Friday Nov 22, 2024

குண்டையூர் சொக்கநாதசுவாமி திருக்கோயில், நாகப்பட்டிணம்

முகவரி

குண்டையூர் சொக்கநாதசுவாமி திருக்கோயில், குண்டையூர், திருக்குவளை அஞ்சல், நாகப்பட்டிணம் மாவட்டம் – 610204.

இறைவன்

இறைவன்: சுந்தரேஸ்வரர் / சொக்கநாதசுவாமி இறைவி: மீனாட்சி

அறிமுகம்

பாடல் பெற்ற சிவஸ்தலம் திருக்குவளையில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் குண்டையூர் உள்ளது. இறைவன் – சுந்தரேஸ்வரர் என்றும் இறைவி – மீனாட்சி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. கிழக்கிலும், தெற்கிலும் வாயில்கள் உள்ளன. கிழக்கு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. அதையடுத்து மூலவர் கருவறைக்குச் செல்லும் இரண்டாவது வாயில் உள்ளது. உள்ளே கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறை முன்பும் ஒரு நந்தி உள்ளது. கருவறை முன் மண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் மகாகணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகர் மற்றும் கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. பைரவர், சூரியன் ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் காட்சியளிக்கின்றனர். குண்டையூர் கிழாருக்கும் இப்பிரகாரத்தில் தனி சந்நிதி உள்ளது. இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.

புராண முக்கியத்துவம்

குண்டையூர் என்ற ஊரில் வேளாள மரபை சேர்ந்தவர் குண்டையூர்க் கிழார். இவர் சுந்தர நாயனார் மீது அதிகமான அன்பு கொண்டவர். அதனால் சுந்தரர் குடும்பத்திற்கு மாத மாதம் செந்நெல், அரிசி, பருப்பு முதலிய மளிகை பொருட்களை அனுப்பி கொண்டு இருந்தார். ஒரு சமயம் நாட்டில் பஞ்சம் ஏற்பட அந்த ஊரில் நெல் விளைச்சல் அடியோடு பாதிப்படைந்தது. இதனால் சுந்தரரின் குடும்பத்திற்கு எவ்வாறு விளைச்சல் இன்றி நெல் அனுப்புவது என்ற கவலைப்பட்ட குண்டையூர்க் கிழார் இறைவனை எண்ணி நொந்தார். சிவபெருமான் குண்டயூர் கிழாரின் கனவில் தோன்றி, “கவலைப்படாதே நான் இப்போதே குபேரன் மூலம் உனக்கு போதிய நெல்மணிகளை கொடுக்கிறேன்.“ என்று கூறினார். திடுக்கிட்டு எழுந்த கிழார். வானம் தொடும் அளவு குண்டையூர் முழுவதும் நெல் மலை போன்று குவிந்து இருப்பதைக் கண்டார். கிழார் அழைப்பின் பேரில் குண்டையூர் சென்ற சுந்தரர் நெல்மணி வானத்தை தொடும் அளவில் குவிந்து கிடந்ததைக் கண்டு சுந்தரர் அதிர்ச்சியடைந்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச் சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் விழித்தார். பிறகு இப்பிரச்னைக்கு தீர்வுகாண கோளிலிநாதரிடம் பதிகம் பாடி நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச் செல்ல வகை செய்யுமாறு வேண்டிக் கொண்டார். சுந்தரர் பதிகம் பாடி கேட்டுக்கொண்டதின் பேரில் இறைவன் நெல்லை திருவாருரில் சுந்தரர் வீட்டில் சேர்ப்பித்தார். சுந்தரர் நெல் பெற்ற விழா இத்தலத்தில் மாசி மக நாளில் நடைபெறுகிறது. கோயிலில் குண்டையூர் கிழாரின் மூல / உற்சவத் திருமேனிகள் உள்ளன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குண்டையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டிணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top