திருபுள்ளிருக்குவேளூர் வைத்தியநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், வைத்தீஸ்வரன் கோயில் – 609 117. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364- 279 423.
இறைவன்
இறைவன்: வைத்தியநாதர் இறைவி: தையல்நாயகி
அறிமுகம்
வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட்டுள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 16வது சிவத்தலமாகும். இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்தீசுவரன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம்
அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது.அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது.வைத்தீசுவரன் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது.இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.இங்கு மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன. 1. கற்பக விநாயகர். இவரை வழிபட்டால் என்ன வரம் கேட்டாலும் தருவார். 2. செவ்வாய் தோசம் உள்ளவர்கள் அங்காரகனை வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப் பெறுவர் . 3. வைத்தியநாதசுவாமி சர்வ ரோக நிவாரணி.இவரை வணங்கினால் தீராத பிணிகள் எல்லாம் தீரும். 4. செல்வ முத்துக் குமரர் என்ற முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பாக்கியம் தொழில் விருத்தி கிடைக்கும். 5.தையல் நாயகி அம்பாளை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோசம் என்ற குறை நீங்கும்.தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.
நம்பிக்கைகள்
தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு பல மாநிலத்து பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர். உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர். தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர். செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் அர்த்தசாமபூஜையில் முருகனின் திருவடிகளில் சாத்தப்பெறும் நேத்திரப்படி சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது. இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை வரம், தோச நிவர்த்தி ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். இவரது சன்னதியில் தரப்படும் வைத்தியநாதர் மருந்தை வாங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய்கள் பல தீருவதாக கூறுகிறார்கள். செவ்வாய் தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
சிறப்பு அம்சங்கள்
சித்தாமிர்த தீர்த்தம்: இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் குணமாகும் என்பது நம்பிக்கை. இதில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன. சதானந்த முனிவர் இங்குள்ள தீர்த்த கரையில் தவம் இருந்த போது, தவளையை பாம்பு விழுங்க முயற்சித்து, இவரது தவத்திற்கு இடையூறு செய்தது. கோபத்தில் இவர் விடுத்த சாபத்தினால் இந்த தீர்த்தத்தில் பாம்பு, தவளை இருப்பதில்லை. புள்ளிருக்கு வேளூர்: வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு.புள் – சடாயு என்ற பறவையும், இருக்கு – இருக்கு என்ற வேதமும் வேள் – முருகப்பெருமானும், ஊர் – சூரியனும் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற காரணத்தால் இத்தலப்பெயர் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் வந்தது. நோய் தீர்க்கும் திருச்சாந்து: 4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு “திருச்சாந்து’ எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. தோல் நோய்களுக்கு, இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர். வைத்தியநாதர் தன்னை வணங்கும் மக்களின் சாதாரண வியாதிகளை மட்டுமின்றி, பிறவிப்பிணியையே தீர்த்து விடுபவர். இவரை வணங்கினால் மன அமைதி, வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமண பாக்கியம், குழந்தை வரம், தோஷ நிவர்த்தி ஆகியன உண்டாகும். வைத்தியநாதர் பல மாநில மக்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறார். கோயிலின் கிழக்கேயுள்ள நுழைவிடத்தில், ஆதிவைத்தியநாதர் அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த