Monday Dec 23, 2024

இளையநயினார்குளம் தில்லை மாகாளியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு தில்லை மாகாளியம்மன் திருக்கோயில்,

இளையநயினார்குளம்,

திருநெல்வேலி மாவட்டம் – 627111.

இறைவி:

தில்லை மாகாளியம்மன்

அறிமுகம்:

 நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே அமைந்துள்ளது இளையநயினார்குளம். பருவமழை பெய்தால் பசுமை தங்கும் அழகான சிற்றூர். இவ்வூரின் மேற்கு எல்லையில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் பாட்டாங்கரை தில்லை மாகாளியம்மன்.

புராண முக்கியத்துவம் :

       சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு இளையநயினார்குளம் ஊரில் வாழ்ந்து வந்த மாடக்கோனார், மாடத்தி தம்பதியருக்கு மணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் மழலை செல்வம் கிட்டவில்லை. மாடக்கோனாரும், தனக்கு வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில் மனைவி மாடத்தியின் அனுமதியோடு இரண்டாவதாக வள்ளியம்மாளை திருமணம் செய்து கொண்டார். இரு தாரம் மணந்தும் மாடக்கோனாருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கவில்லை.

உறவினர்கள் சொல்லும் கோயிலுக்கெல்லாம் தனது இரு தாரங்களோடும் சென்று வழிபட்டு வந்தார். ஒரு நாள் அந்த ஊருக்கு வந்த கோடங்கி, மாடக்கோனாரிடம் விசுவாமித்திரர் சிவ பூஜை செய்யும் விஜயாபதி சென்று சிவனையும், எல்லையில் நின்றாளும் தில்லைக்காரியிடமும் உமது குறையை சொல்லி கையெடுத்து வணங்கி வாரும் மறு ஆண்டு பரம்பரை பேர் சொல்ல, பாங்குடனே வந்து பிறக்கும் பிள்ளை என்று கூறிச்சென்றான். கோடங்கியின் வாக்கை தெய்வவாக்காக எண்ணிய மாடக்கோனார், தனது இரு மனைவியர்களுடன் ஒரு அமாவாசை தினத்தன்று விஜயாபதி சென்றார். மூவரும் அங்குள்ள கடலில் நீராடி கயிலை நாதனான மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி அம்பாளையும் தரிசனம் செய்தனர். பின்னர் விசுவாமித்திரரையும் வணங்கினர். அடுத்து தில்லை காளி அம்பாள் சந்நதிக்கு வந்தனர்.

தில்லை மாகாளி அம்மனை வணங்கி விட்டு. அவ்விடத்தில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவை உண்டனர். சில நிமிட ஓய்வுக்கு பின் தாங்கள் கொண்டு வந்த பச்சரிசி மாவையும் கருப்பட்டியும் சேர்த்து சாப்பிட்டார்கள் மீதியிருந்த பச்சரிசி மாவையும் கருப்பட்டியும் அங்குள்ள காரம் செடி அருகே தூக்குசட்டியில் மூடி வைத்தனர். இளைய நயினார்குளம் நோக்கி மூவரும் புறப்பட்டார்கள்.  விஜயாபதி கொத்தங்குளம் அடுத்த அரசன்குளம் கடந்து வரும் வேளையிலே அந்திசாயும் நேரம் நெருங்கியது.உடனே மாடக் கோனார், மாடத்தி அம்மாளிடம், அந்த பச்சரிமாவும், கருப்பட்டியும் மீதியை கேட்க, வள்ளியம்மாள் பதிலுரைத்தாள் அதை அங்குள்ள உடமரத்து மூட்டுலேயே மறந்து வைச்சிட்டு வந்துட்டேனே, சரி, நான் போயி எடுத்துக் கொண்டாரேன். என்று சொல்ல,உடனே மாட கோனார் ‘‘அங்கே விட்டது அங்கேயே இருக்கட்டும், என்றார்.


உடனே வள்ளியம்மாள், மாலையிட்ட மணாளன் மாடக்கோனார் பேச்சைக் கேட்காமல் வள்ளியம்மாள் வேகமாகச் சென்றாள். விஜயாபதி வந்தாள் தில்லை மாகாளி சந்நதியில் நின்றாள். தில்லைக்காளி மானிட ரூபம் கொண்டு பார்க்க. இமைக்கொட்டாமல் அதைக்கண்டாள் வள்ளியம்மாள். தில்லை காளி சந்நதியை விட்டு, அஞ்சி நடுநடுங்கி திரும்பி பார்க்காமல் வேகமாக நடைப்போட்டாள், மாடக்கோனார், மாடத்தியிடம் வந்தாள். காரணம் கேட்டனர். கண்கள் இமைத்ததே தவிர வார்த்தைகள் வரவில்லை வள்ளியம்மாளிடம்  இருந்து. வீட்டுக்கு அழைத்து வந்தனர். யாரிடமும் பேசவில்லை, உண்ண வில்லை, நீர் கூட அருந்தவில்லை தன்னந்தனியாகப் பித்து பிடித்தவர் போல் இருந்தாள் வள்ளியம்மாள். என்ன செய்வதென்று அறியாமல் இருந்தார்கள் மாட கோனாரும் மாடத்தி அம்மாளும், நாட்கள் இரண்டு கடந்து விட, மூன்றாவது நாள் மாடகோனார், தனது நெருங்கிய நண்பரான பெருமாள்தேவரிடம் நடந்ததை கூறினார்.



மறுநாள் பெருமாள் தேவரும், மாடக்கோனாரும் ராதாபுரம் சென்றனர். நித்தியகல்யாணி அம்மன் கோயில் தெப்பக்குளத்தின் கரையில் இருந்து குறி சொல்லும் பார்வதி என்பவரிடம் வள்ளியம்மாளின் நிலை குறித்து கேட்டனர்.  ‘‘ஐயா, கோனாரே, உம்ம பொஞ்சாதியோட வந்திருப்பது ஆத்தா தில்லைமாகாளி  தான்.’’ என்று சொல்லி முடிக்கும் முன்னே குறி சொன்ன பார்வதியின் விழிகள் வித்தியாசம் காட்டியது. அமைதியாக குறி உரைத்தவள். ஆதாளி போட்டாள்.‘‘மாட கோனார், உன் வீட்டுக்கு வந்திருக்கிறது நான் தான். எனக்கு ஊருக்கு எல்லையிலே நிலையம் கொடுத்து பூஜித்து வா. நான் உனக்கு வேண்டும் வரம் அளிப்பேன். என்னை வணங்கி வரும் யாவருக்கும் வேண்டியதை கொடுத்து வாழ வைப்பேன். என்னை நம்பும் பேருக்கு நல்வாழ்வு அளிப்பேன்.’’ என்றுரைத்தாள். சத்தம் குறைந்தது. பின்னால் இருந்த தெப்பக்குளக்கரை சுவரில் சாய்ந்து இருந்தாள். தண்ணீர் கொடுத்தனர் சுற்றி நின்றவர்கள். உடனே இருவரும் இளைய நயினார்குளம் திரும்பினர்.

இளைய நயினார்குளம் ஊரின் மேற்கு பக்கம் இருந்த பாடங்குளத்தின் கரையில் வடக்கு பக்கம் கிழக்கு நோக்கி தில்லை காளிக்கு நிலையம் இட்டு ஓலை கூரையில் கோயில் அமைத்தனர்.மறு வருடம் மாடக்கோனார் மாடத்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து வள்ளியம்மாள், மாடத்தி இருவரும் பிள்ளைகள் பெற்றனர். குடும்பம் தழைத்தோங்கியது. கோயிலில் மூலஸ்தானத்தில் தில்லை மாகாளி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். பரிவார தெய்வங்களாக வைரவர், சுடலைமாடன் பேச்சியம்மன் அருள் பாலிக்கின்றனர். பாட்டாங்குளத்தின் கரையில் கோயில் கொண்டமையால் இத்தலத்து தில்லைக்காளி பாட்டாங்கரையாள் என அழைக்கப்பட்டாள். பாட்டாங்கரை இசக்கி என்றும் இத்தல அம்மன் அழைக்கப்படுகிறாள்.

சிறப்பு அம்சங்கள்:

இளைய நயினார்குளம் ஊரில் குடும்பத்தில் பிறக்கும் மூத்த பிள்ளைகளுக்கு தில்லை என்ற பெயர் சூட்டுகிறார்கள். காரணம் எல்லாம் அந்த பாட்டாங்கரையாள் அருள் தான் என்கின்றனர். இந்த ஊரில் கொடுக்கல் வாங்கல், சத்தியம் செய்தல், என எந்த பிரச்னைக்கும் நடுவராக பாட்டாங்கரையாளையே அழைக்கிறார்கள். உண்மையிலேயே பாட்டாங்கரையா என அழைத்தால் மறு குரல் வருகிறது நான் இருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லும்படி பல்லியோ, பறவைகளோ எழுப்பும் குரல் மூலமே.ஆண்டுக்கு குறைந்தது ஆறு கொடைவிழா காண்கிறாள் இந்த தாய் பாட்டாங்கரையாள். காரணம் எல்லாம் நேர்ந்துக் கொண்டது தான். தனக்கு எது தேவையோ அது நடந்தால் கொடை விழா நடத்துகிறோம் என வேண்டிக்கொள்கிறார்கள். அது நடந்ததும் வேண்டிக் கொண்டதுபடி கொடை விழா நடத்துகிறார்கள்.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இளைய நயினார்குளம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top