குரங்குபுத்தூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
குரங்குபுத்தூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், குரங்குபுத்தூர், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609107
இறைவன்
இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: மீனாட்சி
அறிமுகம்
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் 18கிமி தூரமும், மயிலாடுதுறையில் இருந்து 20 கிமி தூரத்திலும் உள்ளது கருவி முக்குட்டு (முச்சந்தி) இங்கிருந்து பூம்புகார் சாலையில் மேலும் ஒரு கிமி சென்றால் குரங்கு புத்தூர் உள்ளது. இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன, பிரதான சாலையின் தெற்கில் ஒன்றும் வடக்கில் ஓடும் காவிரியின் கரையில் ஒன்றும் உள்ளன. நாம் வடதிசையில் ஓடும் காவிரிக்கரையில் அமைந்துள்ள சிவாலயத்தை காண்போம். பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறிய தெரு ஒன்று காவிரி கரை வரை நீள்கிறது. கடைசியாக மரங்களடர்ந்த ஒரு தனி வீட்டின் அருகில் நிற்கிறது. சிறிய வாய்க்கால் போல் குறுகி புதர் மண்டி கிடக்கிறது காவிரி. இந்த வாய்க்காலின் கரையில் அமைந்துள்ளது இக்கோயில்.
புராண முக்கியத்துவம்
கிழக்கு நோக்கிய இறைவன் சுந்தரேஸ்வரரும் அவரின் இடப்பால் கிழக்கு நோக்கிய மீனாட்சியும் அருகருகே கோயில் கொண்டுள்ளது சிறப்பு. இது ஒரு கல்யாண கோல தரிசனம், தம்பதியராக இவரை வணங்குதல் நன்று. இரு சன்னதிகளையும் நீண்ட முகப்பு மண்டபம் இணைக்கிறது. மண்டபத்தின் மேல் பஞ்சமூர்த்தி சுதைவடிவங்கள் உள்ளன. கோயில் சிறிய அளவாயினும் கீர்த்தி மிக்கது. கோயில் எதிரில் பெரிய அரசமரமும் அதனடியில் ஒரு விநாயகரும், நாகர்களும் உள்ளன. இறைவன் நடுத்தர லிங்க வடிவினர், அம்பிகையும் அவ்வாறே. இருவர் முன்னமும் சிறிய நந்தி உள்ளது. கருவறை வாயிலில் விநாயகர் ஒருவர் உள்ளார். சண்டேசர் இறைவனின் கோமுகம் அருகில் உள்ளார். வடகிழக்கில் பைரவர் சனி சூரியன் உள்ளனர். விசேஷ நாட்களில் மக்கள் வந்து செல்கின்றனர். கோயில் எதிரில் உள்ள தனி வீட்டில் சொன்னால் வந்து திறந்து காட்டுவார்கள். 2009ல் கடைசியாக குடமுழுக்கு கண்டுள்ளது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குரங்குபுத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி