Sunday Nov 24, 2024

திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு சாரனாதப்பெருமாள் திருக்கோயில் திருச்சேறைஅஞ்சல், கும்பகோணம்வட்டம்,தஞ்சைமாவட்டம்-612 605. போன்: 0435-2468001.

இறைவன்

இறைவன்: சாரநாதன் அம்மன்: பஞ்சலெட்சுமி

அறிமுகம்

சாரநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினைந்தாவது திருத்தலம். தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி இந்த திருச்சேறை. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த திருச்சேறை என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்துகள் இத்தலம் வழியே செல்கின்றன.

புராண முக்கியத்துவம்

பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்து மண்ணை எடுத்து ஒரு கடம் செய்து அதில் வேதங்களை வைத்து காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது. ஒரு முறை காவிரித்தாய் பெருமாளிடம்,””அனைவரும் கங்கையே உயர்ந்தவள். அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமை பேசுகிறார்கள். அத்தகைய பெருமை எனக்கும் வேண்டும்,”என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். “”தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது,”என காவிரி கூறியவுடன், கருட வாகனத்தில் சங்கு சக்கர தாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி கொடுத்து, “வேண்டும் வரம் கேள்’ என்றார். அதற்கு காவிரி,””தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும். கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும்,”என்றாள். பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.

நம்பிக்கைகள்

செய்த பாவங்கள் விலக இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. இத்த பெருமாளை வழிபாடு செய்தால் 100 முறை காவிரியில் குளித்த புண்ணியம் கிடைக்கிறது.

சிறப்பு அம்சங்கள்

பூதேவியின் தந்தை மார்க்கண்டேயர்: மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயர் வீற்றிருக் கிறார் மார்க்கண்டேயர் இத்தலத்தில் தான் முக்தியடைந்தார். உப்பிலி யப்பன் கோயிலில் தனது மகள் பூதேவியை சிறுவயதிலேயே பெருமாள் விரும்புகிறார். அதற்கு மார்க்கண்டேயர்,””சுவாமி! இவள் சிறு பெண். இவளுக்கு சரியாக உப்பு போட்டு கூட சமைக்க தெரியாது. அப்படி இருக்கும் போது நீங்கள் எவ்வாறு இவளை திருமணம் செய்து கொள்ள முடியும்,”என்கிறார். அதற்கு பெருமாள்,””இவள் உப்பே போடாமல் சமைத்தாலும், அதை நான் திருப்தியாக ஏற்று கொள்வேன்”என்று கூறி பூதேவியை திருமணம் செய்து கொள்கிறார். அன்றிலிருந்து பெருமாள் உப்பிலியப்பன் என்ற திருநாமத்துடன் உப்பில்லாத நைவேத்தியத்தை ஏற்றுகொள்கிறார். மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி சன்னதியின் திருப்பணிக்காக அழகிய மணவாள நாயக்கர் மன்னன் ஆணைப்படி இவ்வூர் வழியாக வண்டிகள் சென்றன. வண்டிக்கு ஒரு கல்வீதம் இக்கோயில் திருப்பணிக்கு நரசபூபாலன் என்பவன் மன்னனுக்கு தெரியாமல் இறக்கி வைத்தான். இதைக்கேள்விப்பட்ட மன்னன் விசாரிக்க இங்கு வந்தான். இதனால் பயந்த நரசபூபாலன், இத்தல பெருமாளை வேண்டினான். பெருமாள் மன்னனுக்கு மன்னார்குடி ராஜகோபாலனாக காட்சி கொடுத்தார். மகிழ்ந்த மன்னன் இக்கோயிலுக்கும் சிறப்பாக திருப்பணிகள் செய்தான்.

திருவிழாக்கள்

தைப்பூச விழா பத்து நாள் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் தேர்விழா. காவிரித்தாய்க்கு காட்சியளித்த தைமாதம், பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் போது இந்த சாரபுஷ்கரணியில் நீராடுவது என்பது மகாமகத்திற்கு ஈடானது என்பதால் இதை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருச்சேறை

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

தஞ்சை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top