Sunday Dec 29, 2024

இரணியல் ஒடுப்பறை நாகரம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி

முகவரி :

இரணியல் ஒடுப்பறை நாகரம்மன் திருக்கோயில்,

இரணியல்,

கன்னியாகுமரி மாவட்டம் – 629810.

இறைவி:

தங்கம்மை, தாயம்மை

அறிமுகம்:

 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் தொன்மையும் சரித்திரச் சிறப்பும் வாய்ந்த ஊர். இங்கு தென்னந்தோப்புகளிலும் வயல்களிலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நீளவாக்கில் குழிவெட்டி, அதில் தென்னை ஓலையில் பொதியப்பட்ட செங்கல் அளவுள்ள கொழுக்கட்டையைக் கதம்பைக் (தென்னை மட்டை) கனலில் சுட்டுக்கொண்டிருந்தனர். இது தஎங்கள் தெய்வங்களான தங்கம்மைக்கும் தாயம்மைக்கும் படைக்கும் படையல். ஒடுப்பறை நாகரம்மன் கோயிலில் வைத்துப் படைப்போம்’ என்கின்றனர்.  கருணையே வடிவாக நாகரம்மன் காட்சி தந்தாள். அந்த ஆலயத்தில் விநாயகர், சிவன் பார்வதி ஆகிய தெய்வங்களின் சந்நிதிகளும் அமைந்துள்ளன. தங்கம்மை, தாயம்மை சந்நிதி என்று காட்டிய இடத்தில் இரண்டு பாறைகள் மட்டுமே இருந்தன.

புராண முக்கியத்துவம் :

“வணிகர்களாகிய எங்க முன்னோர் பூம்புகார்ல பேரும் புகழுமா வாழ்ந்தவங்க. ராஜகுருவுடன் சேர்ந்து சோழ மன்னர்களுக்கு மணிமகுடம் சூட்டும் அளவுக்கு உரிமை உடையவங்க! காலம் மாறுச்சு. மன்னர் பரம்பரைல பூவந்திச்சோழன்னு ஒரு மன்னர் வந்தான். அவனுக்குப் பெண் ஆசை, பொன்னாசை, மண்ணாசை மூணும் அதிகம். அயல்நாடுகளில் வணிகம் முடிச்சு ஊர் திரும்பும் வணிகர்கள் விலையுயர்ந்த பொருள்கள மன்னருக்குப் பரிசளிப்பது வழக்கம். அப்படித்தான் ஒரு வணிகர் உயர்ந்த முத்துக்களைப் பரிசளிச்சார்.

சோழன் அவற்றை மாலையாக்கித் தரும்படி அரண்மனைப் பொற்கொல்லரிடம் கொடுத்தான். அது அரபு முத்து. அளவுல சின்னது. அவற்றை மாலையாகக் கோப்பது சிரமம். சின்ன முத்தில் நூல்கோக்கும்போது அது உடைஞ்சிருச்சு. இப்படி ஒவ்வொண்ணா உடைஞ்சா என்ன செய்றதுன்னு நினைச்ச பொற்கொல்லர் முத்தைக் கோக்க முடியலன்னு மன்னர்கிட்ட திருப்பிக்கொடுத்திருக்காரு. மன்னரும் முத்துக்களை வணிகரிடமே திருப்பிக் கொடுத்துட்டாரு.

வணிகர் `இப்படி ஆகிடுச்சே’ன்னு கவலையோடு வீட்டுக்கு வந்தார். அதைக் கவனித்த அவரின் மகள்களான தங்கம்மாவும் தாயம்மாவும் தந்தையிடம் காரணம் கேட்டாங்க. அவர் விஷயத்தைச் சொன்னதும் முத்துக்களைக் கேட்டுவாங்கி, முத்துக்களோட துளைகள் ஒன்னோடு ஒன்னா சேர்ந்திருக்கும்படி வரிசையா அடுக்கி, அதன் மேல மண்ணைப் போட்டு மூடினாங்க. பிறகு, ஒரு நூலின் முனைல சர்க்கரையைத் தேய்ச்சு வச்சிட்டாங்க. சர்க்கரைக்கு வந்த எறும்புங்க, சர்க்கரையோட சேர்த்து நூலைக் கடிச்சு இழுத்துக்கிட்டு முத்துக்களுக்குள்ள போயி, மறுபக்க ஓட்டை வழியா வெளிய வந்திடுச்சிங்க. முத்துக்கள் கோக்கப்பட்டுருச்சு. வணிகருக்கு சந்தோஷம். அந்த மாலையை மன்னரிடம் ஒப்படைச்சார். மாலைகள் கோக்கப்பட வணிகரின் மகள்களே காரணங்கிறதை அறிந்தார். `அவங்களை நான் பார்க்கணுமே…’ன்னு சொன்னார்.

