Tuesday Dec 24, 2024

ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் திருக்கோயில்,

ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்,

தமிழ்நாடு 627423

தொலைபேசி: +91 – 4634 – 283 058

இறைவன்:

வன்னியப்பர் (அக்னீஸ்வரர்)

இறைவி:

சிவகாம சுந்தரி

அறிமுகம்:

வன்னியப்பர் கோயில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சி கிராமத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது. ராம நதிக்கரையில் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பாபநாசம் (திருநெல்வேலி) மற்றும் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கோயில் இது மற்றும் கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மூலவர் வன்னியப்பர் (அக்னீஸ்வரர்) என்றும், தாயார் சிவகாம சுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். தீர்த்தம் அக்னி தீர்த்தம் மற்றும் ஸ்தல விருட்சம் வன்னி மரம்.

புராண முக்கியத்துவம் :

  இவ்வுலகத்தில் ஆக்கல், அழித்தல் ஆகிய இரு தொழில்களையும் அக்னியே செய்கிறது. யாகங்களிலும், நைவேத்தியம் தயாரிக்கவும், சமையலுக்கும் பயன்படும் அக்னி, மனிதன் இறந்து போனால் அவனது உடலை எரிக்கவும் பயன்படுகிறது. அவனது ஆத்மாவை இறைவனிடம் கொண்டு சேர்க்கிறது. ஒருமுறை சப்தரிஷிகள் யாகம் செய்தனர். அவர்களது யாக குண்டத்தில் எரிந்த நெருப்பு சரிவர எரியவில்லை. இதனால் அக்னி பகவானை ஒளியிழந்து போகுமாறு அந்த ரிஷிகள் சபித்தனர். தனது கடமையை சரிவர செய்யாமல், சாபத்திற்கு ஆளான அக்னி பகவான், மீண்டும் தனது பழைய நிலையை பெற சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார்.

பூலோகத்தில் ஒரு நதியின் கரையில் அவர் இந்த பூஜையை செய்து வந்தார். சிவபெருமான் அவருக்கு காட்சியளித்து மீண்டும் ஒளி தந்தார். சீதாதேவியின் கற்பை நிரூபிக்க தான் உதவியதால், தான் தவமிருந்த இடத்தில் ஓடிய நதிக்கு அவளது கணவரான ராமனின் பெயரை வைத்தார். அது “ராமநதி’ எனப்பெயர் பெற்றது. வன்னி என்றால் அக்னி, அக்னிபகவான் வழிபட்ட ஈசன் என்பதால், இறைவன் வன்னியப்பர், வன்னீஸ்வரர், அக்னீஸ்வரர் என்ற திருநாளங்களால் அழைக்கப்படுகிறார். பிற்காலத்தில் மன்னன் பராந்தக சோழனால் ஆழ்வார்குறிச்சியில் ஆலயம் கட்டப்பட்டு, குளத்திலிருந்த லிங்கம் வெளியே எடுக்கப்பட்டு, அதில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவருக்குப்பின் முதலாம், இரண்டாம், மூன்றாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் கோயில் விரிவடைந்துள்ளது.

நம்பிக்கைகள்:

இக்கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள மண்டப தூணில் கர்ப்பமான நிலையில் ஒரு அம்பிகை காட்சி தருகிறாள். அவளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் சுகப்பிரசவம் ஏற்படும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். குழந்தை இல்லாத பெண்களும் இவளை வழிபடுகின்றனர். அம்பாள் சிவகாமிசுந்தரியை வழிபட்டால் கன்னிப்பெண்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும் என்பது நம்பிக்கை. காலசர்ப்ப தோஷம், ராகு-கேது தோஷம் போன்ற கடுமையான தோஷங்களால் பாதிக்கப்பட்டோர் இவற்றுக்கு ஆராதனை செய்து வழிபட்டால், தோஷங்கள் நீங்குகின்றனவாம்.

சிறப்பு அம்சங்கள்:

      காசியில் பஞ்ச குரோச தலங்களில் யார் வசிக்கிறார்களோ அவர்களுக்கு பாவம் செய்யும் எண்ணமே தோன்றுவதில்லையாம். அது போல இந்தக் கோயிலைச் சுற்றியும் பஞ்சகுரோச தலங்கள் உள்ளன. பாப்பான்குளம் ராமேஸ்வரர், பாபநாசம் பாபநாச நாதர், திருவாலீஸ்வரம் திருவாலீஸ்வர நாதர், சிவசைலம் சிவசைலப்பர் ஆகியவற்றுடன் ஆழ்வார்குறிச்சி வன்னீஸ்வரர் கோயில் ஆகியவையே அத்தலங்கள். இவை கோயிலைச் சுற்றி 25 கி.மீ., தூரத்துக்குள் உள்ளன. எல்லா தலங்களுக்கும் இங்கிருந்து பஸ் வசதி உண்டு.

நவக்கிரக பரிகார யந்திரம்: மற்ற கோயில்களைப்போல இங்கு நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால் சுவாமி சன்னதியின் முன் மண்டபத்தில் நவக்கிரக யந்திரம் புடைப்புச்சிற்பமாக இருக்கிறது. இது ஒரு அபூர்வ அமைப்பாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் நீலகண்ட விநாயகர் முன்புள்ள மண்டபத்தில் இதுபோன்ற அமைப்பு உண்டு. ஆனால் சிவனின் முன்னிலையில் நவக்கிரக யந்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பது இங்கு மட்டுமே.

பிற கிரகங்களுடன் பாம்பு வடிவில் ராகு, கேது உள்ளன. இந்த கிரகங்களை பாம்பாட்டிகள் போன்ற உருவில் உள்ளவர்கள் ஆட்டி வைப்பது போல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியே சற்று தூரத்திலுள்ள அக்னி தீர்த்தத்தின் நீர், தீர்த்தத்திற்குள் உள்ள சிவலிங்க மண்டபத்தை மூழ்கடித்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம். சாஸ்தா சன்னதியில் சாஸ்தா பலிபீடபீ வடிவில் இருக்க, அருகில் பூர்ண, புஷ்கலா அருளுகின்றனர். கரூவூர் சித்தர் ஒரு தூணில் நாயுடன் காட்சி தருகிறார். சித்தர் வழிபாடு செய்பவர்களுக்கும், தியானம் செய்பவர்களுக்கும் ஏற்ற அமைதியான சூழலில் கோயில் இருக்கிறது.

இந்த வழிபாடுகளை பிற மதத்தினரும் மேற்கொண்டு பலன் பெறுவதால் இது சர்வ சமயத்தினருக்குமான பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. வேண்டுதல் நறைவேறியதற்குச் சாட்சியாக மாற்று மதத்தினரால் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட பலவகைப்பட்ட பொருட்களில் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

திருவிழாக்கள்:

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை

காலம்

2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆழ்வார்குறிச்சி

அருகிலுள்ள இரயில் நிலையம்

தென்காசி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top