பாஸ்கரராஜபுரம் ஸ்ரீபாஸ்கரேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
பாஸ்கரராஜபுரம் ஸ்ரீபாஸ்கரேஸ்வரர் சிவன்கோயில்,
பாஸ்கரராஜபுரம், திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 609802.
இறைவன்:
ஸ்ரீபாஸ்கரேஸ்வரர்
இறைவி:
ஆனந்தவல்லி
அறிமுகம்:
கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் பாஸ்கரராயபுரம் என்று ஓர் ஊர் இருக்கிறது. அது தான் தற்போது பாஸ்கரராஜபுரம் என்று மருவியுள்ளது. 17-ம் நூற்றாண்டில், மகாராஷ்டிராவில் உள்ள பாகா எனும் ஊரில் பிறந்து, காசியில் உபநயனம் செய்யப் பெற்றவர் பாஸ்கரராயர். குஜராத்தில் பல இடங்களில் மத்வ சம்பிரதாயங்களில் தேர்ச்சி பெற்றவர்களுடன் வாதங்கள் செய்து, பராசக்தியின் பெருமை களை நிலைநாட்டினார். அப்போது தஞ்சையை ஆண்ட மன்னர், சரபோஜி மகாராஜா பாஸ்கரராயரின் பெருமைகளை பற்றிக் கேள்விப்பட்டு, காவிரிக்கரையில் ஒரு கிராமத்தை அவருக்குக் கொடுத்து, வசிக்கச் செய்தார் அது தான் இன்றைய பாஸ்கரராஜபுரம். அங்கு ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டு வந்தார்.
பாஸ்கரராயர் மறைவின் பின்னர் அவர் வழிபட்ட சிவலிங்கத்தை வைத்து, அந்த ஊரிலேயே ஸ்ரீபாஸ்கரேஸ்வரர் ஆலயத்தை நிர்மாணித்து வழிபட்டு வந்தார், பாஸ்கரராயரின் மனைவி ஆனந்தி. அதனால் இங்குள்ள அம்பிகைக்கு பெயரும் ஆனந்தவல்லி என பெயர் சூட்டி, வழிபட்டு வருகிறார்கள் மக்கள். மேற்கு நோக்கிய கோயில், முகப்பில் ராஜகோபுரம் இல்லை, இக்கோயிலில் விஷ்ணுவையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். தாயார் ஸ்ரீலக்ஷ்மிநாராயணி என்ற திருப் பெயருடன் அருட்காட்சி தருகிறாள். மேலும் இக்கோயிலில் ஓம்காரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகர் போன்ற தெய்வமூர்த்தங்களும் உள்ளன. சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், தற்போது கும்பாபிஷேகத் துக்காகக் காத்திருக்கிறது. கோயிலின் வெளிப்புறச் சுவர்களும், கோயில் விமானங்களும் சிதிலமடைந்துள்ளன. சரியான பாதுகாப்பில்லாமல் தனித்து உள்ளது.
இங்கு கோதண்டராமர் திருக்கோயிலும் உள்ளது. இங்குள்ள சீதாராமர் மற்றும் லக்ஷ்மணர் விக்கிரகங்களை மைசூர் மன்னர் தந்ததாக இவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். அண்ணாசாமி சாஸ்திரிகள் என்பவர் இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவர் மைசூர் மன்னரிடம் திவானாக இருந்துவந்துள்ளார். எனவே, மன்னர் திவானுக்கு அந்த விக்கிரகங்களைத் தந்தாராம். இந்த மூர்த்திகள் தற்போது பாதுகாப்பு அறையில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் முதல் தேதி 1008 தாமரை மலர்களால் மூல மந்திரத்துடன் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை அதிசிறப்பாக நடைபெறுகிறது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாஸ்கரராஜபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவிடைமருதூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி