Friday Dec 27, 2024

சித்தர்கள் சிவன் ஆலயம்!

சேலம் அருகே அரூர் மெயின் ரோட்டில் சுக்கம்பட்டி என்னும் கிராமத்தில் உதயதேவர் மலை உள்ளது. இந்த மலையை தேவகிரி என்றும் அழைப்பார்கள். இந்த மலை சிறிய குன்று போல் அமைந்திருக்கும். இதன் மீது பல நூறு ஆண்டு காலமாக மேற்கே நோக்கி அருள்புரியும் உதயதேவரீஸ்வரி சமேத உதய தேவரீஸ்வரர் திருத்தலம் உள்ளது. திருமணிமுத்தாறு ஆறாக பாயத்தொடங்கும் இடத்தில் அமைந்துள்ள முதல் சிவாலயம் என்ற சிறப்புக்குரியது இந்த ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள மூலவரின் மீது தினமும் மாலை வேளையில் சூரிய ஒளி விழுவது அரியக் காட்சியாகும்.

தல வரலாறு

இந்தக் கோவிலின் தலவரலாறு குறித்த ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றாலும், திப்பு சுல்தான் காலத்திற்கு முன்பாக இந்தக் கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று அறியப்படுகிறது. குறிப்பாக, 1131–ம் ஆண்டு விக்கிரம சோழன் காலத்தில் பஞ்சந்தாங்கி திருச்சிற்றம்பல வேலைக்காரர் என்பவரால், கோவிலில் கதவு நிலை கொடையாக அளிக்க பெற்றதாக கல்வெட்டு தகவல் உள்ளது. மேலும், இந்தக் கோவில் 7.9.1818–ல் புதுப்பிக்கப்பட்டதற்கான கல்வெட்டு அடையாளங்களும் காணப்படுகின்றன. மற்றபடி ஆலய வரலாறு குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இந்த கோவிலில் நடைபெற்றுள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.ஆரம்ப காலத்தில் இங்கு உதயதேவரீஸ்வரர், விநாயகர், சண்டிகேஸ்வரர், நந்தி சிலைகள் மட்டுமே இருந்தன. அதே நேரத்தில் ஊருக்குள் மாரியம்மன் திருத்தலம் ஒன்றும் இருந்தது.

உதய தேவரீஸ்வரர் ஆலயத்தில் பவுர்ணமி இரவு பூஜை வழிபாடு நடைபெற்று வந்த நிலையில், பிரதோ‌ஷ வழிபாடு தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் நினைத்தனர். எனவே சிவனுக்கு வலதுபுறமாக கிழக்கு நோக்கி உதயதேவரீஸ்வரி அம்மன் சிலையை அமைத்தார்கள். பொதுவாக அம்மன் சன்னிதி உள்ள சிவன் ஆலயத்தில் தான் பிரதோ‌ஷ வழிபாடு நடத்த வேண்டும் என்ற ஐதீகம் தான், உதயதேவரீஸ்வரி அம்மன் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க செய்தது என்றால் மிகையில்லை.

இந்தக் கோவிலில் பவுர்ணமி அன்று இரவு, சிறப்பு பூஜை நடை பெறும். அப்போது விபூதி, மாங்காய் மற்றும் தாழம்பூ வாசம் வீசுவதை அங்கு வந்த பக்தர்கள் இன்றளவும் உணர்ந்து வருகிறார்கள். இந்த தெய்வீக மணம் எப்படி வருகிறது என்பதற்கு விடை தெரியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் அருள் வந்து குறி சொன்னார். அதில் இந்த ஆலயத்தின் பின்பகுதியில் பாலாம்பிகை அம்மன் வீற்றிருப்பதாக கூறினார்.

அவர் குறிப்பிட்ட இடத்தில் அம்மனை வைத்து வழிபட தொடங்கிய போது தான், காலாங்கி சித்தர் உள்பட 3 சித்தர்கள் அந்தக் கோவிலுக்கு சிவனை வழிபட வருவதாகவும், ஆனால் அவர்களுக்கு கோவில் பிரசாதம் படைக்கப்படாமல், பசியுடன் அங்கிருந்து செல்வதாகவும் சாமியின் அருள் வாக்கு கிடைத்தது. 3 சித்தர்கள் வருகையின் காரண மாகத்தான், தாழம்பூ, விபூதி, மாங்காய் மணம் அங்கு கமழ்வதாக பக்தர்களிடம் நம்பிக்கை அதிகரித்தது.

பிறகு அம்மன் அருள்வாக்கு படி, பாலாம்பிகை அம்மனுக்கு முன்பாக உள்ள 2 சிறிய பாறைகளுக்கு நடுவே கல் உருவில் தோன்றிய காலாங்கி சித்தரை கண்டறிந்து, அவருக்கும் சிறப்பு வழிபாடு செய்யத் தொடங்கினர்.

இங்குள்ள விநாயகர் சன்னிதியில் தான் பழங்கால கல்வெட்டு அமையபெற்றுள்ளதாக கோவில் பூசாரி கூறுகிறார். இந்த ஆலயத்தில் பிரதோ‌ஷம் மற்றும் பவுர்ணமி பூஜைகள், கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பவுர்ணமி அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் நடைபெறும் பவுர்ணமி பூஜையில் தொடர்ச்சியாக 3 பவுர்ணமியில் கலந்து கொண்டால், திருமணத் தடை, நவக்கிரக தோ‌ஷம் நீங்கும். குழந்தை பாக்கியம், நினைத்த காரியம் கைகூடும்.

உதயதேவரீஸ்வரி அம்மன் எதிரில் உள்ள வேப்ப மரத்தில், பிரார்த்தனை செய்து மஞ்சள் கட்டி வந்தால் மூன்று மாதத்தில் மேற்படி காரியங்கள் கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தக் கோவிலின் தல விருட்சம் மஞ்சள் அரளி ஆகும்.

இந்த தலத்தில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் இருந்து கொடிமரம் கொண்டு வரப்பட்டு நடப்பட்டதாக பக்தர்கள் கூறுகின்றனர். சுமார் 500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த தலத்திற்கு, குன்றின் மேல் பாதி தூரம் வரை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதி தூரத்திற்கு மண் பாதையில் தான் செல்ல வேண்டும். கோவில் முன்பு பக்தர்கள் அமர மேற்கூரை இருக்கிறது. சிறிய ஆலயமாக இருந்தாலும் சித்தர்கள் வாசம் செய்யும் இந்த திருத்தலம், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பெருந்தலமாகவே உள்ளது.

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top