வா்யம், ஒளி பெறச் செய்தல், பொன் ஆகிய பொருள் விளக்கங்களும் உண்டு. மேலும் `பூதீசுவரம்’ என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் சிறுதாவூா், அக்காலத்தில் `பொன்புரம்’ என்றும் வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சபூதத் தலங்களை தரிசித்த பலன் உண்டு!

மாணிக்கவாசகப் பெருமான், பஞ்ச பூதங்களிலும் நிறைந்திருக்கின்ற ஈசனின் தன்மையை `பாரினில் ஐந்தாய் பரந்தாய் போற்றி’ என்று பாடிப் பரவியுள்ளாா்.

பஞ்சபூதங்களில் எல்லாம் ஈசன் நீக்கமற நிறைந்திருப்பதாலும் ஈசன் `பூதகிரீஸ்வரா்’ என்று வணங்கப்படுகிறார். ஆகவே, ஈசன் அருள்பாலிக்கும் பஞ்சபூதத் தலங்களில் வழிபாடு செய்யும் அன்பா்களுக்கு என்ன பலன் கிடைக்குமோ, அத்தகைய அரிய பலன்களை சிறுதாவூா் ஸ்ரீபூதகிரீஸ்வரா் திருத்தலத்தில் வழிபாடு செய்வதால் பெறமுடியும்.

பால்வண்ண நாதராய் அருள்கிறார்…

சிறுதாவூா் தலத்தில், தூவெண் மதிசூடி வெள்ளை விடையேறும் பெருமானின் லிங்கத் திருமேனியின் ருத்ரபாகம் முழுவதும் வெண்மை நிறமாக காணப்படுவது, மிகவும் அரிதான திருக் காட்சியாகும். பால்வண்ண நாதராகக் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தில் திருக்காட்சி தரும் எம்பெருமானின் தரிசனம் மெய் சிலிர்க்கச் செய்கிறது. `கஜபிருஷ்டம்’ எனப்படும் தூங்கானை மாட வடிவில் ஈசனின் கருவறை அமைந்துள்ளது.

இத்தலத்தின் அம்பிகை `ஸ்ரீஆரணவல்லி’ என்ற திருநாமத்துடன் பூஜிக்கப்படுகிறாள். `ஆரணம்’ என்றால் `வேதம்’ என்று பொருள். வேத நாயகனும் வேதியா் நாயகனும் ஆன ஈசனின் தேவி என்பதால் அம்பிகைக்கு `ஆரணவல்லி’ (வேதவல்லி) என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.

தென்முக தரிசனம் தரும் நந்தி எம்பெருமான்!

சிறுதாவூா் ஸ்ரீபூதகிரீஸ்வரா் திருக் கோயிலில் அருள்பாலிக்கும் நந்தி எம்பெருமான், தன் திருமுகத்தை மட்டும் தெற்கு முகமாகத் திருப்பி தரிசனம் தருவது, வேறு எங்கும் காண்பதற்கரிய திருக்காட்சி ஆகும். இது தொடா்பாக இத்தல வரலாறு ஒரு நிகழ்வினை தெரிவிக்கிறது. உடல் நலிவால் பாதிக்கப்பட்ட சிவபக்தா் ஒருவா், தன் ஆயுள் காலம் முடியும் தறுவாயில் இத்தல ஈசனை தரிசிக்க வந்துள்ளார்.

தரிசன்னம் முடிந்து வெளியே வரும் நேரத்தில் அந்த பக்தரின் உயிரைப் பறிக்கலாம் என எமதா்மன் தன் தூதா்களுடன் சந்நிதிக்கு வெளியில் காத்திருந்தார். அப்போது எமதர்மனின் பக்கம் திரும்பிய நந்தி அவரிடம்,

“தா்ம ராஜனே! உயிர் பிரியும் தறுவாயில் ஒரு ஜீவன் சிவநாமத்தை உச்சரித்து விட்டால், அந்த ஜீவன் எமபுரம் வருவது தவிர்க்கப்பட்டு சிவபுரம் சென்று விடும் என்பது உமக்குத் தெரியாதா?” என்று கோபமுடன் கேட்டார். அவ்வளவுதான்… எமதா்மராஜன் வந்த வழியே திரும்பிச் சென்றதாக இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கிறது. இக்கதையை ஒட்டியே இக்கோயிலில் தெற்கு நோக்கி திருமுகத்தைத் திருப்பிய நிலையில் காட்சி தருகிறாராம் நந்தி.

கல்வெட்டுகளில் சிறுதாவூா்:

பல்லவ மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் கற்றளியாக நிா்மாணிக்கப்பட்ட இத்திருத் தலத்தில், பழைமையைப் பறைசாற்றும் 16 கல்வெட்டுகள் உள்ளன. `நரசிங்க சதுா்வேதி மங்கலத்து ஸ்ரீபூதீஸ்வரா்’ என கல்வெட்டுகளில் இத்தல இறைவனின் திருநாமம் குறிப்பிடப்பட்டுள்ளது.


சோழ மன்னா் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி .991), சிறுதாவூா் பூதீசுவரமுடையார் கோயிலில் ஒரு நுந்தா விளக்கு எரிக்க, சோழ மண்டலத்துக் கிளியூா் நாட்டுக் காரிமங்கல முடையான் 90 ஆடுகள் அளித்ததைக் கல்வெட்டு தெரிவிக்கின்றது.

`ஜயங் கொண்ட சோழ மண்டலத்து ஆமூா்க் கோட்டத்து ஆமூா் நாட்டுச் சிறுதாவூரான நரசிங்க சதுா்வேதி மங்கலத்துப் பூதீசுவரமுடையார்க்குச் சிறுகாலைச்சந்தி போனகத்துக்கு குலோத்துங்க சோழ தகடூா் நாடாழ்வான் நிலம் கொடை…’ எனும் இந்த கல்வெட்டு வரிகள், இரண்டாம் குலோத்துங்கனின் 4-வது ஆட்சியாண்டில் அளிக்கப் பட்ட கொடை பற்றி விவரிக்கிறது. மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திலும் இந்த ஸ்வாமியின் உச்சிகால பூஜைக்காக நிலம் அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மட்டுமன்றி, தனியார் பலரும் இக்கோயிலுக்கு அளித்த நிவந்தங்கள், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் ஆகியோர் காலத்து நிவந்தங்கள், ராஜநாராயண சம்புவராயன், தைச்சூலன், மல்லப்பநாயக்கன் ஆகியோரின் திருப்பணிகள் ஆகியவற்றையும் இக்கோயில் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. விஜயநகரப் பேரரசா்களின் ஆட்சிக் காலத்தில் இத்திருக்கோயிலின் மகாமண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்:

சிவ சம்பந்தமான அனைத்து விழாக்களும் குறிப்பாக மாசி மகம் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

காலம்

8-9 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிறுதாவூா்

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கல்பட்டு

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top