Friday Dec 27, 2024

திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்திமுற்றம்-612 703. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 4374 267 237, 94436 78575, 94435 64221

இறைவன்

இறைவன்: சிவக்கொழுந்தீசர் இறைவி: பெரியநாயகி அம்மை

அறிமுகம்

திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீசர். இவருக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற வேறு பெயரும் இருக்கிறது. தாயார் பெரியநாயகி.இச்சிவத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சத்தி முற்றம் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 22ஆவது சிவத்தலமாகும். பெரிய கோயில், கிழக்கு நோக்கியது. வாயிலில் வல்லபை கணபதி காட்சியளிக்கிறார். ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடைது. வெளிப் பிராகாரம் பெரியது. இரண்டாங் கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சன்னதிகள் உள்ளன. அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியுள்ளது. நடராச சபை உள்ளது. மூல வாயிலின் முன்னால் ஒருபுறம் சோமாஸ்கந்தரும், மருபுறம் சத்தி, முத்தம் தரும் தல ஐதீக மூர்த்தியும் உள்ளனர். உட்பிராகாரத்தில் தல விநாயகரும் சோமாஸ்கந்தரும் ஆறுமுகம், கஜலட்சுமி சன்னதிகளும் உள்ளன.

புராண முக்கியத்துவம்

பக்தியே முக்திக்கு வித்து’ என்பதை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட சிவ, பார்வதி விரும்பினர். இதற்காக சக்தி, காவிரியாற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள சூரிய புஷ்கரணி சூல தீர்த்தத்தின் அருகே அமைந்துள்ள சக்திமுற்றத்தில் இறைவனை பூஜை செய்து வந்தாள். சிவன் காட்சி தர நீண்ட நாட்கள் ஆனது. ஆனால் பார்வதி உறுதி கலையாமல், தன் பக்தி நிலையானது என்று உறுதி செய்யும் வகையில் ஒற்றைக்காலில் நின்று கடும் தவம் மேற்கொண்டாள். சக்தியை சோதிக்க விரும்பி ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்தார் சிவன். தீப்பிழம்பாக காட்சி தந்தாலும், அதில் ஈசன் இருப்பதை உணர்ந்த பார்வதி அந்த நெருப்பை கட்டித்தழுவினாள். சிவன் குளிர்ந்து போனார். குடும்பத்தில் பிரச்னைகள் நெருப்பென தாக்கினாலும், அதை தம்பதியர் தங்கள் பரஸ்பர அன்பினால் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே இத்தல வரலாறு தம்பதிகளுக்கு காட்டுகிறது.

நம்பிக்கைகள்

சக்தி தழுவிய ஈசனை திருமணமாகாத ஆண்களும், பெண்களும் திங்கள்கிழமைகளில் வந்து வணங்கினால் தோஷங்களும், தடைகளும் நீங்கி நல்ல இல்வாழ்க்கை அமையும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழக்கூடிய கணவன், மனைவி இங்கு வந்து வணங்கினால் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 85 வது தேவாரத்தலம் ஆகும். இவ்வாலயத்தில் உள்ள சிவனை பார்வதிதேவி பூஜை செய்து தழுவி முத்தமிட்ட காரணத்தினால் இத்தலம் “திருச்சத்திமுத்தம்’ என பெயர் பெற்றது. மூலஸ்தானத்திற்கு அருகில் அம்மன் சிவலிங்கத்தை கட்டி தழுவி முத்தமிட்ட திருக்கோலத்தை இன்றும் தரிசிக்கலாம். சுவாமி சன்னதியின் வாசலின் வட புறத்தில் சக்தி முத்தமளிக்கும் தல ஐதிக மூர்த்தியும் உள்ளனர். இவ்வைதீகச் சிற்பத்தின் பின்புறம் அம்மன் ஒரு காலில் நின்று தவம் செய்யும் காட்சியையும் காணலாம். காஞ்சியில் அம்பிகை இறைவனைத் தழுவியிருப்பது போலவே இத்தலத்திலும் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு பார்வதி, அகத்தியர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசருக்கு இறைவன் தன் திருவடி தரிசனம் தந்த தலம். இத்தலத்தில் அமாவாசை, பவுர்ணமி வழிபாடு மிகவும் சிறப்பாகும்.

திருவிழாக்கள்

ஆனிமாதம் முதல் நாள் முத்துப்பந்தல். தைமாதம் ரதசப்தமி, கார்த்திகையில் சோமவார வழிபாடு சிறப்பு.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பட்டீஸ்வரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top