Wednesday Dec 25, 2024

திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், கீழைத்திருக்காட்டுப்பள்ளி, திருவெண்காடு அஞ்சல் – 609 114 சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 256 273, 94439 85770, 98425 93244

இறைவன்

இறைவன்: ஆரண்யேஸ்வரர் இறைவி : அகிலந்தநாயகி

அறிமுகம்

ஆரண்யேஸ்வரர் கோயில் சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் ஆரண்யேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தில் பன்னீர் மரம் தலவிருட்சமாகவும், தீர்த்தமாக அமிர்த தீர்த்தமும் உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 12வது தலம் ஆகும். ஆரண்ய முனிவர் இத்தலத்தை வழிபட்டதாக கூறப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

பிரம்மாவிடம் வரம் பெற்ற விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்ஹாரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோக தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க குருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான். அடர்ந்த வனத்தின் மத்தியில் சிவன், சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக்கண்ட அவன், சிவபூஜை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், “”நியாயத்திற்காக செய்யும் செயல் எத்தகையதாக இருப்பினும் அதற்கு பாவபலன் கிடையாது,” என்று சொல்லி அருள் செய்தார். இவரே இங்கு ஆரண்யேஸ்வரராக காட்சி தருகிறார்.

நம்பிக்கைகள்

தெரியாமல் செய்த பாவம் நீங்க, இழந்த பதவி கிடைக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்

6 சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி: மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், மேற்கு நோக்கி காட்சி தருகிறார். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். “காட்டழகர்’ என்றும் இவருக்கு பெயருண்டு. அம்பாள் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி கிடையாது. சுவாமி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். இவர் “ராஜயோக தெட்சிணாமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார். உயர்ந்த பொறுப்பில் இருந்து பதவி இழந்தவர்கள், நியாயமாக செயல்பட்டும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் ஆரண்யேஸ்வரருக்கும், தெட்சிணாமூர்த்திக்கும் வஸ்திரம் அணிவித்து, பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதனால் இழந்த பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோர் பிரகாரத்தில் இருக்கின்றனர். நண்டு விநாயகர்: இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வனால் வழிபடப்பட்டவர் இவர். எனவே இவர் “நண்டு விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பு. பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூசிக வாகனமும் இங்கு கிடையாது. நண்டு, இவருக்கு வாகனமாக இருப்பதால் மூசிக வாகனம் இல்லை என்கிறார்கள். சிறப்பம்சம்: ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது. அவரது பெயரால் சுவாமி ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுவதாவும் சொல்கிறார்கள். கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது.

திருவிழாக்கள்

நவராத்ரி, சிவராத்திரி, சித்திரை திருவிழா

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்காட்டுப்பள்ளி

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top