Thursday Dec 26, 2024

குன்றத்தூர் ஸ்ரீ நாகேஸ்வரர் கோவில் (ராகு ஸ்தலம்), சென்னை

முகவரி

குன்றத்தூர் ஸ்ரீ நாகேஸ்வரர் கோவில் (ராகு ஸ்தலம்) வடநாகேஸ்வரம், குன்றத்தூர், சென்னை – 600 069 தொலைபேசி: +91 44 2478 0436 மொபைல்: +91 93828 89430

இறைவன்

இறைவன்: நாகேஸ்வரர் இறைவி: காமாட்சி அம்மன்

அறிமுகம்

நாகேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாநகரில் குன்றத்தூரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் நாகேஸ்வரர் என்றும், தாயார் காமாட்சி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் புகழ்பெற்ற சைவப் புலவரான சேக்கிழரால் கட்டப்பட்டது. இத்தலம் வட திருநாகேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. இங்கு லிங்கத்தைச் சுற்றியிருக்கும் நாகாபரணம் ராகுவாக இருக்க வேண்டும். சென்னையில் உள்ள 9 நவக்கிரக கோவில்களில் (அல்லது தொண்டை மண்டலம்) ராகு ஸ்தலம் என இந்த கோவில் கருதப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

சோழமன்னன் அனபாயன் இப்பகுதியை ஆண்டபோது, அவனது அரசவையில் இவ்வூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் அமைச்சராகப் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழிராமதேவர், குலத்தின் பெயரால் “சேக்கிழார்’ என்றழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே புலமையுடன் இருந்த சேக்கிழாரை, மன்னன் தனது அமைச்சராக்கிக் கொண்டான். அவரது சிறப்பான பணிகளைக் கண்டு மகிழ்ந்தவன், “உத்தமசோழபல்லவர்’ என்றும் சிறப்பு பெயரிட்டு அழைத்தான். சிவபக்தரான சேக்கிழார், சிவனருள் பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறை, “பெரியபுராணம்’ என்னும் தொகுப்பாக வெளியிட்டார். ஒருசமயம் சேக்கிழார், கும்பகோணம் அருகிலுள்ள ராகு தலமான திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிவனை தரிசித்தார். அத்தலத்து சிவன் மீது அதீத பக்தி கொண்ட அவர், தினமும் நாகேஸ்வரரின் தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினார். அதேசமயம் அடிக்கடி திருநாகேஸ்வரம் செல்ல முடியாதென்பதால், நாகேஸ்வரருக்கு தனது ஊரில் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். நாகேஸ்வரரின் அமைப்பில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, இங்கு ஒரு கோயில் எழுப்பினார். சிவனுக்கு, “நாகேஸ்வரர்’ என்று பெயர் சூட்டி, தினமும் வழிபட்டார். தலமும், “வடநாகேஸ்வரம்’ என்று அழைக்கப்பெற்றது.

நம்பிக்கைகள்

நாக தோஷ நிவர்த்தி, ராகுப்பெயர்ச்சியால் தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

நாக தோஷம் நீக்கும் சிவன்: நாகேஸ்வரர், இத்தலத்தில் ராகுவின் அம்சமாக காட்சி தருகிறார். தினமும் இவருக்கு காலை 6.30, 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கு பாலபிஷேகம் செய்கின்றனர். நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டும், ராகு காலத்தில் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து, உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள் (கோயிலிலேயே உளுந்து சாதம் செய்து தருவர்). இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை. அம்பாள் காமாட்சி தெற்கு நோக்கி, எதிரில் சிம்ம வாகனத்துடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறாள். தை வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு பன்னீர் அபிஷேகம் செய்கின்றனர். சித்ரா பவுர்ணமியை ஒட்டி இக்கோயிலில், 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இவ்விழாவின் எட்டாம் நாளில் சிவன், அடியாருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கும். அப்போது சுவாமிக்கு முன்புறம் அவரை பார்த்தபடி ஒரு சப்பரத்தில் நால்வர் மற்றும் சேக்கிழார் உலா செல்வர். சித்ரா பவுர்ணமியன்று சிவன், அம்பாள் திருமணம் நடக்கிறது. விழாவில் ஒருநாள் சுவாமி, நாக வாகனத்தில் உலா செல்வார். சேக்கிழாரின் சிவ தரிசனம்: கோயில் பிரகாரத்தில் சேக்கிழாருக்கு, தனிச்சன்னதி இருக்கிறது. சிவனை தரிசித்தபடி மேற்கு நோக்கி நின்றிருக்கும் இவர், வலது கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையில் ஏடு வைத்திருக்கிறார். அனைத்து பூசம் நட்சத்திரத்தன்றும் இவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தை ஒட்டி 10 நாட்கள் குருபூஜை விழா கொண்டாடுகின்றனர். குருபூஜை தினத்தன்று, காலையில் சேக்கிழார் உற்சவமூர்த்தி இங்கிருந்து தேரடிக்குச் செல்வார். அப்போது பொதுமக்கள் சிவன் சார்பில், சேக்கிழாரை கோயிலுக்குள் அழைத்து வருவர். அதன்பின்பு, சேக்கிழார் மூலஸ்தானத்திற்குள் சென்று நாகேஸ்வரரை தரிசிக்கும் வைபவம் நடக்கும். அன்றிரவில் சேக்கிழார் சப்பரத்தில் எழுந்தருளி உலா சென்று, மறுநாள் காலையில் கோயிலுக்குத் திரும்புவார். அன்று இரவு முழுதும் கோயில் திறந்தே இருக்கும். இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் சேக்கிழார் பிறந்த தலத்தில், அவருக்கு தனிக்கோயில் உள்ளது. அங்கும் சேக்கிழார் குருபூஜை விழா 11 நாட்கள் நடக்கும். அவ்விழாவின் நான்காம் நாளில், சேக்கிழார் இத்தலத்திற்கு எழுந்தருளி சிவனை தரிசிப்பார்.

திருவிழாக்கள்

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், வைகாசியில் சேக்கிழார் குருபூஜை, புரட்டாசியில் நிறைமணிக்காட்சி, தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் தெப்பத்திருவிழா, ஆடிப்பூரம், மாசிமகம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநாகேஸ்வரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஆலந்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top