மருத்துவக்குடி சற்குணேஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்
முகவரி
மருத்துவக்குடி சற்குணேஸ்வரர் சிவன் கோயில், மருத்துவக்குடி, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609501.
இறைவன்
இறைவன்: சற்குணேஸ்வரர்
அறிமுகம்
மருத்துவக்குடி எனும் பெயரில் இரண்டு மூன்று ஊர்கள் உள்ளன, ஆடுதுறை அருகில் ஒன்று நாச்சியார்கோயில் அருகில் ஒன்றும் உள்ளது திருவீமிழலைக்கு மேற்கில் மூன்று கிமி தூரத்தில் அரசலாற்றின் கரையில் உள்ளது. மருத்துவக்குடி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சற்குணேஸ்வரர், இறைவி பெயர் தெரியவில்லை. கிழக்கு நோக்கிய திருக்கோயில், மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் கொண்டுள்ளது, தென்புறம் ஒரு சிறிய வாயில் உள்ளது, இறைவன் கருவறை இறைவியின் கருவறை இரண்டையும் இணைக்கும் வண்ணம் ஒரு முகப்பு மண்டபம் உள்ளது, இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக சகல வியாதிகளையும் போக்கும் வண்ணம் சற்குணமளிக்கும் ஈசனாக உள்ளார். இறைவியும் அழகிய வடிவில் உள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார். வடக்கில் சிறிய துர்க்கை ஒன்று மாடம்போன்ற அமைப்பில் வைக்கப்பட்டுள்ளது. தென்முகனின் எதிரில் ஒரு சற்று சிதைந்த பெரிய லிங்கம் ஒன்று சரியாக பொருத்தப்படாத நிலையில் வெயிலில் கிடக்கிறது. பிரகார சிற்றாலயங்களாக விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு அமைக்கப்பட்டுள்ளது. தென்புறம் சண்டேசர் தனி சிற்றாலயம் கொண்டுள்ளார். வடகிழக்கில் பைரவர் சனி இருவருக்கும் ஒரு சன்னதி உள்ளது. இறைவனின் நேர் எதிரில் நந்தி சிறிய மண்டபம் ஒன்றில் உள்ளார். ராஜகோபுரத்தின் இடதுபுறம் சிறிய மண்டபம் போன்ற ஒன்றில் சப்தகன்னிகள் வைக்கப்பட்டுள்ளன. அதனை ஒட்டி ஒரு உடைந்த விநாயகரும், பைரவர் சிலை ஒன்றும் உடைந்த நிலையில் கிடத்தப்பட்டுள்ளன.
புராண முக்கியத்துவம்
அகத்திய முனிவருக்கு திருமண கோலம் காட்டுவதற்காக சிவபெருமான் திருவீழிமிழலைக்கு வரும்போது மணவாள நல்லூரில் இருந்து மணக்கோலத்தில் புறப்பட, அப்போது உடனிருந்த சப்த ரிஷிகளும் மருத்துவகுடியில் தங்கி தங்களது பூஜைகளை முடித்துக்கொண்டு திருவீழிமிழலை சென்றதாக செவி வழி கதை உள்ளது. மணவாளநல்லூர் தென்கரையில் உள்ளது இந்த ஊர் வடகரையில் உள்ளது. மருத்துவக்குடியில் சப்த ரிஷிகள் சிவபூஜை செய்ததன் அடையாளமாக இன்றும் ஆங்காங்கே ஊரில் சில இடங்களில் லிங்கங்கள் உள்ளன. ஆற்றின் கரையில் இரண்டும், கோயிலுள் தனித்து ஒன்றும் உள்ளன. சிவபெருமான் திருவீழிமிழலைக்கு புறப்பட்டு வரும் முன்னர் விநாயகரை வழிபட மறந்துவிட்டாராம் அதனால் அவர் சென்ற பல்லக்கின் தண்டு முறிந்துவிட்டதாம், தான் செய்த தவறை உணர்ந்து உடனே ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்துவிட்டு புறப்பட்டு சென்றாராம். இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் உள்ளன அக்கோயிலில் இந்த மகாகணபதி உள்ளதாக கூறப்படுகிறது , அல்லது இக்கோயில் வெளியில் மதில் சுவற்றின் ஓரம் உள்ள உடைந்த கணபதி சிலை தான் அந்த மகாகணபதியா தெரியவில்லை. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
நம்பிக்கைகள்
நமது ஆன்மாவின் அனைத்து வியாதிகளையும் போக்கவே இறைவன் இந்த மருத்துவக்குடியில் நிலை பெற்றுள்ளார். எளிமையான கிராமத்தில் இருந்தாலும் மூர்த்திகரமானவர் இந்த ஈசன்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மருத்துவக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி