Monday Jan 20, 2025

குறுக்குத்துறை முருகன் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

குறுக்குத்துறை முருகன் திருக்கோயில்,

குறுக்குத்துறை,

திருநெல்வேலி மாவட்டம் – 627001.

இறைவன்:

சுப்பிரமணிய சுவாமி

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி நகரத்திலிருந்து சுமார் 9 கிமீ தொலைவில் குறுக்குத்துறை முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தாமிரபரணி நதி வற்றாததால் ஜீவ நதி என்றும் அழைக்கப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் நீராடிவிட்டு, ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த அழகிய முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வணங்கி செல்வதை காணலாம்.     

திருநெல்வேலி மாநகரிலிருந்து தென் கிழக்கே சுமார் 2.5 கி. மீ தொலைவில் அமையப் பெற்றுள்ளது குறுக்குத்துறை கோவில். இங்கு செல்ல பேருந்து வசதிகள் குறைவு என்பதால் தனியார் வாகனங்களில் செல்வதே சிறப்பு.

புராண முக்கியத்துவம் :

       முற்காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள இந்த பகுதியில் காணப்படும் கல் பாறைகள் தெய்வ திருவுருவங்களை வடிப்பதற்கு ஏற்றதாக இருந்துள்ளது. இங்குள்ள பாறையில் இருந்து தான் முன்னர் திருச்செந்தூர் கோவிலின் மூலவர் திருவுருவம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படி திருச்செந்தூர் முருகனை உருவாக்கிய சிற்பி, பின்னர் வள்ளி, தெய்வானை உடன் கூடிய மற்றொரு முருகன் விக்ரகம் செய்ய நினைத்து, இங்கிருந்த கல் பாறை ஒன்றில் வள்ளி, தெய்வான் உடன் கூடிய முருகனின் திருவுருவை செதுக்கினார். ஆனால் என்ன காரணத்தாலோ அந்த பணி முழுமை பெறாமல் முருகன் சிற்பமானது கல் பாறையில் செதுக்கப்பட்ட கோலத்திலேயே தங்கி விட்டது.

பின்னர் வந்த நாட்களில் வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக இந்த வழியாக வந்த போது, கல் பாறையில் செதுக்கப்பட்டிருந்த முருகனின் சிற்பத்தைக் கண்டார். முருகனின் அழகிய அந்த திருவுருவை கண்டதும் அந்த அம்மையார், தூய பக்தியோடு தினமும் அங்கு வந்து அந்த முருகனின் திருவுருவத்திற்கு வழிபாடுகள் செய்து வந்தாராம். அவரை தொடர்ந்து ஆற்றுக்கு நீராட வந்தவர்கள் பலரும் இந்த முருகனை வழிபடத் தொடங்கிட., நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்திட, சிறிது சிறிதாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த பாறையை ஒட்டி சிறிய கோவில் கட்டப்பட்டது. பின்னர் இந்த திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

திருச்செந்தூர் முருகன் விக்ரகத்தை போன்றே சிற்பியால் பாறையில் வடிவமைக்கப்பட்ட திருமேனி இங்குள்ள மேலக் கோவிலில் மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதனால் திருச்செந்தூர் முருகனின் சாந்நித்யம் பெற்றவர் இத்தல சுப்பிரமணியர் என்றும் கூறப்படுகிறது.

மூலவர் சுப்பிரமணிய சுவாமி: இங்கு கருவறையில் பாறையில் குடையப்பட்ட திருமேனியாக வள்ளி, தெய்வானை உடன் நான்கு கரங்கள் கொண்டு நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார் சுப்பிரமணிய சுவாமி.

மேலக் கோவில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி: இங்கு கருவறையில் வலது மேல் கரத்தில் வச்சிராயுதம் தாங்கியும், வலது கீழ்க் கரத்தில் மலர் ஏந்தியும், இடது மேல் கரத்தில் ஜெப மாலை கொண்டும், இடது கீழ்க்கரத்தை தொடையில் வைத்த நிலையிலும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் சுப்பிரமணிய சுவாமி.

சிறப்பு அம்சங்கள்:

திருக்கோவில் அமைப்பு: தாமிரபரணி ஆற்றின் வட கரையில் கிழக்கு நோக்கி அமையப் பெற்றுள்ள இந்தக் கோவிலின் முகப்பில் சிறிய அளவிலான மூன்று நிலை ராஜ கோபுரம் உள்ளது. இந்த ராஜ கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் மணி மண்டபம், கொடிமரம், பலி பீடம், மயில் வாகனம் ஆகியன உள்ளது. இதனைத் தாண்டி உள்ளே நுழைந்தால் மூலவர் சன்னதிக்கு தெற்கே விநாயகரும், வடக்கே சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். அவர்களை வணங்கி உள்ளே சென்றால் மகா மண்டபம். மகா மண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபம் மற்றும் குடைவறை கருவறை உள்ளது. கருவறையின் இருபுறமும் துவார பாலகர்கள் இருக்க உள்ளே பாறையில் குடையப்பட்ட திருமேனியாக சுப்பிரமணியர் காட்சித் தருகிறார். கருவறைக்கு முன் புற மண்டபத்தில் வடக்கே நெல்லையப்பர், காந்திமதி அம்மை, நடராசர், விநாயகர் ஆகியோரும் காட்சித் தருகின்றனர்.

மகா மண்டபத்தின் வடக்கே தெற்கு நோக்கிய தனி சன்னதியில் வள்ளி, தெய்வானை உடனுறை ஆறுமுகப் பெருமான் காட்சித் தருகிறார். கருவறை பாறையை சுற்றி பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், சுப்பிரமணியர், சனீஸ்வரர், பஞ்ச லிங்கங்கள், சண்டிகேசுவரர் ஆகியோரும் முன்னே தெற்கு நோக்கிய சன்னதியில் பைரவரும் காட்சித் தருகிறார்கள்.

மேலக் கோவில் சிறப்பு: இந்தக் கோவில் தாமிரபரணி ஆற்றின் நடுவே அமையப் பெற்றுள்ளதால், மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது குறுக்குத்துறை கோவில் முழுவதும் தண்ணீரில் மூழ்கி விடும். இதற்காக இந்த கோவிலின் மேற்கே சுமார் 1 கி. மீ தொலைவில் ஊருக்குள் ஒரு தனிக் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதுவே மேலக் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் முன்புறம் அலங்கார மண்டபம் காட்சியளிக்கிறது. அதனை தாண்டி உள்ளே சென்றால் இங்கும் கருவறையில் சுப்பிரமணியர் நின்ற கோலத்தில் செந்தூர் முருகனை போன்றே காட்சித் தருகிறார்.

மழை காலங்களில் தாமிரபரணியில் வெள்ளம் ஏற்பட்டு விட்டால் கீழக் கோவிலில் இருக்கும் உற்சவர் சுப்பிரமணியர் மற்றும் ஆறுமுகப் பெருமானை இந்த மேலக் கோவிலுக்கு எழுந்தருள செய்து நித்ய பூஜைகள் நடைபெறும்.

திருக்கோவில் சிறப்புக்கள்: இங்குள்ள திருக்கோவில் தாமிரபரணி ஆற்றின் நடுவே அமையப் பெற்றுள்ளது. பல வருடங்களாக ஆற்றின் வெள்ளத்தை தாக்கு பிடித்து எந்த வித பாதிப்புகளும் இன்றி கம்பீரமாக காட்சித் தருகிறது. பெருகி வரும் வெள்ளத்தை கிழித்து பிரிக்கும் வகையில், இந்த கோயிலின் மேற்கு பகுதி மதிற் சுவர் படகின் முனை போல கட்டப்பட்டு இருக்கிறது. இதனால் வெள்ளம் வந்து மோதும் போது இந்த கூர்மையான சுவரில் பட்டு சிதறி ஓடி விடும் என்பதால்., கோயிலுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.

இங்குள்ள முருகப் பெருமான், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி போலவே கையில் மலர் ஏந்தி சிவ பூஜை செய்யும் கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பு.

இங்குள்ள சுப்பிரமணியர், திருச்செந்தூர் முருகனுக்கும் முதல்வர் என்பதால், திருச்செந்தூருக்கு நேர்ந்து கொண்ட, நேர்த்தி கடன்களை இங்கு செலுத்தி வழிபடலாம் என கூறப்படுகிறது.

இங்கு திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு நடைபெறுவதை போன்றே வருடத்திற்கு இரண்டு திருவிழாக்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் ஆவணி மற்றும் மாசி மாதம் இரண்டு முறை திருவிழா என்றால் இங்கு சித்திரை மற்றும் ஆவணி மாதம் இரண்டு முறை திருவிழா நடைபெறுகிறது.

இங்கு நடைபெறும் ஆவணி மற்றும் சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளன்று இத்தல ஆறுமுகப் பெருமான் தங்கச் சப்பரத்தில், சிவப்பு சாத்தி கோலம் பூண்டு திருநெல்வேலி மாநகருக்கு எழுந்தருளுவார். அப்போது திருப்பணி முக்கில் வைத்து ஆறுமுகப் பெருமானுக்கு வைரக் கிரீடமும், வேலும் சாத்தப்படும். பின்னர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேர் வீதிகளில் உலா வந்து மறுநாள் காலை வெள்ளிச் சப்பரத்தில், வெள்ளை சாத்தியாகி, மாலை பச்சைக் கடைசல் சப்பரத்தில், பச்சை சாத்தியாகி தேர் வீதிகளில் உலா வந்து குறுக்குத்துறை சேர்வார்.

திருவிழாக்கள்:

இங்கு சித்திரை மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறும்.

இங்கு வைகாசி விசாகத் திருவிழா சிறப்பாக நடைபெறும் அன்று இங்குள்ள கருவறை சுப்பிரமணியருக்கு தஙுகக் கவசம் சாத்தப்படும்.

இங்கு ஆவணி மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் ஒன்பதாம் நாளும் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

இது தவிர திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை மற்றும் திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top