Saturday Dec 28, 2024

பேளூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், சேலம்

முகவரி

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், 26, அயோத்தியாபட்டினம், பேளூர் கீழக்காடு ரோடு, பேளூர், பாரதி நகர், சேலம் மாவட்டம். தமிழ்நாடு 63 61 04 தொலைபேசி எண்: +91-9865809768, 9787709742.

இறைவன்

இறைவன்: தான்தோன்றீஸ்வரர் இறைவி: தர்மசம்வர்த்தினி

அறிமுகம்

ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் பேளூரில் அமைந்துள்ளது. கி.பி.12ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. முலவர் தான்தோன்றீஸ்வரர் (சிவன்) மற்றும் இறைவி தர்மசம்வர்த்தினி என்று அழைக்கப்படுகிறார். தான்தோன்றீஸ்வரர் கோவில் வசிஷ்ட நதி கரையில் அமைந்துள்ளது. அழகிய குன்றுகளால் சூழப்பட்ட இந்த ஆலயம் அமைதியான சூழலைக் கொண்டுள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருகிறது.

புராண முக்கியத்துவம்

பல வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில், மிளகு வியாபாரம் செய்து கொண்டிருந்த மாணிக்கம் செட்டியார், அவரது மிளகு வியாபாரத்திற்காக தினமும் மிளகு மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று சந்தையில் விற்று வருவார். ஒரு நாள் கலைப்பு ஏற்பட்டதன் காரணமாக ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் ஓய்வு எடுத்தார். அப்போது சமையல் செய்ய சுண்டைக் காய்களை ஒரு கல்லில் நறுக்கும் போது ஒரு குரலானது அவருக்கு கேட்டது. ‘எனக்கு கல்லடி பட்டு தலை வலிக்கிறது, உன் மிளகை அரைத்து பற்று போடு’ என்றபடி குரல் ஒலித்தது. மனிதர்களே இல்லாத இடத்தில் குரல் மட்டும் வருவதை கேட்டு பயந்த அந்த வியாபாரி, பயத்தில் ‘என்னிடம் மிளகு இல்லை உளுந்து தான் இருக்கின்றது’ என்று கூறிவிட்டு ஊருக்கு திரும்பி விட்டார். வீட்டிற்கு வந்ததும் மிளகு மூட்டைகளை திறந்து பார்த்தால் அதிர்ச்சி அடைந்தார். மிளகு முழுவதும் உளுந்தாக மாறி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அந்த வியாபாரி மீண்டும் அந்தக் குரல் ஒலித்த இடத்திற்கே சென்று இறைவனை வேண்டினார். அப்பொழுது மறுபடியும் அந்த குரல் ஒலித்தது. ‘நீ சுண்டக்காய் நறுக்கிய இடத்திலிருந்து மண்ணை எடுத்து உளுந்தின் மீது தூவு’ என்று கூறியது அந்த குரல். இதன் படி செய்ய உளுந்து மீண்டும் மிளகாக மாறியது. இதன் பிறகு தான் அந்த வியாபாரி, தான் சுண்டக்காய் நறுக்கிய கல்லை உற்று நோக்கினார். அது ஒரு சுயம்பு வடிவமான லிங்கம் என்று தெரியவந்தது. இதன் காரணமாகத் தான் அந்த மிளகு செட்டியார் இந்த கோயிலை கட்டியதாக ஒரு வரலாறு கூறுகிறது. இன்றளவும் அந்த மலையில் உள்ள மண் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அர்ச்சுனன் தமிழகத்தில் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு இங்குள்ள தீர்த்த மலைக்கு வந்துள்ளான். சிவபெருமான் மீது பக்தி கொண்டு சிவ பூஜை செய்ய திருமாலும் சிவபெருமானை நினைத்து உனது பாணத்தை இப்பகுதியில் செலுத்துவாயாக என்றார். சிவனை நினைத்து அர்ச்சுனனும் பிறைவடிவமானதொரு பாணத்தை மலையடிவாரத்தில் செலுத்த சிவன் மகிழ்ச்சி அடைந்து தன் கட்டுப்பாட்டில் உள்ள கங்கை நதியின் பத்தில் ஒரு பகுதி அந்த அம்பு பாய்ந்த இடத்திலிருந்து பெருகுமாறு செய்தார். சிவன் தனது சடைக்கற்றையிலிருந்து கங்கையை வெளிப்படச்செய்தார். அந்த நீர் வெண்மை பிரவாகமாக தோன்றியது. இந்நதியே வெள்ளாறு எனப் பெயர் பெற்றது. இத்தலத்துக்கு பெருமை சேர்க்கும் வசிஷ்ட மாமுனி சிவனருள் பெற்று இங்கு தங்கி வேள்வி செய்தார் என்று வரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்

இத்தலத்தில் உள்ள கல்யாண விநாயகருக்கு மாலை,தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்து மாலையை விநாயகர் கழுத்தில் போட்டால் கல்யாண பாக்கியம் கைகூடும். மனமுருக வேண்டிக்கொண்டால் கல்யாணபாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கைகூடுகின்றன.தவிர உத்தியோக உயர்வு, விவசாய செழிப்பு, கல்வி, செல்வம் ஞானம் ஆகியவை இத்தலத்து இறைவனை வணங்கினால் கிடைக்கும் என்று இத்தலத்து பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கமானது உளி படாமல் சுயம்புவாக தானே தோன்றியதால் இவர் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சித்திரை 3ஆம் தேதி முதல் பத்தாம் தேதி வரை சூரியனின் கதிர்கள் தான்தோன்றீஸ்வரர் மீது விழுவது சிறப்பாகக் கூறப்படுகிறது. தலமரம் : மா பலா இலுப்பை மரங்கள் மூன்றும் ஒரே மரமாக இருப்பது இத்தலத்தின் அதிசயம். தான்தோன்றீஸ்வரர் வழிபாட்டிற்காக அவ்வாலயத்தில் பலாமரம் ஒன்றை வசிஷ்டர் உண்டாக்கினார். இம்மரத்திற்காக கோயில் கட்டப்படும் காலத்திலேயே மூடுகற்களில் வளைவுகள் வெட்டி ஒதுக்கப்பட்டிருப்பதை பார்க்கையில் இம்மரம் ஆலயத்திற்கு முற்பட்டதெனத் துணியப்படும். வசிஷ்ட மாமுனி யாகம் செய்ய வேண்டி பரமசிவனை வேண்ட அவர் விரும்பிய வண்ணம் இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் தங்கினார். வசிஷ்டர் செய்த யாக பூமியில் உள்ள திருமண்ணே இன்றும் கோயிலில் திருநீறாக வழங்கப்படுகிறது. வசிஷ்ட முனிவரது யாக சாலையில் பொருந்திய விபூதியானது மேனியில் பட்டால் மதிக்கத்தக்க செல்வம் பெருகும்.

திருவிழாக்கள்

ஆடி பதினெட்டு, கார்த்திகை, அமாவாசை, பிரதோஷம்.

காலம்

12 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பேளூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வாழப்பாடி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top