சிவன் சன்னதியை தரிசித்தால், அது ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளை தரிசித்த பலனைத்தரும் என்பது ஐதீகம். வைத்தியநாதரும் மேற்கு நோக்கி உள்ளார். முருகப்பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம். இராமர் வழிபட்டு அருள் நலமுற்ற தலம். செவ்வாய் தோஷ நிவர்த்தி: இந்தக் கோயிலிலுள்ள அங்காரகன் சன்னதியில் செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை மற்றும் பல சிரமங்களை அனுபவிப்போருக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் திசை 7 வருடம் நடக்கும். நிலம் வாங்க, கடன் தொல்லை நீங்க, மூட்டு வலி குணமாக இவரை வணங்குவது சிறப்பு. செவ்வாய் தோஷம் நீங்க, முருகன் வழிபாடு, கார்த்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது, துவரை, செப்பு பாத்திரம் ஆகிய பொருள்கள் தானம் செய்வது, அங்காரகனுக்கு அபிஷேகம் செய்து சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது. சடாயுகுண்டம்: இத்தலத்தில் சம்பாதி சடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். சடாயுவின் வேண்டுகோளின்படி இராமபிரான் இத்தலத்தில் (விபூதி குண்டத்தில்) சிதையடுக்கிச் சாடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் சடாயு குண்டம் எனப்பட்டது. வீரசேனன் என்ற அரசன் சயரோத்தினால் பீடிக்கப்பெற்ற சித்திர சேனன் என்ற தன் மகனுடன் இத்தலத்திற்கு வந்து நீராடி இக்குண்டத்திற்கு அதிரசம் வடை முதலியன நிவேதனம் செய்து வேதிகையையும் பொன்னால் திருப்பணி செய்து குண்டத்திலுள்ள நீற்றை அள்ளி எடுத்துத் தானும் அணிந்து தன் புதல்வனுக்கும் அணிவித்து நோய் நீங்கப்பெற்று நலமுற்றான். செல்வ முத்துக்குமாரர்: வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையாதலால், இங்குள்ள முருகன் “செல்வ முத்துக்குமாரர்’ என அழைக்கப்படுகிறார். சூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார். செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் தினமும் நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது புனுகு, பச்சைக்கற்பூரம், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம், பால் சாதம், பால் ஆகியவற்றுடன் விசேஷ பூஜை செய்யப்படும். முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான். தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும். முத்துக்குமாசுவாமிக்கு தைமாதம் செவ்வாய்கிழமை ஆரம்பித்து 10 நாள் விழா நடக்கும். பங்குனியில் கோயிலின் பிரமோற்ஸவம் 28 நாள் நடைபெறும். மகாலட்சுமிக்கு சன்னதி உள்ளது. நவகிரக தலங்களில் இது அங்காரக தலம் ஆகும். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமி மேற்கு பார்த்த சந்நிதி. இங்கு தரப்படும் வில்வம், விபூதி, புற்றுமண் தைலம் ஆகியவற்றைக் கொண்டு தரப்படும் மருந்து வெண்குஷ்ட ரோகம் குணமாகிறது. செல்வ முத்துக் குமாரராக இத்தலத்தில் முருகன் தன் தகப்பனாரைப் பூஜிக்கிறார். இத்தலத்தில் நவகிரகங்கள் வரிசையாக இருக்கும். எல்லா தலங்களிலும் சுவாமிக்கு முன்புற பிரகாரத்தில்தான் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் நவகிரகங்கள் சுற்றுப்பிரகாரத்தில் சுவாமிக்கு பின்புறம் உள்ளது. இராமர் பூஜித்த தலம் இது. தையல் நாயகி அம்மனை வணங்கினால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலதோஷம் நீங்கும். செவ்வாய்க் கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்வார். மருத்துவத்துறையில் படிப்பவர்கள் இங்கு வழிபாடு செய்ய ஏராளமாக வருகின்றனர்.
திருவிழாக்கள்
தைமாதம் – தை செவ்வாய் – 10 நாட்கள் திருவிழா – செல்வமுத்துக்குமரர் சுவாமிக்கு இந்த திருவிழா சிறப்பாக நடைபெறும் – பத்து நாட்களும் தினமும் சுவாமி வீதியுலா பங்குனி – பிரம்மோற்சவம் – 28 நாட்கள் – பஞ்சமூர்த்தியும் அபிசேக ஆராதனைகளோடு சுவாமி புறப்பாடு. ஐப்பசி – கந்த சஷ்டி – 6 நாள் விழா வைகாசி – மண்ணாபிசேக, மண்டலாபிசேக கிருத்திகை உள்ளிட்ட மாதாந்திர கிருத்திகைகளும் இத்தலத்தில் சிறப்பாக இருக்கும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வைத்தீஸ்வரன் கோவில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி