Saturday Dec 28, 2024

காளி திருகாமேசுவரர் கோயில், நாகப்பட்டினம்

முகவரி :

காளி திருகாமேசுவரர் கோயில்,

காளி, மயிலாடுதுறை வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 609811.

இறைவன்:

திருகாமேசுவரர்

இறைவி:

அபிராமி, பாலசுகாம்பாள்

அறிமுகம்:

ஊரைக் காத்த காளியின் பெயரால் அழைக்கப்படும் தலம், பெண்களின் மாதவிலக்கு குறை நீக்கும் திருக்கோவில், அபிராமி, பாலசுகாம்பாள் என இரண்டு அம்மன்கள் குடிகொண்ட சிறப்புமிக்க தலம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு விளங்குகிறது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காளி என்னும் திருத்தலம். இந்தக் கோவில் சோழமன்னன் ராஜராஜதேவன் எனும் இரண்டாம் ராஜராஜ சோழனின் காலத்தில் சிறப்பு பெற்று இருந்தது. இவ்வாலயத்தின் தென்புற கருவறைச் சுற்றில் அமைந்துள்ள கல்வெட்டு இதற்கு சான்றாக அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம்,

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், காளி திருத்தலம் அமைந்துள்ளது. திருமணஞ்சேரிக்கு வடக்கே சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக் கிறது. சென்னையிலிருந்து தென்மேற்கே 260 கிலோமீட்டர் தூரத்திலும், மயிலாடுதுறைக்கு மேற்கே 12 கிலோமீட்டர் தூரத்தில் இந்த தலம் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வசதி உள்ளது.            

புராண முக்கியத்துவம் :

 பழங்காலத்தில் இவ்வூரில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாளின் பெயரால், இந்த ஊர் ஸ்ரீனிவாசபுரம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. ஒரு சமயம் வரலாறு காணாத புயலும், வெள்ளமும் இந்த ஊர் மக்களை வாட்டியது. பலருக்கு கடுமையான காய்ச்சலும் தொற்றிக் கொண்டது. இதனால் மக்கள் செய்வதறியாது தவித்தனர். அப்போது அந்த ஊர் பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள் ‘உங்களுக்கு உதவ, காளியின் திருவுருவம் ஊரின் ஆற்றோரம் உள்ள மந்தைக் கரையில் காத்திருக்கிறது. விடிந்ததும் அங்கு சென்று அந்தக் காளியை எடுத்து வந்து வழிபடுங்கள். உங்கள் குறைகள் அனைத்தும் தீரும்’ என்றார்.

அதன்படியே விடிந்ததும் ஊர்மக்கள் மந்தைக்கரைக்குச் சென்றனர். அங்கே கனவில் கூறியபடியே, அழகிய காளியம்மன் சிலை ஒன்று இருந்தது. அதனை மகிழ்வுடன் ஊருக்குக் கொண்டு வந்து அபிஷேகம் செய்து ஆராதித்தனர். தங்கள் குறைதீர மனமுருகி வேண்டினர். வழிபாட்டைத் தொடர்ந்து புயலும், வெள்ளமும் விலகியது. காய்ச்சல் கட்டுக்குள் வந்தது. இதனால் மனம் மகிழ்ந்த ஊர்மக்கள் தங்கள் ஊருக்கு காளி என்றே பெயரிட்டு அழைக்கலாயினர்.

இதற்கு மற்றொரு தல வரலாறும் கூறப்படுகிறது. சிவபெருமான், அன்னை பார்வதிதேவியை மணம் புரியும் வைபவம், இவ்வூருக்கு சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமணஞ்சேரியில் நடைபெற்றது. இதன் காரணமாக இன்றும் திருமண வரம் வேண்டுவோர் புகலிடமாக திருமணஞ்சேரி திகழ்கின்றது. இத்திருமண விழாவைக் காண, திருமணஞ்சேரி வந்த காளி, இந்தப் பகுதிக்கும் வந்ததாகவும், இந்த ஊரின் வளமையும், அழகும் காளியை அங்கேயே தங்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் ஊருக்கு காளி என்ற பெயர் வந்ததாக கூறுகிறார்கள். இந்த அற்புதத் தலத்தில்தான் பாலசுகாம்பிகை சமேத திருகாமேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

அன்னை அபிராமி: அன்னை பாலசுகாம்பாளை விட சற்று உயரமான உருவத்தில் அபிராமி அம்பாள் காட்சி அளிக்கின்றாள். அன்னை நின்ற கோலத்தில் அபய வரத முத்திரையுமாக நான்கு கரங்களுடன் அருள் வழங்குகின்றாள். ஒரு காலத்தில் இந்த ஆலயம் சிதிலமடைந்து விளக்கேற்றவே வழியில்லாத நிலையில் இருந்தபோது, ஒரு சிவனடியாரின் கனவில் தோன்றி திருப்பணிகள் செய்ய உத்தரவிட்டாள் என்பது செவிவழிச் செய்தியாகும். அதன்படி அந்த சிவனடியாரும் கோவிலுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். அபிராமி அன்னையினைப் பற்றி மற்றொரு கதையும் கூறப்படுகிறது. திருப் பணியின் போது அன்னையின் இடது மேல் கரம் சேதமடைந்து இருந்ததால், அதற்கு மாற்றாக வேறு திருவுருவை வைக்க முடிவு செய்திருந்தனர். அப்போது மீண்டும் சிவனடியார் கனவில் தோன்றிய அன்னை அபிராமி, ‘உங்களின் குழந்தைக்கு ஊனம் இருந்தால் வெளியில் வீசி விடுவீர்களா?’ எனக் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த சிவனடியார், அந்த கரத்திற்கு மட்டும் அளவெடுத்து கரம் பொருத்தி, அன்னை அபிராமியை நிறுவினார். மொத்தத்தில் இத்தல அம்பாள் உயிர்ப்புடன் இருப்பவர் என்பதற்கு இவையே சான்றுகளாக உள்ளன.

நம்பிக்கைகள்:

பெண்களின் மாதவிலக்கு குறை தீர்க்கும் தலைமை மருத்துவர் இவரே. இந்த குறையுள்ள பெண்கள், அன்னைக்கு ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரையைப் படைத்து, அர்ச்சனை செய்து மனமுருக வேண்டிக்கொள்ள வேண்டும். அந்த பிரசாதத்தை அர்ச்சகரிடமே தந்து விநியோகம் செய்ய வேண்டும். அதன்பின் விரைவில் மாதவிலக்கு குறை நீங்கும் என்பது ஐதீகம். குறை நீங்கிய பிறகு மீண்டும் ஒருமுறை வந்து நன்றி கூறிச் செல்ல வேண்டும்.

சிறப்பு அம்சங்கள்:

காளி என்ற இவ்வூரின் நடுவில் பழமையான சிவாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. எதிரே பிரமாண்ட திருக்குளம் இருக்கிறது. மூன்று நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்க, கோபுரத்தின் வலதுபுறம் தனி விநாயகர் சன்னிதி உள்ளது. ஆலயத்தில் நுழைந்ததும், பலிபீடம், நந்திதேவர் காட்சி தருகின்றனர். ஆலயத்திற்கு கொடிமரம் இல்லை. கோவிலை வலம் வரும்போது, முதலில் அன்னை அபிராமி சன்னிதி, அடுத்து சுவாமியின் கருவறைச் சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேசுவரர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் விநாயகர், பழமையான சிவலிங்கத் திருமேனிகள், திருவிடந்தை ஐதீகத்தை நினைவுபடுத்தும் ஆதிவராக பூதேவி உடனாய நித்ய கல்யாணப் பெருமாள், கஜலட்சுமி, அஷ்டபுஜ மகாகாளி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், தல மரமான பவழமல்லி ஆகியவற்றை காணலாம். சுவாமி சன்னிதியின் எதிரே, தென்கிழக்கே சூரியன், பைரவர், நவக்கிரகங்கள் அமைந்துள்ளன.

மகா மண்டபம், அர்த்த மண்டபத்தை கடந்து உள்ள கருவறையில், ஆலயத்தின் நடுநாயகமாக இறைவன் திருக்காமேசுவரர், கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். பெரிய வடிவிலான லிங்கத் திருமேனியில் வட்டவடிவ ஆவுடையாரில் இறைவன் விற்றிருக்கிறார். சோழமன்னனின் மனம் கவர்ந்த இறைவன், நம்மையும் கவர்கின்றார். சுவாமி சன்னிதியின் எதிரே இடதுபுறம் பாலசுகாம்பாள், வலதுபுறம் அபிராமி என இரண்டு அம்பிகைகள் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருந்து அருள் புரிகிறார்கள். பாலசுகாம்பாள் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில், அபய, வரத முத்திரைகளுடன் எளிய வடிவில் அருளாசி வழங்குகின்றாள்.

திருவிழாக்கள்:

மாதந்தோறும் பவுர்ணமியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர, ஐப்பசி அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம், ஆடிப்பூரம், நவராத்திரி விழாவும், விநாயகர் சதுர்த்தி விழாவும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காளி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top