உறையூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி :
உறையூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்,
உறையூர்,
திருச்சி மாவட்டம் – 620003.
இறைவன்:
தான்தோன்றீஸ்வரர்
இறைவி:
குங்குமவல்லி
அறிமுகம்:
திருச்சி உறையூர் சாலையில், உறையூரின் மத்தியில் ஆலயம் உள்ளது. திருச்சி சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன. இங்கு அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் கோயில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பான கோயில் எனப்படுகின்றது. இக்கோயில் 1800 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது என்றும் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்களின் கல்வெட்டுகள் இந்த ஆலயத்தின் பெருமைகளைச் சொல்கின்றன என்றும் கூறப்படுகின்றன.
புராண முக்கியத்துவம் :
முற்காலச் சோழர்களில் ஒருவனான சூரவாதித்த சோழனின் மனைவி காந்திமதி. நாகர் குல இளவரசியான இவளுக்கு திருச்சி தாயுமான சுவாமியின் மீது அதீத பக்தி. ஒருநாளும் அவரை தரிசிக்காமல் இவள் பொழுது சென்றதில்லை. இந்நிலையில் பெண்மைக்கே பெருமை சேர்க்கும் தாய்மை நிலையை காந்திமதி எய்தினாள். நிறைமாத சூலியான காந்திமதி ஒருநாள் தாயுமான சுவாமியை தரிசிக்க திருச்சி மலைக்குச் சென்றபோது களைப்பின் காரணமாக நடக்க முடியாமல் சுவாமியின் நந்தவனமான செவ்வந்தித் தோட்டத்தில் மயங்கி அமர்ந்தாள். தாயும் தந்தையுமான ஈசனைப் பார்க்க முடியாத நிலையை எண்ணிக் கண்ணீர் வடித்தாள்.
வணிகர் குலப் பெண் ரத்னாவதியின் பிரசவம் பார்க்க ஓடோடி வந்த தாயுமான தெய்வம், காந்திமதியை மட்டும் விட்டு விடுமா என்ன! அவள் அமர்ந்திருந்த செவ்வந்தித் தோட்டத்தில் பிரதட்சயமாகத் தோன்றியது. ‘மகளே வருந்தாதே, உன்னைப் பார்க்க நானே வந்துவிட்டேன். இனி எப்போதும் உன் துணை இருப்பேன். இன்று மட்டுமல்ல, உனக்கு காட்சி தந்த இடத்தில் லிங்க ரூபமாக தான்தோன்றி ஈசனாக எப்போதும் இருந்து உன்னைப் போன்ற சூல் கொண்ட தாய் வடிவங்களை எப்போதும் காத்து நிற்பேன்!’ என உறுதி சொன்னது. ஈசன் வந்து அமர்ந்த இடத்தில் அம்பிகையும் குங்குமவல்லியாக எழுந்தருளி பெண்களின் மங்கலம் காக்கும் தேவியாக மாறிவிட்டாள். இவள் வளைகாப்பு நாயகி என்றும் திருச்சி மாநகரப் பெண்களால் அன்போடு அழைப்படுகிறாள்.
நம்பிக்கைகள்:
இங்கு வந்து வழிபட்டால் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. திருமணம், குழந்தைப்பேறு உண்டாக மாநிலம் எங்கிருந்தும் பெண்கள் கூட்டம் இந்த கோயிலுக்கு அலை அலையென வருவது இங்கு சகஜம் என்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறி குழந்தைப் பிறந்தவுடன் இங்கு வந்து வளையல் மாலை போடும் சடங்கு அநேகமாக எல்லா நாளிலும் இங்கு நடக்கிறது என்கிறார்கள் ஆலய நிர்வாகிகள்.
தெற்கு பிராகரத்தில் கம்பீரமாக காட்சி தரும் தில்லைகாளிக்கு பவுர்ணமியன்று சிறப்பான பூஜையும், யாகமும் நடைபெறுகிறது. இருபத்தேழு வகையான அபூர்வர் மூலிகைகளுடன் சிறிதளவு மிளகாய் வற்றலும் இந்த யாகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்வதால் எப்பேர்ப்பட்ட மனக்கஷ்டமும் நீங்கும். கை, கால் வலி உள்ளவர்கர் எலுமிச்சைசை விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
இங்குள்ள இறைவன் சுயம்புவாக லிங்கத் திருமேனியராக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள நவகிரக நாயகர்கர் ள் தம்பதி சமேதராய் வாகனங்களில் எழுந்தருளியிருப்பது கோயிலின் தனி சிறப்பு. பொதுவாக ஆலயங்களில் நவகிரகங்கள் தனியாகவோ, தம்பதியராகவோ அல்லது வாகனத்துடனோ காணப்படுவது வழக்கம். ஆனால் இங்கு நவகிரக நாயகர்ள் தம்பதி சமேதராய் வாகனங்களில் எழுந்தருளியிருப்பது கோயிலின் தனி சிறப்பாகும். ஆதலால் இக்கோயில் சிறந்த கிரக பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
கருவறையில் ஈசன் கிழக்கு முகமாக ஏழடி கொண்ட பிரமாண்ட வடிவாக அருள்கிறான். இரு கரங்களில் அங்குசம் மற்றும் தாமரை ஏந்திய அம்பிகை அழகுற காட்சி தருகிறாள். இங்கே நவகிரகங்கள் தங்கள் துணையுடன் காட்சி தருவது சிறப்பு. தெற்கு பிராகாரத்தில் எழுந்தருளி இருக்கும் தில்லை காளிக்குச் செய்யப்படும் பரிகார ஹோமம் இங்கு சிறப்பானது என்கிறார்கள். 27 வகை மூலிகைகளுடன் மிளகாய் சேர்த்து செய்யப்படும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால் எதிர்மறை எண்ணங்கள் விலகி நோய்கள் விலகும் என்கிறார்கள். சிவாலயத்தில் வழக்கமாக இருக்கும் எல்லா மூர்த்தங்களின் சந்நிதியும் இங்கு உள்ளன.
திருவிழாக்கள்:
காந்திமதி வழிபட்டு குங்குமவல்லி தேவிக்கு வளையல் சார்த்தி அதைப் பிரசாதமாக ஏற்றுக்கொண்டதால் ஒவ்வொரு ஆண்டும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை வளையல் காப்புத் திருவிழா இங்கு நடைபெறுகிறது. இவ்விழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய 2 தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
விழாவின் முதல் நாளில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமவல்லி அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக அளிப்பர். அதேபோல் இரண்டாம் நாள் திருமணமான பெண்கள் மகப்பேறு வேண்டி வளையல்களைக் காணிக்கையாக தருவர். விழாவின் மூன்றாம் நாளில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களின் திருமண தடை – ஜாதகக் கோளாறுகள் நீங்கி நல்ல வரன் கிடைக்க வளையல்களைக் காணிக்கையாக தருவர். வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்களிலும் அம்பிகை வளையல் அலங்காரத்தில் வெகு அழகாகக் காட்சி அளிப்பாள். பிறகு பூஜை வழிபாட்டுக்குப் பின்னர் காணிக்கையாகப் பெறப்பட்ட வளையல்கள் பிரசாதமாகத் தரப்படும். திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் விழா வெகு பிரசித்தம் எனப்படுகிறது.
























காலம்
1800 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உறையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி