பாலையூர் இயமனாதீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
பாலையூர் இயமனாதீஸ்வரர் சிவன்கோயில்,
பாலையூர், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611108.
இறைவன்:
இயமனாதீஸ்வரர்
இறைவி:
தர்மசம்வர்தினி
அறிமுகம்:
மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் இருந்து நாகை புறவழிசாலையில் ஐந்து கிமீ தூரம் வந்தால் வலதுபுறம் பாலையூர் பிரிவு உள்ளது. அதில் ஒரு கிமீ தூரம் சென்று ஊரின் மையத்தில் வலதுபுறம் செல்லும் கீழத்தெருவில் உள்ள கோயில் வாயிலில் கொண்டு சேர்க்கிறது. பாலை மரங்கள் அடர்ந்திருந்த நிலமாதலால் இப்பெயர் வந்திருக்கவேண்டும். வழக்கமாக கோயில்களில் திருவிழாவின் போது, சுவாமி மாடவீதிகளைச் சுற்றிவிட்டு கோயிலுக்குத் திரும்பிவிடுவார். ஆனால், நாகை பெரிய கோயிலில் இருந்து கிளம்பும் சுவாமி, நாகையைச் சுற்றியுள்ள ஏழு ஊர்களுக்குச் சென்றுவிட்டு கோயிலுக்குத் திரும்புகிறார். சாலிச மகாராஜா இந்த ஏழு தலங்களில் சிவபூஜை செய்தபின்பு, சிவன் இங்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். பாலையூர் இந்த வரிசையில் நான்காவதாக உள்ளது.
கிழக்கு நோக்கிய திருக்கோயில், உயர்ந்த கருங்கல் மதில் சுவர்களுடன் முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது, அதில் இறைவன் பெயர் யமனாதீஸ்வரர் என எழுதப்பட்டுள்ளது. பெரிய வளாகம் கொண்ட திருக்கோயில், நீண்ட கொட்டகையின் வழி கருவறையின் முன்னம் உள்ள முகப்பு மண்டபம் அடையலாம். இறைவன் கிழக்கு நோக்கியவர் இறைவி தெற்கு நோக்கியவர். இயமன் வழிபாட்டு பேறுகள் பெற்றதனால் இயமனாதீஸ்வரர் எனப்படுகிறார் என்கின்றனர். இறைவன் இயமனாதீஸ்வரர் இறைவி தர்மசம்வர்தினி முக மண்டபத்தில் நின்று இரு கருவறை தெய்வங்களையும் தரிசிக்கலாம். கோயில் முழுமையும் அற்புதமான கருங்கல் பணிகள், நகரத்தார் திருப்பணிகள் போல உள்ளது. எனினும் இது பற்றிய குறிப்பு இல்லை.
முகமண்டபத்தில் கருவறை வாயிலில் அலங்கார பித்தளை தலைவாயில் விளக்குகளும், உற்சவ மூர்த்திகள் வைக்கப்படும் அலங்கார மஞ்சமும் இருபுறமும் உள்ளன, மூர்த்திகள் தான் இல்லை. இறைவன் சற்று பெரிய அளவிலான லிங்கமூர்த்தியாக உள்ளார். அம்பிகையும் அழகு வடிவமாக உள்ளார். இரு தூண்களில் விநாயகரும் தண்டாயுதபாணியும் உள்ளனர். இறைவன் எதிரில் அழகிய நந்தி ஒன்று மண்டியிட்டு காத்திருக்கிறது. கருவறை கோட்டங்களில் தென்முகன், லிங்கோத்பவர், பிரமன் துர்க்கை உள்ளனர். பெரிய வளாகத்தில் தென்மேற்கில் விநாயகர் சன்னதி, அதில் விநாயகருடன், லக்ஷ்மிநாராயணர் உள்ளார் என்பது சிறப்பு. வடமேற்கில் முருகன்/வள்ளி/தெய்வானை சன்னதியும் உள்ளது. சண்டேசர் வழமையான இடத்தில் உள்ளார். வடகிழக்கில் ஒரு கிணறும், நவகிரகமும் நீண்ட மண்டபம் ஒன்றும் உள்ளன.
மண்டபத்தில் நீண்ட மேடையில் பைரவர், சோடச லிங்கபாணம் ஒன்றும், நால்வர் சிலைகளும், நாகர் சிலை ஒன்றும் அடுத்து ஒரு சிறிய காசிவிஸ்வநாதர் லிங்கமும் உள்ளது. கருவறையின் நேர் பின்புறம் மதிலில் மேற்கு வாயில் ஒன்றுள்ளது, அதன் வழி ஒரு காலத்தில் தீர்த்தவாரி கொடுக்க பின்புறம் உள்ள குளத்திற்கு சுவாமி எழுந்தள்ருவாராம். இன்றோ வருவதற்கும் தொழுவதற்க்குமே அடியார்கள் இன்றி உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாலையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி