Monday Dec 23, 2024

விட்டலாபுரம் பிரேமிக விட்டலன் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு பிரேமிக விட்டலன் கோயில், விட்டலாபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் – 603102. மொபைல்: +91 – 92458 94065

இறைவன்

இறைவன்: பிரேமிக விட்டலன் இறைவி: ருக்மிணி – சத்யபாமா

அறிமுகம்

மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது பண்டரிபுரம். இங்கு விட்டலர் -ருக்மணி திருக்கோவில் அமைந்துள்ளது. இதே போல் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் விட்டலாபுரம் என்ற சிற்றூரில் பழமையான ‘பிரேமிக விட்டலர் கோவில்’ உள்ளது. விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரின் அரச பிரதிநிதியாக இருந்த கொண்டைய தேவ சோழ மகாராஜன் என்பவரால், 16-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. கல்பாக்கத்தில் இருந்து நெரும்பூர் – திருக்கழுக்குன்றம் வழித்தடத்தில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இத்தடத்தில் சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கல்பாக்கம் மற்றும் நெரும்பூரில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணித்தும் இக்கோவிலை அடையலாம். சென்னை -புதுச்சேரி கிழக்குக்கடற்கரைச் சாலைத் தடத்தில் மாமல்லபுரத்தை அடுத்த வெங்கம்பாக்கத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இளையனார்குப்பம் என்ற ஊர் வரும். அங்கிருந்து வலது புறச்சாலையில் திரும்பினால் இரண்டு கிலோமீட்டரில் விட்டலாபுரம் சென்றுவிடலாம்.

புராண முக்கியத்துவம்

கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று, தாயார் சன்னிதி என பல அம்சங்களுடன் இந்த ஆலயம் அமையப்பெற்றுள்ளது. ஆலயத்திற்கு வெளியே ஒரு சிறிய சன்னிதியில் பக்த ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில், விட்டலர் கோவிலை பார்த்தபடி காட்சி தருகிறார். கோவிலுக்குள் பலிபீடம், அழகிய கொடிமரம், பழமையான வடிவமைப்பில் கருடாழ்வார் சன்னிதி உள்ளன.இவற்றைக் கடந்தால் சற்று உயரமான வடிவமைப்பில் விட்டலர் கோவில் அமைந்துள்ளது. மகாமண்டபம், முகமண்டபம் இவற்றைக் கடந்து அர்த்தமண்டபத்தை அடைந்தால், கருவறையில் பிரேமிக விட்டலன் தனது இரண்டு கரங்களையும் இடுப்பில் வைத்தபடி ருக்மிணி – சத்யபாமாவோடு காட்சி தருகிறார். வெளிப்பிரகாரத்தில் முதலில் சந்தானலட்சுமித் தாயார் தனி சன்னிதியில் நான்கு திருக்கரங்களோடு அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். குழந்தைப்பேறு வாய்க்காதவர்கள் இத்தலத்து தாயாரை மனமுருகிப் பிரார்த்தித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதைத் தொடர்ந்து சுற்றுப்பிரகாரத்தில் மூன்று சிறிய சன்னிதிகள் ஒரு சேரக் காட்சி தருகின்றன. இதில் முதல் சன்னிதியில் சீனிவாசப் பெருமாளும்- தாயாரும் அருள்கிறார்கள். அடுத்த சன்னிதியில் வரதராஜப்பெருமாளும் -தாயாரும் காட்சி தருகிறார்கள். மூன்றாவது சன்னிதியில் ராமானுஜரும், விஷ்வக்ஸேனரும் வீற்றிருக்கின்றனர்.

நம்பிக்கைகள்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து சந்தானலட்சுமி தாயாரை மனமுருகிப் பிரார்த்தித்து, விட்டலர் சன்னிதியில் தரும் சந்தாகிருஷ்ணர் விக்கிரகத்தை மடியில் வைத்து ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே; ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்ற மந்திரத்தை உச்சரித்து, விட்டலனையும் தாயாரையும் மனதால் வழிபட குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

இக்கோவிலில் ஒவ்வொரு ஏகாதசி தினத்தன்றும் காலை 9 மணிமுதல் 12 மணி வரை திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றுடன் பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் கார்த்திகை ஏகாதசி, ஆஷாட ஏகாதசி, யுகாதி, மகாசிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி போன்ற உற்சவங்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இத்தினங்களில் திருமஞ்சனம் மற்றும் நாமசங்கீர்த்தனம் போன்றவை நடைபெறுகின்றன. கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டும் மாலையில் திருமஞ்சனம் செய்யப்படுகின்றது.

காலம்

16 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

விட்டலாபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கல்பாக்கம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top