Friday Dec 27, 2024

திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் திருக்கோயில், மதுரை

முகவரி

அருள்மிகு பரங்கிரிநாதர் திருக்கோவில் திருப்பரங்குன்றம் அஞ்சல் மதுரை PIN – 625005 PH: 0452-2482248

இறைவன்

இறைவன்: பரங்கிரி நாதர் இறைவி: ஆவுடைய் நாயகி

அறிமுகம்

திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் நக்கீரர் வாழ்ந்திருந்த தலம்.சிவனும், பார்வதியும் தோன்றி, முருகனுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவன் – பார்வதி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமே திருப்பரங்குன்றம் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் என அழைக்கப்படும் பரங்கிநாதர் ஆலயமாகும்.

புராண முக்கியத்துவம்

பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று. இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார். சுமார் 1050 அடி உயரமுள்ள மலை அடிவாரத்தில் வடக்கு திசை நோக்கி அமைந்திருக்கும் இந்த அழகுமிக்க குடைவரைக் கோவில் சிவபெருமானுக்காகவே தோற்றுவிக்கப்பட்டு ஒரு பாடல் பெற்ற தலமாக இருந்தாலும், இத்தலம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று என்ற காரணத்தினால் மிகவும் புகழுடன் விளங்குகிறது. மதுரையில் இருந்து மேற்கே சுமார் 8 கி.மி. தொலைவில் ஒரு சிறிய குன்றின் மீது மலையைக் குடைந்து கட்டப்பட்ட கோவில் இதுவாகும். 150 அடி உயரமுள்ள 7 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் கடந்தவுடன் உள்ள மண்டபத் தூண் ஒன்றில் தேவேந்திரன் தனது மகள் தெய்வயானையை முருகனுக்குக் கல்யாணம் செய்து கொடுப்பது போன்ற சிற்பம் நம் கருத்தைக் கவரும் வகையில் காட்சி அளிக்கிறது. இம்மண்டபத்திலுள்ள பெரிய நந்தி, அருகில் மயில் மற்றும் மூஞ்சூறு வாகன சிலா உருவங்கள் மிகவும் கண்ணைக் கவரும் நிலையில் இருக்கக் காணலாம். பல படிக்கட்டுகளை ஏறி கோவில் கருவறையை அடையலாம். கருவறை ஒரு குடவரைக் கோவிலாக உள்ளது. இதில் இறைவன் பரங்குன்றநாதர் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை, முருகப்பெருமான் வடக்கு நோக்கியும், பவளக்கனிவாய் பெருமாள் மேற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். பரங்குன்றநாதர் மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் சிறப்பு நுழைவுக் கட்டணம் செலுத்தி அதற்கான தனி வழியில் சென்றால் தான் பார்க்க முடியும். மேலும் மற்ற 3 சந்நிதிகளையும் அருகிலிருந்து தரிசிக்க முடியும். இல்லாவிடில் இலவச தரிசனத்தில் சற்று தொலைவிலிருந்து மற்ற 3 சந்நிதிகளான விநாயகர், துர்க்கை, முருகர் ஆகியோரை மட்டுமே பார்க்க இயலும். குடவரைக் கோவிலின் அமைப்பு அவ்வாறு அமைந்துள்ளது. முருகப் பெருமான் திருமணம்: முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் – தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

நம்பிக்கைகள்

திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கருவறை ஒரு குடவரைக் கோவிலாக உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

இதில் இறைவன் பரங்குன்றநாதர் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை, முருகப்பெருமான் வடக்கு நோக்கியும், பவளக்கனிவாய் பெருமாள் மேற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, சித்திரை திருவிழா

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்பரங்குன்றம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top