கோவிலாம்பூண்டி சிவன்கோயில், கடலூர்
முகவரி
கோவிலாம்பூண்டி சிவன்கோயில் கோவிலாம்பூண்டி, சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் – 608 002.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
சிதம்பரம் நகரின் வடகிழக்கு பகுதியில் மூன்று கிமி தூரத்தில் உள்ளது கோவிலாம் பூண்டி. கடலூர் சாலை சிதம்பரத்தில் நுழையும் இடத்தில் உள்ள வண்டிக்கட்டு நிறுத்தம் தாண்டியதும், பள்ளிப்படை எனும் இடத்தில் கோவிலாம் பூண்டி சாலை பிரிகிறது அதில் மூன்று கிமி சென்றால் கோவிலாம்பூண்டி.. கூவிளம் என்னும் சொல் வில்வ மரத்தைக் குறிக்கும். சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் கூவிளம் என்பதும் மலராக காட்டப்பட்டுள்ளது. பூண்டி என்றால் தோட்டம் என பொருள், வில்வமரக்காடாக இருந்ததால் கூவிளம் பூண்டி என அழைக்கப்பட்டு பின்னர் கோவிலாம் பூண்டி என ஆகியிருக்கலாம். கிராம சாலை இருப்புபாதை ஒன்றை கடந்து அதனை ஒட்டியபடி இடது வலது என வளைகிறது, சிறிய வாய்க்கால் பாலத்தினை ஒட்டிய ஒரு நகரின் அலங்கார வளைவின் வழி உள்ளே நுழைந்தால் இருப்பு பாதை மேட்டின் சரிவில் ஒரு லிங்க பாணம் ஒன்று கிழக்கு நோக்கியபடி இருத்தப்பட்டுள்ளது.
புராண முக்கியத்துவம்
லிங்க பாணம் ஒன்று கிழக்கு நோக்கியபடி எதிரில் ஓர் நந்தியும், அருகில் ஒரு ஜேஷ்டா தேவி சிற்பம் ஒன்றும் உள்ளது, சற்று அருகில் ஒரு உடைந்த விஷ்ணு சிலை ஒன்றும் உள்ளது… ஆங்கிலேய ஆட்சியில் இருப்பு பாதை போடப்பட்டபோது இங்கிருந்த 7ம் நூற்றாண்டு சிவாலயம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றே புரிந்துகொள்ள முடிகிறது. காலம் தின்றது போக மீதியுள்ளவை இவை மட்டுமே. வானமே கூரையாக, மழையே அபிஷேகமாக, கேங்க்மேன்கள் தட்டும் சப்தமே மணியொலியாக, தொடர்வண்டியின் தடதடக்கும் சப்தமும், சக்கரங்களின் கிரீச்சொலியும் வேதபாராயணமாக கேட்டுக்கொண்டு தனக்கொன்றுமில்லை என்றாலும், அவ்வப்பது என்போன்று வருவோர் போவோர்க்கு அருள்பாலித்துக்கொண்டுள்ளார். எம்பெருமான். பல நூறாண்டுகளாக பல ஆயிரம் சிவபக்தர்கள் கண்டு பயன்பெற்ற சிவனாரை காண்பதே பெரும் பேறு. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோவிலாம்பூண்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி