மலைக்கோட்டை கீழ்க்குடைவரை கோயில், திருச்சி
முகவரி
மலைக்கோட்டை கீழ்க்குடைவரை கோயில், தெப்பக்குளம், திருச்சி மாவட்டம்- 620002
இறைவன்
இறைவன்: சிவன், விஷ்னு
அறிமுகம்
பல்லவர் குடைவரை கோவிலும், பாண்டியர் குடைவரை கோவிலும் அருகருகே அமைந்துள்ள சிறப்பு வாய்ந்தது திருச்சி மலைக் கோட்டையாகும். மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் போகும் வழியில் பல்லவர் குடைவரை அமைந்துள்ளது. மகேந்திரவர்மனால் இது குடையப்பட்டதாக கருதப்படுகிறது. மலையின் இடைச்சுற்றில், யானை கட்டுமிடத்திற்குத் தெற்கே சிறிது தொலைவில் பாண்டியர் குடைவரை அமைந்துள்ளது. இது பல்லவர் குடைவரையைவிடப் பெரியது. மலைக்கோட்டை கீழ்க்குடைவரை – தமிழகத்தின் தனிப்பெருந் தெய்வங்களுக்கு அமைக்கப்பட்ட ஒரே தளி. அறுவகை சமயத்தையும்(சைவம், காணபத்தியம், கெளமாரம், செளரம், சாக்தம்,வைணவம்) இறையுருவங்களாக கொண்டுள்ள தமிழகத்தின் தனிப்பெருந் தெய்வங்களுக்கு அமைக்கப்பட்ட ஒரே தளி திருச்சி மலைக்கோட்டை கீழ்க்குடைவரை. இரட்டை கருவறை அமைப்புடைய குடைவரை கோவில் இது. ஒன்று சிவனுக்குரியதாகவும் மற்றொன்று திருமாலுக்குரியதாகவும் உள்ளது. சிவனுக்குரிய கருவறையில் தற்போது இறையுருவம் எதுவும் இல்லை. குடைவரை கோவில்களுள் பிள்ளையாரை இங்கே தான் நின்ற நிலையில் நான்கு கரங்களுடன் காண முடிகிறது. அதனையடுத்து முருகனின் இறையுருவம் மேலே இரண்டு வித்யாதரர்கள் மற்றும் கீழே இரண்டு அடியார்களுடன் காணமுடிகிறது. அதனையடுத்து மூன்று முகம் தெரியுமாறு உள்ள பிரம்மாவின் இறையுருவத்தின் மேலே இரண்டு வித்யாதரர்களும், கீழே இரண்டு முனிவர்களும் உள்ளனர். அதனையடுத்து சூரியனின் இறையுருவத்தின் மேலே இரண்டு வித்யாதரர்கள் பறந்த நிலையிலும், கீழே இரண்டு அடியார்களும் உள்ளனர். அதனையடுத்து கொற்றவையின் இறையுருவம் மேலே இரண்டு வித்யாதரர்களுடனும் கீழே அரிகண்டம், நவகண்டம் கொடுக்கும் வீரர்களின் சிற்பத்துடன் காணப்படுகிறது. மற்றொரு கருவறையில் திருமால் இறையுருவம் உள்ளது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருச்சி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி