Sunday Dec 22, 2024

பனங்குடி பார்வதீஸ்வர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு பார்வதீஸ்வர் திருக்கோயில், பனங்குடி,சன்னாநல்லூர்(வழி), நன்னிலம் தாலூகா, திருவாரூர் மாவட்டம். போன்: +91 4366 230241

இறைவன்

இறைவன்: பார்வதீஸ்வர் இறைவி: பார்வதீஸ்வரி

அறிமுகம்

காவிரிக் கரையில் உள்ள சிவ தலம், பனங்குடி, பொதுவாக காவிரிக் கரையை விட்டு இரண்டொரு காதம் தள்ளியுள்ள ஊர்களைக்கூட காவரிக்கு தென்கரை அல்லது வடகரைத் தலம் என்பார்கள். இந்தப் பனங்குடியோ காவரியின் கரையில், அதன் நீரோட்ட சலசலப்பே மணியோசை போல கேட்கும் அளவுக்கு அருகிலேயே அமைந்த அமைதி துவங்கும் கோயில். ஆற்றைத் தாண்டி கோயிலின் அடிவாசலைத்தொட ஒரு பாலம் முன்பு மூங்கில் பாலமாக இருந்து, இன்று கல் பாலமாகக் கட்டப்பட்டுள்ளது. கிழக்குப் பார்த்த கோயில். தெற்குப் பார்த்தும் கோயிலுக்கு ஒரு வாயில் உண்டு. அது தெருவைப் பார்த்த மாதிரி இருப்பதால், பக்தர்கள் பெரும்பாலும் அந்த வாயிலைத்தான் பயன்படுத்துகிறார்கள். இறைவன் திருநாமம், பார்வதீஸ்வரர் மனைவியின் பெயரையே தனதாய் கொண்டு உமாபதியாக இறைவன் எழுந்தருளியிருப்பதே இக்கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு.

புராண முக்கியத்துவம்

கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், கைலாசநாதர் உள்ளனர். அம்பிகை பார்வதீஸ்வரி தனிச் சன்னிதி கொண்டு, தெற்குப் பார்த்து எழுந்தருளியுள்ளார். கோயில் இருக்கும் தெருவில் உள்ள வீடுகள் எல்லாம் கி.மு.வை நினைவுபடுத்தும் அளவுக்கு பழமையாய்க் காட்சியளிக்கின்றன. ஒருமுறை இந்த கோயிலுக்கு வந்த காமகோடி மகா பெரியவர், பிரம்மசாரியாகவே வாழ்ந்து மறைந்த அக்னி தீட்சிதரைப் பற்றி ரொம்ப சிலாகித்துப் பேசினார். சுந்தரர் திருப்புகலூருக்குச் செல்லும்போது இவ்வூர் வழியாகச் சென்றுள்ளார். அப்போது இத்தலத்தின் மீது ஒரு பாடல் பாடி அருளும்படி அவரைக் கேட்டுக்கொண்டனர். ஆனால் சுந்தரர், ஏராளமான வேதியர்கள் உள்ள இந்த தலத்து இறைவனுக்கு அவர்கள் அன்றாடம் ஓதும் வேத ஒலி போதுமே, அதைவிட என் பதிகம் பெரிதல்ல என்று கூறி, ஆற்றுக்கு இக்கரையில் இருந்தே இறைவனைத் தொழுது விட்டுச் சென்றுள்ளார். பாம்புக் கடிக்கு இவ்வூரில் விசேஷ வைத்தியம் செய்து வந்தார்கள். எவ்வளவு கொடிய விஷம் கொண்ட பாம்பு தீண்டினாலும் இவ்வூர் வைத்தியர்கள் பார்வதீஸ்வரரை வேண்டி தரும் ஒருவேளை மருந்திலேயே உயிர் பிழைத்து விடுவார்கள். அதனால் அக்காலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனங்குடி வைத்தியம் என்றே சிறப்பாகக் குறிப்பிடுவார்கள். இப்போது அந்த வைத்தியக் குடும்பங்கள் ஏதும் இங்கில்லை; வைத்தியமும் இல்லை என்று கூறுகின்றனர் ஊர் மக்கள். இக்கிராமத்து அக்ரஹாரம் இன்று வெறிச்சோடிக் கிடக்கிறது. எல்லோரும் பட்டணம் போய் விட்டார்கள். ஆயினும் ஆண்டுக்கு ஒரு முறை இக்கோயிலுக்கு வந்து போகிறார்கள். காரணம், இந்த அக்ரஹாரத்துக்குடும்பத்தினர் பலருக்கு இந்த பார்வதீஸ்வரர்தான் குலதெய்வம். கோயில், இடையில் சிலகாலம் சிதிலம் அடைந்து கிடந்தன. ஊரார் ஒன்றுகூடி திருப்பணி செய்து, கும்பாபிஷேகமும் செய்திருக்கிறார்கள்.

நம்பிக்கைகள்

இங்கு அனைத்துவிதமான கோரிக்கைகள் நிறைவேறுவதால் பிரார்த்திக்கின்றனர். சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்யப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

கோயில் இருக்கும் தெருவில் உள்ள வீடுகள் எல்லாம் கி.மு.வை நினைவுப்படுத்தும் அளவுக்கு பழமையாய்க் காட்சியளிக்கின்றன. ஒரு காலத்தில் இங்கே வேதம் படித்த விற்பனைர்கள் நிறைந்திருந்துள்ளனர். வேதம் பயிலும் மாணவர்கள் வேத அத்தியயனம் பண்ணும் குரலொலி காலையும் மாலையும் தெருவெல்லாம் எதிரொலித்ததாகவும் சொல்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள். இங்கு வசித்த அக்னி தீட்சிதர் எனும் வேதியர், ஒரு கோடி முறை காயத்ரி மந்திரம் ஜபித்து, ஆன்ம சுத்தியும் சக்தியும் பெற்றிருந்தார். முக்காலமும் உணர்ந்த ஞானியாக விளங்கிய அவரது அதிஷ்டானம் அருகே உள்ளது. அதிலுள்ள மாடத்தில் எப்போதும் திருவிளக்கு எரிகிறது. செய்த பாவங்களை உணர்ந்து, இத்தல இறைவனிடம் மனமுருகி மன்னிப்பு கேட்டுக்கொண்டால் நற்கதி அருள்வார் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

திருவிழாக்கள்

பிரதோஷத்தன்று பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. மகா சிவராத்தரி இக்கோயில்களில் மிக விசேஷம். அன்று ஆறு கால அபிஷேகமும் பூஜையும் நடைபெறுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பனங்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top