Thursday Nov 21, 2024

சாமளாபுரம் சோழீயீஸ்வரர் கோயில், திருப்பூர்

முகவரி :

சாமளாபுரம் சோழீயீஸ்வரர் கோயில்,

சாமளாபுரம், பல்லடம் வட்டம்,

திருப்பூர் மாவட்டம் – 641668.

இறைவன்:

சோழீயீஸ்வரர்

இறைவி:

தில்லைநாயகி அம்பாள்

அறிமுகம்:

சாமளாபுரம் சோழீயீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயிலில் சோழீயீஸ்ரர், தில்லைநாயகி சன்னதிகளும், தில்லைநாயகி, பஞ்சலிங்கம், சூரியன், அருள்மினு சந்திரன், தண்டபானி, பைரவர், தட்சிணாமூர்த்தி, 63 நாயன்மார்கள், வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர், விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

 முற்கால மன்னர்கள் வனத்தை சீர்படுத்தி நாடாக்கி, குளம் வெட்டி, வளம் பெருக்கி, கோயில் நிர்மாணித்து குடிகளை அமர்த்தினர். அப்படி அமைக்கப்பட்ட கோயில்களுள் சாமளாபுரம் சோழீஸ்வரர் கோயிலும் ஒன்று. ஊரும், கோயிலும் மன்னன் கரிகாலன் காலத்தில் உருவானது. உத்தம சோழனின் மகன், உறையூர் சோழன் எதிரிகளிடமிருந்து தப்பிச் செல்லும் போது, சோழன் மாண்டான், கொங்கு நாடு வந்தடைந்த அரசியர்  அக்ரஹாரம் ஒன்றில் தங்கினர். உரிய நாளில் அரசியர் சிங்கம்மாள் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அவன் வளர்ந்து கல்வி, கலைகளில் வல்லவன் ஆனான்.

உறையூரில் சமூகத் தலைவர்கள் மூவரும் நாட்டுக்கு ஓர் சரியான அரசர் இல்லையே என வருந்தினர். காசிக்குச் சென்று விசாலாட்சி அம்மனைத் தொழுது, அங்கிருந்த வெள்ளை யானையை அழைத்துக் கொண்டு திருவாரூர் வந்தடைந்தனர். தியாகராஜரை வணங்கி, அவர் கழுத்தில் இருந்த மாலையைப் பெற்று வெள்ளையானையின் துதிக்கையில் கொடுத்து, நீ யாரைத் தேர்வு செய்தாலும் அவர்தான் எங்கள் மன்னர் எனக் கூறி அனுப்பி வைத்தனர்.

வெள்ளை யானை ஒவ்வொரு இடமாகச் சென்று கொங்கு நாட்டிற்கு வந்தது. குளக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த  அரசியர் சிங்கம்மாள் மகன் 12 வயதுச் சிறுவனுக்கு மாலையைப் போட்டு, தன் மீது ஏற்றிக்கொண்டு சோழநாடு புறப்பட்டது. சிறுவனுக்கு திலகமிட்டு, கரிகாலன் எனப் பெயர் சூட்டி, வாழ்த்தினர். பின்னர் யானையிடம், உனது ராஜாவை கூட்டிச் செல் என்றனர். வெள்ளை யானை கரிகாலனை ஏற்றிக் கொண்டு திருவாரூர் தியாகராஜர் கோயில் முன் வந்து நின்றது. பிறகு, அவன் அமைத்த சிவன்கோயில்களுள் ஒன்றுதான் சோழீஸ்வரர் கோயில்.   

நம்பிக்கைகள்:

ஈசனுக்கு சோமவாரத்தில் இளநீர் அபிஷேகமும், கமல தீபமும் (சுவாமிக்கு பின்னால் உள்ள தீபம்) ஏற்றி 12 வாரங்கள் வழிபட்டால் மனசஞ்சலம் நீங்கும். அம்பாளுக்கு சஷ்டி மற்றும் பவுர்ணமியன்று பால், தேன், அபிஷேகம் செய்து வழிபடும் தம்பதியருக்கு புத்திரபாக்யம் கிடைக்கும் என்று பலன் பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

மேற்கு நோக்கி அமைந்த கோயில். பொதுவாக மேற்கு நோக்கிய சிவன்கோயில்களுக்கு ஆற்றல் அதிகம் என்பர். வெளியே மண்டபத்துடன் கூடிய நெடிதுயர்ந்த விளக்குத் தூண் உள்ளது. அடுத்து ஐந்து நிலை ராஜகோபுரமும், தொடர்ந்து 16 தூண்களைக் கொண்ட மகா மண்டபமும் உள்ளது.

நான்காயிரம் சதுர அடி பரப்பளவில் சித்திர மண்டபம் போல் காட்சிதரும் மகா மண்டபம் சோழீஸ்வரர், தில்லைநாயகி சன்னிதிகளை இணைத்து ஒரே மண்டபமாகத் திகழ்கிறது. கருவறையில் சோழீஸ்வரர் என்ற திருநாமத்தில் இறைவன் எழுந்தருள, கோஷ்டத்தில் சிவதுர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி மற்றும் நர்த்தன விநாயகர் அருள்கின்றனர்.

தேவி நாற்கரங்களுடன் நின்ற கோலத்தில் தில்லைநாயகி என்னும் திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். திருவாச்சியுடன் ஒரே கல்லினாலான சிலாரூபம். திருச்சுற்றில் வராகி, பிராம்மி, வைஷ்ணவி அருள்கின்றனர். மகாமண்டபத்தில் நந்திகேஸ்வரர் இறைவனை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கின்றார்.

உட்பிராகாரத்தில் சூரியன், சந்திரன், தண்டாயுதபாணி, வள்ளி – தேவசேனா சமேத சுப்ரமணியர், பைரவர், சனிபகவான், நவகிரகம், சண்டிகேஸ்வரர், பஞ்சலிங்கம், அறுபத்துமூவர் ஆகியோர் தனிச்சன்னிதிகளில் எழுந்தருளியுள்ளனர். 

திருவிழாக்கள்:

இக்கோயிலில் பிரதோஷம், அமாவாசை , கார்த்திகை , பவுர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் உண்டு. மகாசிவராத்திரியும், ஆருத்ரா தரிசனமும் வருட முக்கிய பெருவிழாக்கள். அதுதவிர ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகமும், மாசி அமாவாசையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சாமளாபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருப்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top