சன்னியாசி கிராமம் கல்யாண சீனிவாசர் திருக்கோயில், திருநெல்வேலி
முகவரி :
அருள்மிகு கல்யாண சீனிவாசர் திருக்கோயில்,
சன்னியாசி கிராமம்,
திருநெல்வேலி மாவட்டம் .
போன்: +91- 462 – 233 4624.
இறைவன்:
தெய்வம் கல்யாண ஸ்ரீனிவாசர் (ஸ்ரீ வெங்கடாசலபதி)
இறைவி:
அலர்மேலு தாயார்
அறிமுகம்:
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகருக்கு அருகில் உள்ள சன்னியாசி கிராமத்தில் அமைந்துள்ள கல்யாண ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. கோவில் தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மூலஸ்தான தெய்வம் கல்யாண ஸ்ரீனிவாசர் (ஸ்ரீ வெங்கடாசலபதி) என்றும் தாயார் அலர்மேலு தாயார் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தீர்த்தம் கோபால ஸ்ரீனிவாச தீர்த்தம். இக்கோயிலின் ஆகமம் வைகானசம் ஆகும். வரலாற்று ரீதியாக இந்த இடம் வித்யாகோபாலபுரம் என்று அழைக்கப்பட்டது. இக்கோயிலில் உள்ள இறைவன் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாசலபதியின் பிரதியாக இருப்பதால், இத்தலம் தென் திருப்பதி என்று போற்றப்படுகிறது.
சன்னியாசி கிராமம் திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் திருநெல்வேலியிலும், அருகிலுள்ள விமான நிலையம் மதுரையிலும் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அல்லல்படும் மனித இனத்தின் மீது கருணை கொண்ட நாராயணன், சீனிவாசன் என்ற திருநாமம் கொண்டு மனித வடிவில் பூவுலகிற்கு வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் தங்கினார். தாமிரபரணியில் குடிகொண்ட அவரை அறிந்து கொண்ட முனிவர்கள், மகரிஷிகள், சித்தர்கள், மகாபுருஷர்கள் என அனைவரும் அவரைத் துதித்து வணங்கி வந்தனர். அவர்களில் சன்னியாசி ஒருவர் இருந்தார். அவருக்கு, சுவாமியின் மனிதரூப காலம் முடிந்து விட்டால், மனித குலம் நற்பயன்கள் பெறமுடியாத சூழல் வந்து விடுமோ?’ என்ற பயம் எற்பட்டது. எனவே, நாராயணனை நோக்கி தவம் புரிந்தார். அவரது, குரலுக்கு செவிசாய்த்த நாராயணர், அருட்காட்சி தந்தார். அவ்விடத்திலேயே கோயில் கொண்டு மக்களைக் காப்பதாகக் கூறி அருளினார். இவ்வாறு, சன்னியாசியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நாராயணர் இத்தலத்தில் வீற்றிருந்து கல்யாண சீனிவாசர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இந்த இடத்துக்கும் சன்னியாசி கிராமம் என்ற பெயர் ஏற்பட்டது.
நம்பிக்கைகள்:
இத்தலத்தில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதியை வேண்டினால் படிப்புத் தடை விலகும், திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு, நல்லவேலை கிட்டும், எண்ணிய காரியங்கள் நிறைவேறிடும். ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபட்டு வர, வழக்குகளில் வெற்றி கிட்டும், வியாதிகள் தீரும் என நம்பப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
திருப்பதிக்கு சென்று பிரார்த்தனையை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனையை செலுத்துகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் பெருமாளை வழிபட்டால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் தீபாவளி பண்டிகையின் போது கல்யாண சீனிவாசருக்கு ஒரு மண்டலம் (41 நாள்) அலங்காரம் செய்து உற்சவம் நடப்பது சிறப்பு. இத்தலத்தில் அருள்புரியும் வெங்கடாஜலபதி திருப்பதியில் இருப்பதைப்போலவே தோற்றம் கொண்டுள்ளார். இதனால், இத்தலம் “தென்திருப்பதி’ என்ற சிறப்பு பெயர் பெற்றுள்ளது. சுவாமி தனது வலது மார்பில் ஸ்ரீதேவி, இடது மார்பில் பூதேவி ஆகியோரைத் தாங்கியபடி, கையில் சங்கு, சக்கரம் கொண்டு, இடுப்பில் சந்திரவம்ச உடைவாளுடன் கூடிய ஒட்டியாணம், மேனியில் சப்தகிரி, லட்சுமி, துளசி, தாமரை, செண்பக மாலைகள் அணிந்து, திருப்பாதத்தில் தண்டை, கொலுசு அணிந்த அற்புத கோலத்தில் அருட்காட்சி தருகிறார். அர்த்தமண்டபத்தில் அலமேலு தாயார் தனியே நின்றிருந்தும், அவருக்கு இடப்புறம் கைகளில் ஆயுதங்களை ஏந்தியபடி ஆசி வழங்கிய கோலத்தில் வராகம், கருடன், நரசிம்மர், ஹயக்ரீவர் ஆகிய திருமுகங்களுடன் தனது முகம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயரும் பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றனர். ஒரே நேரத்தில் வெங்கடாஜலபதி, அலமேலு தாயார், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய மூவரையும் தரிசனம் செய்வது போல கோயில் அமைந்துள்ளது. சுவாமிக்கு பின்பு வலப்புறம் லட்சுமி, இடப்புறம் ஆண்டாள் ஆகியோர் மதிற்சுவரில் இருந்து அருள்புரிகின்றனர்.
திருவிழாக்கள்:
தமிழ் புத்தாண்டு, ஆனிப்பூரம், தீபாவளி, நவராத்திரி, புரட்டாசி பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், ராப்பத்து உற்சவம்.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருநெல்வேலி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருநெல்வேலி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி