Sunday Dec 22, 2024

ஆறகளூர் காமநாதீஸ்வரர் திருக்கோயில், சேலம்

முகவரி

ஆறகளூர் காமநாதீஸ்வரர் திருக்கோயில், ஆறகளூர், சேலம் மாவட்டம் – 636101.

இறைவன்

இறைவன்: காமநாதீஸ்வரர் இறைவி: பெரியநாயகி

அறிமுகம்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில். வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள நான்காவது திருத்தலமான இது, வாயுலிங்க தலமாகும். இந்த ஆலயம் சிவத்தலமாக மட்டுமின்றி, அஷ்ட பைரவர்கள் வீற்றிருப்பதால், பைரவத் தலமாகவும் திகழ்கிறது. ஆறு அகழிகளால் சூழப்பட்டிருப்பதால், இந்த ஊர் ‘ஆறகளூர்’ எனப்பெயர் பெற்றது. ஆறும்(நதியும்), அகழியும் உள்ள ஊர் என்பதாலும் ‘ஆறகளூர்’ எனப் பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். இந்த தலம் ‘ஆறை நகர்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆறகளூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மூலவர் காம நாதீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவர் லிங்கம், வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கிறது தல புராணம். அம்பாளின் திருநாமம் பெரியநாயகி என்பதாகும். சேலம்-கடலூர் நெடுஞ்சாலையில் தலைவாசலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. சேலத்தில் இருந்து ஆத்தூர் 52 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கிருந்து ஆறகளூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேய்பிறை அஷ்டமி நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஆறகளூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

புராண முக்கியத்துவம்

இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. இந்த மரத்தடியில் அமர்ந்துதான் இத்தல இறைவனை மன்மதன் வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது. முருகப்பெருமானின் அவதாரத்திற்கு முன்பாக, அதாவது மன்மதனை சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் தகனம் செய்வதற்கு முன்பாகவே, மன்மதன் தனது மனைவி ரதியுடன் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுச் சென்றுள்ளான் என்று கூறப்படுகிறது. மன்மதன் வழிபட்டதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு ‘காமநாதீஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. காமம் என்றால் விருப்பம், ஆசை என்ற பொருளும் உண்டு. தமது பக்தர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி தரும் பெருமான் என்பதாலும் ‘காமநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த திருத்தலம் மன்மதனுக்கு உகந்த இடம் என்பதால், திருமணமான இளம் தம்பதியினர் இங்கு வந்து இறைவனை தரிசித்தால் இல்லறம் இன்பமாக இருக்கும். விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல பிரிந்த தம்பதியர் இங்கு வந்து மனமுருக இறைவனை தரிசித்தால் ஒன்று படுவார்கள் என்பதும் பக்தர்களது நம்பிக்கை.

நம்பிக்கைகள்

ஆறகளூர் காமநாதீஸ்வரரை வழிபட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். கல்வி, வியாபாரம், தொழில் செழிக்கும். அரசு சம்பந்தப்பட்ட வாய்ப்புகள், வேலைகள் கிட்டும். இந்த கோவிலின் தலவிருட்சமான மகிழமரத்தின் இலையை அரைத்து தண்ணீரில் கலக்கி குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

சிறப்பு அம்சங்கள்

இந்தக் கோவிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரமும், கருவறையில் ஆனந்த விமானமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறை சதுரவடிவமானது. இறைவனின் கரு வறைக்கு வடபுறம் தனிச் சன்னிதியில் பெரியநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார். அம்பிகை முன்பும் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தாயாருக்கு பிரஹன்நாயகி என்ற பெயரும் உண்டு. கருவறைக்கு முன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளன. முதல் சுற்றில் உற்சவ மண்டபம், திருக்குளம், தலவிருட்சம், பலிபீடம், நந்தி உள்ளன. 2-ம் சுற்றின் தாழ்வறையில் சந்திர, சூரியன், பைரவர், சமயக்குரவர்கள் காட்சி தருகின்றனர். கருவறை சுற்று பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், விஷ்ணு துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர், முருகன், நவக்கிரக சன்னிதிகளும் உள்ளன. இங்கு பிரம்மாவிற்கும், நடராஜருக்கும் தனித்தனி சன்னிதி இருக்கிறது. கோவிலின் வடபக்கம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருமேனிகள் காணப்படுகின்றன. இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வள்ளி- தெய்வானை சமேத சுப்பிர மணிய சுவாமி மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அஷ்டபைரவர்கள்: : காமநாதீஸ்வரர் கோவிலில் அஷ்ட பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், கால பைரவர் ஆகியோர் எட்டு திசைகளில் இருந்து அருள்புரிகிறார்கள். இவர்களை வழிபட்டால் நம்முடைய பயம் நீங்கும், நமது எதிரிகள் பயந்து விலகுவர் என்பது நம்பிக்கை. மாதந்தோறும், தேய்பிறை அஷ்டமி நாளில், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடக்கிறது. இந்த பூஜையில் கலந்துகொண்டு பைரவரை வழிபாடு செய்தால் திருமணத்தடை, நவக்கிரக தோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் நீங்கும் என்பது ஐதீகம். தேய்பிறை அஷ்டமி பூஜையின்போது காலபைரவருக்கு தேன், பழம், பன்னீர், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வார்கள்.பின்னர் வெள்ளிக வசம், சந்தனகாப்பு, புஷ்ப அலங்காரம் உள்ளிட்ட சர்வ சிறப்பு அலங்காரங்களுடன் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நள்ளிரவு 12 மணி அளவில் காலபைரவர் உள்ளிட்ட எட்டு பைரவர்களுக்கும் பூஜைகள் நடக்கும்.

திருவிழாக்கள்

ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருவாதிரை, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, கிருத்திகை, கார்த்திகை தேய்பிறை, பைரவாஷ்டமி, ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மாசி சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை முக்கியமான விழாக்கள் ஆகும்.

காலம்

1206

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆறகளூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஆத்தூர், சேலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top