Friday Dec 27, 2024

மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துருத்தி – அஞ்சல் (வழி) கண்டியூர் – 613 103 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 – 97911 38256

இறைவன்

இறைவன்: புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர் இறைவி: சௌந்தரநாயகி

அறிமுகம்

மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் புஷ்பவனேஸ்வரர். இவர் ஆதிபுராணர், பொய்யிலியர் என்றும் அறியப்படுகிறார். அம்மன் சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி என்ற பெயர்களில் அறியப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலத்திருப்பந்துருத்தி என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தினை அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள் ஆகியோரும் பாடியுள்ளனர்.

புராண முக்கியத்துவம்

முற்காலத்தில் அகத்தியர் காகம் கவிழ்க்க அதிலிருந்து தோன்றிய காவிரியான ஆறாக கிழக்கு நோக்கி ஓடி, செந்தலையிலிருந்து அந்திலி, வெள்ளாம்பிரம்பூர், ஆற்காடு, கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருப்பழனம், திருவையாறு, திருநெய்த்தானம், சாத்தனூர் வரை சூழ இடைப்பட்ட இடங்களில் கடல்போல் தேங்கி நின்றுவிட்டது. இதற்கிடையில் உள்ள கோனேரிராஜபுரம், கருப்பூர், நடுக்காவேரி, திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி முதலிய ஊர்கள் எல்லாம் நீர்நிலையில் மூழ்கி இருந்தன. இந்திரன் ஐயாறப்பரை வழிபட்டு காவிரியை அவர் அருளால் கிழக்கு நோக்கி அழைத்துச்சென்று கழுமலப் பூங்காவை வளப்படுத்தினான். அவ்வாற காவிரி கிழக்கு நோக்கி ஓடுகையில் முதலில் காணப்பட்ட நிலப்பகுதி கண்டியூர். பின்னர் ஆற்று வண்டலும் மணலும் படிந்ததாய் தோன்றியது திருப்பூந்துருத்தி. அதற்கு மேற்கே ஆலமரம் இருந்ததாக காவிரி எக்கல் நிறைந்து மேடிட்ட பகுதி நிலம் மென்மையாக பூப்போல இருந்ததாலும், மலர் வாட்டத்தில் நிலம் அமைந்திருந்ததாலும் இந்நிலப்பரப்பை “”பூந்துருத்தி” என்று வழங்கிவந்தனர். இதனை பொருத நீர்வரு பூந்துருத்தி என்று அப்பர் கூறுகிறார். இதுபோல் ஆற்றிடையில் உண்டாகும் நிலப்பகுதிக்கு “”துருத்தி” என்று பெயர். காவிரியில் கிழக்கே உண்டாகிய மற்றொன்றிற்கு “”துருத்தி” (குற்றாலம்) என தற்காலம் வழங்குகின்றது. ஆதலால் நில அமைப்பு நோக்கி இப்பெயர்ஏற்பட்டது போலும். இந்திரன் கவுதமர் சாபத்தால் உடம்பெல்லாம் ஆயிரம் குறிகள் தோன்றப்பெற்ற சாபத்தை திருக்கண்ணார் கோயிலில் வழிபட்டு பிறருக்கு கண்களாக தெரிய வரம்பெற்றான். உடலெல்லாம் கண்ணாக தோன்றிய அந்நோயும் தீர வேண்டி பல தலங்களையம் சுற்றி வழிபட்டு வரும்போது மலர்க்காட்டிடையே மகாதேவன் உருவம் இத்தலத்தில் இருக்கக்கண்டு “”பூவின் நாயகனாய்” விளங்கிய பரமனை மலர்களைக்கொண்டு வழிபாடு செய்து நோய்நீங்கி,மலர் போல் தூய நல்லுடல்பெற்றான். ஆதலால் இப்பெயர் வந்தது என்பர். தேவர்கள்எல்லோரும் மலர்கொண்டு இறைவனை இத்தலத்தில் வழிபட்டதால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர். இதனை “வானோருலகமெல்லாம் வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும் வித்தானை’ என்று அப்பர் கூறுவதால் அறியலாம். திருமாலும், திருமகளும் இவ்வூர் இறைவனை வழிபட்டனர் என்பதை நாயக்க மன்னர் காலத்தில்கட்டப்பெற்ற ராஜகோபுரத்தில் உள்ள சிற்பம் காட்டுகின்றது. பூமகள் வழிபட்டதால் “”பூந்துருத்தி” என பெயர் வந்தது என்றும் கூறுவர். திருமழபாடி நந்திதேவர் திருமணத்திற்கு மலர்கள் தந்து உதவியதாகவும் அதற்கு நந்திதேவர் வந்து நன்றி கூறிவதாகவும் அமைந்த விழாவே “ஏழூர் வலம் வரும் விழா’ (சப்த ஸ்தான விழா) என்பர். ஆதலால் மலரோடு இத்தலம் தொடர்புடையது நன்கு பொருந்துவதைக் காணலாம். சோழநாட்டில் சில இடங்கள் மலர்தோட்டங்களாக இருந்துள்ளன. அவ்விடங்கள் “மலரி’ என்றும் “மலர்க்காடு’ என்றும் வழங்கி வந்துள்ளன. முற்கால முதல் பிற்காலசோழர் தலைநகராகிய தஞ்சைக்கு அருகில் அவர்கள் அடையாள மலராகிய “ஆர்’ஐ (ஆத்தி) வளர்த்த இடம் “ஆர்க்காடு’ என்று இதன் அருகில் உள்ளது. அதுபோல அரசரது பிற தேவைகளுக்கு வண்டல் நிறைந்த இத்துருத்தியை பூந்தோட்டமாக செய்து இதிலிருந்து மலர் கொண்டனர். ஆதலால் “மலர்க்காடு’ என்று இதற்கு மற்றொரு பெயரும் உண்டாயிற்று. இதனையே கி.பி.1782ம் ஆண்டு தஞ்சை துளசி மகாராஜா காலத்தில் “புஷ்பவனம்’ என்று மொழிபெயர்த்து கூறப்பட்டது என்பதை கல்வெட்டால் அறியலாம். சோழமன்னன் துருத்தியை வைத்துப் பூசிக்கச் செய்ததனால் திருப்பூந்துருத்தி என்று பெயர் வந்தது. என்று கூறுவர். ஆற்றிடைக் குறையில் உள்ள ஊர்கள் துருத்தி என்று வழங்கப்பெறும். இத்தலம் காவிரி, குடமுருட்டி ஆறுகளுக்கு கிடையில் அன்று விளங்கியதால் துருத்தி எனப்பெற்றது என்றும் கூறலாம். திருஞானசம்பந்தர் அப்பரைக் காண இத்தலத்திற்கு வந்தபோது அப்பர் ஒருவரும் காணாதபடி அவருடைய சிவிகையைத் தாங்கிவந்தது இத்தலத்தில் நிகழ்ந்ததாகும். மேலும் அப்பர் அடிகளார் திருமடம் அமைத்து திருப்பணி செய்து வந்ததும் இத்தலமேயாகும்.

நம்பிக்கைகள்

பித்ரு சாபம் நீங்க அமாவாசையன்று கிரிவலம் வந்து இறைவனைவழிபட்டால் சாபம் நீங்கும் என்பது நம்பிக்கை. திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்குள்ள சன்னதிகளில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இந்திரன், திருமால், லட்சுமி, சூரியன், காசிபர் ஆகியோர் வழிபட்ட தலம். இந்திரன் மலர்வலம் அமைத்து வழிபாடு செய்து உடல்நலம் பெற்றான். கழுகு உருவம் பெற்ற விஞ்ஞயர் இருவர் இத்தலத்தை அடைந்து மலர் வழிபாடு செய்து தம் உண்மை உருவம் பெற்றனர். ஆற்றிடைக் குறையிலுள்ள ஊர்கள் “” துருத்தி” என்று பெயர் பெறும். இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. (மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு தலமும் (குத்தாலமும்) துருத்தி என்று வழங்கப்படுகிறது). அப்பர் உழவாரத்தொண்டு செய்த தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. ஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான் தன் தோளிற் சுமந்த தலம். இவ்விடம் சம்பந்தர்மேடு என்று சொல்லப்படுகிறது. திருவாலம் பொழிலுக்குப் பக்கத்தில் வெள்ளாம்பரம்பூரையடுத்து இம் மேடு உள்ளது. அங்கு இருவருக்கும் கோயில் கட்டப்பட்டு, விழா நடைபெறுகிறது. அப்பர் அமைத்த “”திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்” என்று புகழப்படும் திருமடம் உள்ளதலம். இத்திருமடம் கோயிலுக்கு எதிரில் சற்றுத் தள்ளி உள்ளது. ஊர் பெரியது. மேலை, கீழை என இருபிரிவாகவுள்ளது. மேலைப்பூந்துருத்தியில்தான் கோயில் உள்ளது.

திருவிழாக்கள்

சப்த ஸ்தான திருவிழா, நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, திருக்கல்யாணம், திருவாதிரை, மகா சிவராத்திரி, பாரிவேட்டை

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்கண்டியூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top