Monday Dec 23, 2024

உத்தமபாளையம் ஸ்ரீ பாறையடி முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில், தேனி

முகவரி :

உத்தமபாளையம் ஸ்ரீ பாறையடி முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்,

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் – 625 533

தொலைபேசி: +91- 99409 94548.

இறைவன்:

ஸ்ரீ முத்துக்கருப்பண்ணசுவாமி (பாறையடி முத்தையா)

அறிமுகம்:

தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், உத்தமபாளையம் கிராமத்தில் உத்தமபாளையம் முத்துக்கருப்பண்ணசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் பாறையடி ஸ்ரீ முத்துக்கருப்பண்ணசுவாமி (பாறையடி முத்தையா) கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது முத்துக்கருப்பண்ணசுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இக்கோயில் 1500 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ளது. இந்த கோவிலில் உண்மையில் இரண்டு பகுதிகள் உள்ளன – ஒன்று மலையின் மேல் மற்றொன்று கீழே உள்ளது.

புராண முக்கியத்துவம் :

       முற்காலத்தில் இங்குள்ள குன்றின் மீது ஒரு சிவன் கோயில் இருந்தது. இவரது சன்னதி காவலராக முத்துக்கருப்பண சுவாமி எழுந்தருளியிருந்தார். மந்திரவாதி ஒருவன், இந்த சிவனைக் கொண்டு செல்ல முயன்றான். முத்துக்கருப்பணர் அவனைத் தடுத்து வதம் செய்தார். பின்பு நிரந்தரமாக அடிவாரத்திலேயே எழுந்த ருளினார்.காலப்போக்கில் குன்றின் மீதிருந்த சிவன் கோயில் மறைந்து போனது. பின்னர், முத்துக்கருப்பண்ணரே பிரசித்தி பெற்றுவிட்டார். இவருக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது. பாறையின் அடியில் காட்சி தருவதால் இவர், “பாறையடி முத்தையா’ என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் பத்ம விமானம் எனப்படுகிறது. இத்தலவிநாயகர் முக்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் நவக்கிரகம், அரச மரத்தின் கீழ் புற்று வடிவில் நாகர் சன்னதிகள் உள்ளது. சுவாமி சன்னதியின் இருபுறமும் தேவபூதகன், ஆகாச பூதகன் ஆகிய காவல் தெய்வங்கள் காட்சி தருகின்றனர். கோயில் எதிரில் நந்தியுடன் அக்னி வீரபத்திரர், தட்சனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார். சிவாம்சமான இவரை வணங்கிய பிறகே, பக்தர்கள் கருப்பணருக்கு பூஜை செய்கின்றனர். கோயிலுக்கு பின்புறமுள்ள குன்றில் சதுர பீடத்துடன் கூடிய ஆகாய லிங்கமாக, சிவன் காட்சி தருகிறார். அருகில் பார்வதி, வடக்கு நோக்கி மண்டியிட்டு அமர்ந்து, கையில் மலருடன் சிவபூஜை செய்கிறாள். இந்த கோலத்தைக் காண்பது அரிது. குன்றின் அடியில் வற்றாத “பாறையடி தீர்த்தம்’ இருக்கிறது.

சிறப்பு அம்சங்கள்:

கதவு தட்டி பூஜை: மூலஸ்தானத்தில் சுவாமி, நெற்றியில் நாமம், முறுக்கு மீசையுடன் சுவாமி ஆஜானுபாகுவாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கையில் அரிவாள் இருக்கிறது. இடது காலால் மந்திரவாதியின் மார்பை மிதித்து, அவனது தலையைப் பிடித்திருக்கிறார். சுவாமியின் முகம், மார்பு ஆகியவை நவபாஷாணத்தால் ஆனதாகும். இந்தப் பகுதியில் சுவாமிக்கு அடிக்கடி வியர்க்கும் என்பதால், விசிறியால் வீசி வீ விடுகிறார்கள். அர்த்தஜாம பூஜையின் போது, சுவாமியின் முன்பு நீர் நிரம்பிய பாத்திரத்தை வைத்துவிட்டு நடையை அடைத்து விடுகிறார்கள். இரவில் சுவாமியின் தாகம் தணிப்பதற்கு இவ்வாறு வைப்பதாகச் சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே பிரசாதமாகத் தரப்படுகிறது. காலையில் நடை திறக்கும் முன்பாக அர்ச்சகர், சன்னதி கதவை இரண்டு முறை தட்டிவிட்டு வெளியிலேயே நின்று கொள்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவை தட்டிவிட்டு, அதன்பின்பே சன்னதிக்குள் சென்று சுவாமியை பூஜிக்கிறார். சுவாமியிடம் அனுமதி பெற்றே நடை திறக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். பக்தர்கள் இவரைத் தங்கள் தந்தையாகக் கருதி, “ஐயா’ என்று அழைக்கிறார்கள்.

வாழை மட்டை வழிபாடு: சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது. இவரது உக்கிரத்தைக் குறைக்கும்விதமாக, அமாவாசையன்று நிழலில் உலர்த்திய தர்ப்பையை தீயில் எரித்து கிடைக்கும் சாம்பலுடன் கஸ்தூரி, ஜவ்வாது, புனுகு, பச்சைக்கற்பூரம் மற்றும் ஐந்து வித எண்ணெய் சேர்த்த கலவை தயாரித்து அதைக் கொண்டு காப்பிடுகின்றனர். பவுர்ணமியன்று வெண்ணெய் காப்பு செய்யப்படும். பவுர்ணமிதோறும் வெண்ணெய் காப்பிடுகின்றனர். இவ்வேளையில் ஏழு விதமான கனிகளை பிரதான நைவேத்யமாக படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கின்றனர். தைலக்காப்பின்போது சுவாமி உக்கிரமாக இருப்பார்.இச்சமயத்தில், சன்னதிக்குள் பெண்கள், குழந்தைகளை அனுமதிப்பதில்லை.சிவனின் காவலர் என்பதால், சிவராத்திரியன்று நள்ளிரவில் இரவுக்கு விசேஷ பூஜை நடக்கும். திருமணமாகாதவர்கள் சுவாமியின் பாதத்தில் வாழை மட்டை படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். அதில் பாதியை பிரசாதமாகப் பெற்று வருவார்கள். இந்தப் பிரார்த்தனையால் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும் என்கிறார்கள். சுவாமி சன்னதிக்கு இருபுறமும் தேவபூதகன், ஆகாச பூதகன் என இரண்டு காவல் தெய்வங்கள் கைகளில் அரிவாள், தண்டாயுதம் ஏந்தி பிரமாண்ட சிலை வடிவில் காட்சி தருகின்றனர். அருகில் குதிரை வாகனம் இருக்கிறது.

வித்தியாசமான தெட்சிணாமூர்த்தி: இங்குள்ள முக்தி விநாயகர் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, கல்லால மரம், முயலகன், சீடர்கள், கைகளில் உடுக்கை, அக்னி என எதுவும் இல்லாமல் காட்சி தருகிறார். இடது காலை மடக்கி யோகப்பட்டை அணிந்து, சின்முத்திரை காட்டும் இவர், மேல் இரு கரங்களில் மலர் வைத்திருக்கிறார். குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இவரை வழிபட குருவின் நல்லாசி கிடைக்கும்.

திருவிழாக்கள்:

சிவராத்திரி

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

உத்தமபாளையம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top