Saturday Oct 12, 2024

கூரத்தான்குடி எமசம்ஹாரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :

கூரத்தான்குடி எமசம்ஹாரேஸ்வரர் திருக்கோயில்,

சன்னதி தெரு, கூரத்தான்குடி, கீழ்வேளூர் வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 610106.

இறைவன்:

எமசம்ஹாரேஸ்வரர்

இறைவி:

குங்குமவல்லி

அறிமுகம்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கூரத்தான்குடி என்ற சிற்றூரில் பாண்டவையாற்றின் கரையில்தான் எமசம்ஹாரேஸ்வரர் என்ற பெயரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. வனவாசத்தின்போது பாண்டவர்களால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. பாண்டவர்கள் தங்களை யாரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க இத்தலத்திலுள்ள குங்குமவல்லியையும், ஈசனையும் வணங்கி அருள் பெற்ற பின்னரே அஞ்ஞாத வாசம் தொடங்கினார்கள்.  கூற்று ஆகிய எமனின் பாசக் கயிற்றை ஈசன் அறுத்து அவனுக்கு நற்கதியை அருளியதால் கூற்று அறுத்தான் கொடி என்று வழங்கி காலப்போக்கில் மருவி கூரத்தான்டி ஆனதாக கூறப்படுகிறது. நாகை – திருவாரூர் சாலையில் கீழ்வேளூரில் இருந்து தெற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிள்ளுக்குடி என்ற இடத்தில் இருந்து மேற்கே 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

 மிருகண்டு மகரிஷி புத்திரன் பாக்கியம் வேண்டி ஈசனை நோக்கி தவம் செய்ததில் மகரிஷிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அவனுக்கு ஆயுள் பதினாறு என்று கூறினார் இறைவன். சித்தப்படி நடக்கட்டும் என்று மார்க்கண்டேயன் என பெயரிட்டனர். அவனது ஆயுள் குறித்து கூறியபோது ஈசன் துணை இருப்பார் என்று கூறி பல தலங்களில் சென்று பூஜித்து வந்தான் மார்கண்டேயன். அவனது காலம் முடியும்போது காலன் அவனை ஆட்கொள்ள வந்தான். அவனது பாசக்கயிற்றை அவன் மீது வீசும் போது, அவன் சிவ நாமத்தை உச்சரித்துக் கொண்டே சிவலிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டிருந்தான். அப்போது அவன் மீது வீசிய பாசக்கயிறு லிங்கத்திருமேனி மீது சேர்ந்து வீசவே, லிங்கத்திருமேனியை பிளந்து ஈசன் காலசம்ஹார மூர்த்தியாக வந்து எமதர்மனை சம்ஹாரம் செய்து விட்டார். இதனால் உலகில் மரணம் நிகழவில்லை. பூமியின் பாரம் தாங்காமல் பூமாதேவி ஈசனிடமே முறையிட்டார்.

இதையடுத்து ஈசன் மனமிரங்கி எமதர்மனுக்கு மறுபடியும் வாழ்வளித்தருளினார். எமன் வீசிய பாசக்கயிறு சர்வேஸ்வரனின் மேல்ப்பட்டதால் எமனுக்கு தோஷம் பிடித்தது. இதனால் மனம் வருந்தி ஈசனை வேண்டினார். ஏழு தளங்களில் தன்னை பூஜ்க்கும்படியும் எங்கே தன் அருங்காட்சி கிடைக்கிறதோ அதில் அவன் பாவங்கள் நீங்கும் என்றும் அருள்பாலித்தார். ஆறு தலங்களை வழிபட்டு பின் கொண்டவை ஆற்றங்கரை பகுதிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்து கண்ணீர் மல்க வேண்டினார். இறைவன் மணமிறங்கி திருக்காட்சி தந்த தோஷங்களை நீக்கி நற்கதி அடைந்தான். எமதர்மனின் வேண்டுகோளின்படி இத்தலத்திற்கு வந்து தன்னை வணங்கும் பக்தர்களுக்கு மரணபயம் நீங்கி மோட்சம் கிட்டும் என வரம் தந்தருளினார்.

நம்பிக்கைகள்:

விருச்சிக ராசிக்காரர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொண்டால் அவர்களின் தோஷங்கள் நீங்கி வாழ்வில் நல்வாழ்வு பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்:

மூலவருக்கு இடப்புறம் தனி சன்னதி கொண்டு தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் குங்குமவல்லி. வெள்ளிக்கிழமைகளில் இந்த அன்னைக்கு நல்லெண்ணை விளக்கேற்றி வழிபட்டு வந்தால் திருமணத் தடை நீங்கி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

அருமருந்து விநாயகர் தனி சன்னதியில் எழுந்தருளி உள்ளார். இவரை வழிபட்டால் விரைவில் பிணிகள் தீரும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் அருள்கிறார். தந்தையை போல பிள்ளையும் காலசம்ஹார மூர்த்தியாக தரிசனம் கிடைப்பது அரிது.

பிரயோக சக்கரத்துடன் காட்சி தரும் விஷ்ணு துர்க்கை நினைத்த காரியத்தை நிறைவேற்றி தந்து அருள்புரிகிறார்கள். இங்கே கம்பீரமாய் கால பைரவரை வணங்கினால் காசிக்கு சென்று கால பைரவரை வணங்கி பலன்கள் கிட்டும் என்கின்றனர். தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

திருவிழாக்கள்:

ஆண்டுதோறும் சித்திரை முதல் திரளான பக்தர்கள் கலந்து கொள்ளும் காவடி அபிஷேகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது அமாவாசை, கிருத்திகை, தேய்பிறை அஷ்டமி, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கூரத்தான்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top