வணிகருக்கு அதிர்ச்சி. காரணம், மன்னர் பார்க்கணும்னு சொன்னா அதுக்கு என்ன அர்த்தம்னு அவருக்குத் தெரியும். எப்படியும் தன் மகள்களை மன்னர் அபகரிச்சிருவாருன்னு நினைச்சு வருத்தத்தோட வீட்டுக்கு வந்தார்.அந்தப்புரத்துல நூத்துல ஒருத்தரா நம்ம பொண்ணுங்க வாழணுமான்னு தவிச்சார்.

அதேநேரம், மன்னர் உத்தரவை மீறினா குடும்பமே உசிரோட இருக்க முடியாதுன்னு தெரியும். அதனால் மனசைக் கல்லாக்கிக்கிட்டு ஒரு முடிவுக்கு வந்தார். தன் இரண்டு பெண்கள் கைகளிலும் விளக்கைக் கொடுத்து நிலவறைக்கு அனுப்பி வச்சிட்டு, மேல மண்ணைப்போட்டு மூடிட்டார். நிலவறையில மாட்டிக்கிட்ட தங்கம்மையும் தாயம்மையும் சுவாசிக்க முடியாம இறந்துட்டாங்க.

இந்த விஷயம் மன்னருக்குத் தெரியவர, வணிகர்களின் வம்சத்தையே அழிக்க உத்தரவு போட்டார். குருகுலத்தில் படிச்சிக்கிட்டு இருந்த ஆண் குழந்தைகளைத் தவிர வேற யாரும் மிஞ்சல. வணிகர் தலைவர் மட்டும், உசிரைக் கையில பிடிச்சிக்கிட்டு கைல ஒரு மரகத விநாயகர் சிலையை எடுத்துக்கிட்டு குருகுலத்துக்கு ஓடிப்போனார். அந்தச் சிலையை அங்க ஆசானா இருந்தவர்கிட்ட கொடுத்துட்டு எங்க குழந்தைகளைப் பாதுகாக்கணும்னு சொல்லிட்டு உயிரை விட்டுட்டார்.

பூவந்திச் சோழனுக்குப் பிறகு அவன் மகன் ராஜபூஷணன் ஆட்சிக்கு வந்தான். மரபுப்படி மகுடம் சூட வணிகர் ஒருவர் வேணுமே. வேற வழியில்லாம குருகுலத்துல இருந்த ஆண் பிள்ளைகளைத் தேடிப்போனாங்க. அவங்களுக்கு வேற குலத்துப் பெண்ணைக் கல்யாணம் கட்டி வச்சி அந்த ஆண் வாரிசின் கையால ராஜாவுக்கு மகுடம் சூட்டினாங்க. ராஜபூஷணன் ரொம்ப நல்லா ஆட்சி செஞ்சான். வணிகர்களும் சிறப்பா வாழ்ந்தாங்க. வணிகர் குல மக்கள், உயிர்த் தியாகம் செய்த தங்கம்மை, தாயம்மை ஆகியோரை தெய்வமா வழிபட ஆரம்பித்தார்கள்.

பின்னர் பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் மக்கள், பாண்டிய தேசத்துக்கும் குடி பெயர்ந்தாங்க. பிரான்மலைக்குக் கிழக்கும், வைகைக்கு வடக்கும், வெள்ளாற்றுக்குத் தெற்கும், கடலுக்கு மேற்கும் உள்ள பகுதியை வணிகர்களுக்காக ஒதுக்கிக் கொடுத்தான். அப்படிக் குடி வந்தவங்க. ஊர்த் தலைவர் கொடுத்த மரகத விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாங்க.

கொஞ்ச காலம் கழிச்சி, அங்கிருந்து பிச்சைச் செட்டியார் தலைமையில் ஒரு கூட்டம் வியாபாரம் நிமித்தமா தெற்கு நோக்கி வந்தது. வழியில் இருட்டிப் போக, தோப்பாக இருந்த இடத்துல தங்கினாங்க. கையில கொஞ்சம் மாவு இருந்திருக்கு, ஆனா சமைக்கிறதுக்குப் பாத்திரம் கொண்டுவரல. அதனால் அந்த மாவுல சர்க்கரை, தேங்காய், மட்டிப்பழம் எல்லாம் போட்டுத் தண்ணீர் சேர்க்காமப் பிசைஞ்சு செங்கல் வடிவில் கொழுக்கட்டை மாதிரி செய்து, வாழை இலையில சுற்றியிருக்காங்க.

கட்டுறதுக்குக் கயிறு கிடைக்காததனால கைதை நார் (ஆற்றங்கரைகளில் வளரும் உயிர்வேலிக்கான மரம்) எடுத்து மூணு கட்டு கட்டியிருக்காங்க. அதுக்குமேல தென்னை ஓலை இலக்குகளைச் சுற்றி நாலு கட்டும், மற்றொரு முறை தென்னை ஓலையில சுற்றி நாலுகட்டுமாக மொத்தம் 11 கட்டு போட்டிருக்காங்க. தரையில சின்ன சால் எடுத்து, அதில் தென்னை மட்டைகளைப் பரப்பி அதில் தீமூட்டி, கொழுக்கட்டைகளைச் சுட்டு எடுத்தாங்களாம். அதை அவங்க கொண்டு வந்த சிறிய விநாயகர், மீனாட்சி, சிவன் பார்வதி தெய்வங்களுக்கும், தங்கம்மை தாயம்மையரைக் கல்லுல பிரதிஷ்டை செஞ்சி அவங்களுக்கும் படைச்சிட்டு, சாப்பிட்டிருக்கிறாங்க. அந்த நாள், சித்திரை மாதம் கடைசி ஞாயிறு. வளர்பிறை, ஆயில்யநட்சத்திரம். ராத்திரியில கொழுக்கட்டையைச் சுட்டு மறுநாள் காலையில படைச்சிருக்காங்க. விடிஞ்சதும் அந்த இடம் நல்ல வளமா இருக்கிறதைப் பார்த்துட்டு அங்கேயே வாழ ஆரம்பிச்சாங்க. அந்தப் பிச்சைச் செட்டியாரின் வம்சாவளிதான் நாங்க. அதனால்தான் இந்தத் திருவிழாவைக் கொண்டாடுறோம். சித்திரை மாதம் கடைசி ஞாயிறா இருக்கணும், அன்னைக்கு மதியம் 12 மணிக்கு மேல ஆயில்யம் தொடங்கணும். மறுநாள் திங்கள்கிழமை 12 மணிவரை ஆயில்யம் இருக்கணும். அப்படி ஒரு நாள் வருசா வருஷம் வராது.

கடந்த 2008-ல இதுபோல ஒரு நாள் வந்தது. அதற்கும் 23 வருஷத்துக்கு முன்னாடி அந்த நாள் வந்திருக்கு. 2008-க்குப் பிறகு, 13 ஆண்டுகள் கழிச்சி இந்த மே மாதம் 8, 9 நாள்களில்தான் அப்படி அமைஞ்சது. அதனால்தான் விழா கொண்டாடுறோம். ஆக, அபூர்வமான இந்த நாள்கள் எப்போ வந்தாலும் உலகெங்கும் இருக்கிற எங்க சொந்தபந்தங்கள் உடனே ஊருக்கு வந்திடுவாங்க. வீட்டுல இருக்கிறவங்க எண்ணிக்கைக்கு ஏற்ப ஆளுக்கு ஒரு கொழுக்கட்டை செய்யணும். பெண்களைக் கல்யாணம் கட்டிக்கொடுத்துட்டாலும் சுட்ட கொழுக்கட்டையை அவங்களுக்குக் கொடுத்தனுப்பணும்.

இது எங்க குலத்துக்கு மட்டுமேயான தனித்துவமான பண்டிகை. இதை எங்க வாழ்க்கை பூராம் விட்டுக்கொடுக்காம செய்வோம். இதனால தங்கம்மாவும் தாயம்மாவும் எப்பவும் எங்க கூடவே தெய்வமா இருந்து எங்க குலத்தைக் காப்பாத்துவாங்க.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இரணியல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

இரணியல்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top