கரிசூழ்ந்தமங்கலம் கனகசபாபதி திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :
கரிசூழ்ந்தமங்கலம் கனகசபாபதி திருக்கோயில்,
கரிசூழ்ந்தமங்கலம்,
திருநெல்வேலி மாவட்டம் – 627453.
இறைவன்:
சுந்தரேசுவரர் (கனகசபாபதி)
இறைவி:
சுந்தராம்பிகை
அறிமுகம்:
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகிலுள்ள கரிசூழ்ந்தமங்கலத்தில் அமைந்துள்ளது கனகசபாபதி திருக்கோவில். சிதம்பரம், செப்பறை, கட்டாரிமங்கலம், கருவேலங்குளம் மற்றும் கரிசூழ்ந்தமங்கலம் ஆகிய ஐந்து ஊர்களில் உள்ள நடராஜர் சிலைகளை, ‘பஞ்ச விக்கிரகங்கள்’ என்கிறார்கள். இந்த ஐந்து நடராஜர் சிலைகளும் ஒரே ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்டது. திருவாதிரையன்று மேலே கூறப்பட்ட ஐந்து ஊர்களில் உள்ள நடராஜ பெருமானையும் தரிசிப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்தது என்று நம்பப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகிலுள்ள கரிசூழ்ந்தமங்கலத்தில் அமைந்துள்ளது கனகசபாபதி திருக்கோவில். இங்கு அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் சுந்தரேசுவரர். அம்பாளின் பெயர் சுந்தராம்பிகை. தல விருட்சம் வில்வ மரம்.
திருநெல்வேலியில் இருந்து மேலப்பாளையம் வழியாக சேரன்மாதேவி செல்லும் வழியில் பத்தமடையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. ரெயில் மார்க்கமாகவும், பஸ் மார்க்கமாகவும் இக்கோவிலுக்கு சென்று வரலாம்.
புராண முக்கியத்துவம் :
அக்காலத்தில் கட்டாரிமங்கலம் பகுதியை வீரபாண்டியன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். இவன், மணற்படை வீட்டை ஆண்ட முழுதுங்கண்ட ராமபாண்டிய மன்னனின் உறவினர் ஆவான். செப்பறையில் உள்ள நடராஜர் விக்கிரகத்தை பார்த்த வீரபாண்டியன், தனக்கும் அதேபோல் நடராஜர் விக்கிரகம் செய்து தருமாறு ராமபாண்டியனிடம் வேண்டினான். அதைக்கேட்ட ராமபாண்டிய மன்னன், நமச்சிவாய ஸ்தபதியை அழைத்து விக்கிரகங்கள் செய்வதற்கான தாமிரத்தை கொடுத்து ஒரு சிலையை கட்டாரிமங்கலத்துக்கும், மற்றொன்றை நெல்லையப்பர் கோவிலுக்கும் செய்து தருமாறு உத்தரவிட்டான். மன்னனின் உத்தரவுப்படி குறிப்பிட்ட நாளில் 2 சிலைகளும் செய்து முடிக்கப்பட்டன. நடராஜர் சிலையை எடுத்துச்செல்ல வந்த வீரபாண்டிய மன்னன், சிலையின் அழகில் மயங்கி இதைப்போன்ற சிலை வேறு யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்று முடிவு செய்து அந்த சிலையை வடித்த சிற்பியின் இரண்டு கைகளையும் வெட்டி விட்டு இரண்டு சிலைகளையும் தூக்கிச் சென்றான்.
மன்னனின் படைகளில் இடம்பெற்று இருந்த ஒரு பிரிவினர், ஒரு சிலையை எடுத்துக்கொண்டு கட்டாரிமங்கலத்துக்கு சென்றனர். மற்றொரு சிலையை தூக்கிச்சென்ற ஒரு பிரிவினர், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் சிலையை போட்டு விட்டு ஓடி விட்டனர். வெள்ளம் வடிந்ததும் ஊர்மக்கள், நடராஜரின் சிலையை கண்டுபிடித்து எடுத்துச்சென்று ஆற்றின் தென்கரையில் வைத்து வழிபட்டு வந்தனர். இதற்கிடையில் தனது ஸ்தபதிக்கு நேர்ந்த நிலையை அறிந்த ராமபாண்டியன், அதற்கு காரணமான வீரபாண்டியன் மீது படையெடுத்துச்சென்று தனது ஸ்தபதியின் கைகளை வெட்டிய வீரபாண்டியனின் இரண்டு கைகளையும் வெட்டினான். பின்னர் ஆற்றின் தென்கரையில் உள்ள சிலையை நெல்லையப்பர் கோவிலுக்கு எடுத்துச்செல்ல முயன்றான். ஆனால் அந்த சிலையை அங்கிருந்து யாராலும் நகர்த்தக்கூட முடியவில்லை.
அன்றைய இரவில் மன்னனின் கனவில் இறைவன் தோன்றி, “கரிய மேகங்கள் சூழ்ந்த வனம் நிறைந்த இந்த இடத்திலேயே நான் வீற்றிருக்க விரும்புகிறேன். இங்கேயே எனக்கு கோவில் எழுப்புவாயாக” என்று கூறி மறைந்தார். இறைவனது விருப்பப்படி ராமபாண்டிய மன்னன், கரிசூழ்ந்தமங்கலத்தில் திருக்கோவில் கட்டியதாக வரலாறு தெரிவிக்கிறது. (இரண்டு கைகளையும் இழந்த ஸ்தபதி, தனது இரு கைகளிலும் அகப்பையை கட்டிக்கொண்டு வார்ப்பு செய்து மேலும் மூன்று நடராஜர் சிலைகளை வடித்தார். அவ்வாறு வடித்த சிலைகளில் ஒன்று சிதம்பரத்திலும், மற்ற இரண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செப்பறை, கருவேலங்குளம் ஆகிய தலங்களிலும் உள்ளன).
நம்பிக்கைகள்:
இங்கு தினமும் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை வழிபாடு மிகவும் விசேஷமானதாகும். பள்ளியறை வழிபாட்டில் கலந்து கொண்டு வழிபடுபவர்களுக்கு தடைபட்ட திருமணம், குழந்தைப்பேறு, விரும்பிய வேலை கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
அம்மையும், அப்பனுமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தாலும், ஆலயத்தில் முக்கியத்துவம் பெற்றவர் நடராஜ பெருமான் தான். சிதம்பரம் நடராஜர் சிலையை உருவாக்கிய ஸ்தபதியால், அதே போல் கொஞ்சமும் மாறுதல் இல்லாத ஐந்து நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டது. அதில் ஒரு நடராஜர் சிலைதான் இந்த ஆலயத்தில் இருக்கிறது. இங்கு அனுக்ஞை விநாயகர் முன் மண்டபத்தில் அமர்ந்து இருக்கிறார். விழா நாட்களில் இவர் முன்னிலையில்தான் சங்கல்பம் தொடங்குவார்கள். சுந்தரேஸ்வரருக்கும், சுந்தராம்பிகைக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இரண்டு சன்னிதிகளுமே கிழக்கு நோக்கி அமைந்திருப்பது சிறப்பு.
ஆலய முன் மண்டபத்தில் ஒரு மணி தொங்குகிறது. அதன் சத்தம் சுற்று வட்டாரத்தில் உள்ள 5 கிலோமீட்டர் தொலைவிற்கு கேட்குமாம். இந்த கோவிலில் பூஜை நடைபெறும்போது ஒலிக்கும் மணியோசையின் சத்தம் கேட்ட பின்னர்தான் மற்ற கோவில்களில் மணி அடித்து பூஜை செய்வார்களாம். முன் மண்டப தூணில் பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகியோரின் சிற்பங்களும் உள்ளன. அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கி கனகசபாபதி சன்னிதி இருக்கிறது. அங்குதான் நடராஜர், நடனமாடிக் கொண்டு இருக்கிறார். அடுத்து கருவறை எண்கோண வடிவத்தில் அமைந்துள்ளது. சிவலிங்க வடிவில் கருவறையில் எம்பெருமான் உள்ளார். வலதுபுறம் அம்பாள் சன்னிதி. சர்வ அலங்காரத்துடன் அம்மையும், அப்பனையும் காண்பதற்கு கோடி கண்கள் வேண்டும்.
தெற்கு பிரகாரத்தில் ஜூரதேவரும், தட்சிணாமூர்த்தியும் காட்சி தருகிறார்கள். மேல பிரகாரத்தில் கன்னி விநாயகரும், வள்ளி-தெய்வானை சமேதராக முருகப்பெருமானும் வீற்றிருக்கின்றனர். வடக்கு பிரகாரத்தில் சனீஸ்வரர், சண்டிகேஸ்வர மூர்த்திகளின் சன்னிதி உள்ளது. சுவாமி மண்டபத்தில் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. ஈசான்ய பாகத்தில் பைரவர் அருள்கிறார். சுவாமிக்கு எதிரில் நந்தியெம்பெருமான் கம்பீரமாக அமர்ந்துள்ளார். முன் முகப்பில் கொடி மரம், பலி பீடமும், தென்பாகத்தில் பூரண புஷ்கலா சமேத சாஸ்தாவின் திருவுருவமும், நடராஜர் அபிஷேக மண்டபமும் உள்ளது.














காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பத்தமடை
அருகிலுள்ள இரயில் நிலையம்
சேரன்மகாதேவி மற்றும் வீரவநல்லூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை, தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரம்