குன்னத்தூர் பஞ்சமுக கைலாசநாதர் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
குன்னத்தூர் பஞ்சமுக கைலாசநாதர் சிவன்கோயில், குன்னத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 102
இறைவன்
இறைவன்: பஞ்சமுக கைலாசநாதர்
அறிமுகம்
சென்னையிலிருந்து – புதுச்சேரி செல்லும் சாலையில், மகாபலிபுரம் தாண்டியதும் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது குன்னத்தூர் கிராமம். இடதுபுறமாக காணப்படும் ஆர்ச்சைத் தாண்டி ஊருக்குள் சென்றோம். சாலையின் நிறைவில் வலது புறமாக ஊரின் பள்ளிக்கூடத்தின் எதிரே அமைந்திருந்தது அந்த லிங்கத்திருமேனி. அரசனைப் போன்ற கம்பீரத்தில், செம்பவளத் திருமேனியராக, சிந்தாமணித் தேவராக லிங்கத் திருவுருவினராக அமர்ந்திருந்தார் அருள்மிகு கனகாம்பிகை சமேத பஞ்சமுக கயிலாசநாதர். ஒடுக்கமான ஒரு தகரக் கொட்டகையில் லிங்கத்திருமேனி அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. ஈசனைச் சுற்றிலும் பள்ளம். அதில் மழை நீர் தேங்கியிருந்தது. சிறிய காம்பவுண்டுக்குள் இருந்தது ஆலயம். ஈசனுக்கு இடதுபுறம் ஓர் ஓரத்தில் அம்பிகையின் திருமேனியும் காலபைரவர் சிலையும் இருந்தன. எதிரே சிதிலமான சிலைகள் பலவும் கிடந்தன. ஒரு காலத்தில் இந்த ஆலயம் பிரமாண்டமாக திகழ்ந்திருக்க வேண்டும். அதற்கு சாட்சியாக ஆலயத்தின் வெளியே பெரும் கற்றூண்களும், சிற்ப வேலைகள் நிறைந்த கற்பலகைகளும் கிடக்கின்றன.
புராண முக்கியத்துவம்
ஒருகாலத்தில் இந்த ஊரே இந்த ஐயனுக்குச் சொந்தமாக இருந்தது. இப்போது எல்லாமே மாறி, ஐயன் இந்தக் குறுகிய இடத்தில் அமர்ந்திருக்கிறார். வேறெங்கும் காண்பதற்கரிய பஞ்சமுக மூர்த்தி இவர். தொன்மை அறிய முடியாத இந்த ஈசன் பல்லவர்கள், சோழர்கள், சம்புவரையர், விஜயநகர வேந்தர்கள் ஆகியோர் காலத்தில் போற்றிக் கொண்டாடப்பட்டவர் என்பதை அறிய முடிகிறது. அந்நியர்களின் படையெடுப்புகளில் ஆலயம் சிதிலமுற்று நாளடைவில் பாழடைந்துபோக, ஸ்வாமியும் தன்னை மறைத்துக் கொண்டார். ஏறக்குறைய 300 ஆண்டுகளாக முட்புதரில் கிடந்தவர், தற்போது எட்டு ஆண்டுகளாக எங்களின் வழிபாட்டில் இருக்கிறார். பெயர்க்கப்பட்ட ஆலயத்தின் கற்களைக் கொண்டே, ஊர் ஏரியின் மதகுகள் அமைக்கப்பட்டதாம். அதேபோல் இங்குள்ள தூண்கள் பலவும் சுற்றுவட்டாரத்தில் பல கோயில்களுக்குப் பயன்படுத்தப்பட்டனவாம். இவ்வளவு பிரமாண்ட இராஜதிருமேனியருக்கு எவ்வளவு பிரமாண்ட மான ஆலயம் இருந்திருக்க வேண்டும். இப்போது, தகரக் கொட்டகையில் அல்லவா குடியிருக்கிறார் இந்த ஐயன். ஊரில் ஆங்காங்கே பிரமாண்டாமான பாறைகளை உள்ளது. சிறிய குன்றுகள் அதிகம் சூழ்ந்த ஊர் இது. அதனாலேயே இது குன்றத்தூர் என்று வழங்கப்பட்டு, பின்னாளில் குன்னத்தூர் என்றானதாம் ஊரின் பெயர். ‘அஞ்சி நடுங்கியோற்கு அடைக்கலம் தந்த குன்றத்தூர்’ என்று கல்வெட்டு ஒன்று இந்த ஊரைச் சிறப்பிக்கிறது. ஆலயத்தின் வாயிற்புறத்தில் கல்வெட்டு ஒன்று உள்ளது. சம்புவரையர் காலத்தைய இந்தக் கல்வெட்டு, ஊரின் வளத்தை விளக்குகிறது. ஊர் ஏரியைத் தூர் வாரும்போது, அங்கிருந்தும் சிதிலமான பல சிலைகளைக் கண்டெடுத்துள்ளனர். அவற்றில் முழுமையான உருவுடன் கிடைத்த பிரமாண்ட மூத்ததேவி சிலையும், துர்கை சிலையும் ஏரிக்கு அருகிலேயே வைக்கப்பட்டுள்ளனவாம்.
நம்பிக்கைகள்
மழலை வரம் அருளும் மகேசன் இவர். கும்பிட்ட கை கீழிறங்கும் முன்னே பல காரியங்களை நடத்திக் கொடுத்திருக்கிறார் இவர்.
சிறப்பு அம்சங்கள்
கேட்டதைக் கொடுப்பது சிந்தாமணி. பாற்கடலில் தோன்றியது. இதன் வண்ணத்தில் பஞ்சமுக பட்டை லிங்கமாக அருள் பாலிக்கிறார் இங்குள்ள ஈசன். தேவலிங்க வகைகளில் பஞ்சமுக லிங்கம் முதன்மையானது என்பர்.
திருவிழாக்கள்
பிரதோஷமும் மாத சிவராத்திரியும் இங்கு பெரும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குன்னத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை