கம்மியம்பேட்டை ருத்ரேஸ்வரர் சிவன் கோயில், கடலூர்
முகவரி
கம்மியம்பேட்டை ருத்ரேஸ்வரர் சிவன் கோயில், கடலூர் –கம்மியம்பேட்டை, கடலூர் மாவட்டம் – 607 001
இறைவன்
இறைவன்: ருத்ரேஸ்வரர்
அறிமுகம்
ஒரு கோயில் சிதைவடைந்து போக என்னவெல்லாம் காரணம் இருக்க கூடும்? பிரதான ஊரில் இருந்து கோயில் தனித்து இருப்பதால், தனியார் கட்டுப்பாட்டில் இருந்து அவர்களால் பராமரிக்க இயலாமல் போவதால், சரியான குருக்கள் இல்லாததால். பக்தர்கள் விரும்பி வராததால். மேற்கண்ட காரணங்களில் சில இக்கோயிலுக்கும் பொருந்துகிறது. கம்மியம்பேட்டை என்பது கடலூரை ஊடறுத்துக்கொண்டு ஓடும் கெடிலம் ஆற்றில் செம்மண்டலம் அருகில் ஒரு பாலம் கெடிலம் தாண்டுகிறது அந்த இடம் தான் கம்மியம்பேட்டை. ஒருகாலத்தில் இது ஒதுக்குப்புறமான இடுகாட்டு பகுதி, இப்போது பிரதான நகரத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. 1778 ஆம் ஆண்டு கடலூரில் ஆட்சி பொறுப்பை ஏற்றிருந்த வில்லியம் கம்மிங் (wills cuming) என்பவர் பெயரால் உருவாக்கப்பட்ட பகுதி கமிங்க்ஸ் பேட்.. இப்போது மருவி கம்மியன்பேட்டை எனப்படுகிறது. 1798 ல் இப்பகுதி திப்பு சுல்தான் படையினரால் அழிக்கப்பட்டது அங்கிருந்த நெசவாளர் குடும்பங்கள் வெளியேறி இப்பகுதி பாழடைந்தது. இங்கு பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கியதாக கிழக்கு நோக்கிய ருத்ரேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது.
புராண முக்கியத்துவம்
திருப்பாதிரிபுலியூர் சிவாலயத்தின் நேர் வடக்கில் ருத்ரச பாகத்தில் இக்கோயில் உள்ளதால் ருத்ரேசுவரர் என பெயர் வந்தது எனலாம். நகர்புற கோயிலாக இருந்தும் இன்னும் புத்தாக்கம் பெறாமல் உள்ளது. கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. பெரும் நிலச்சுவான்தாராக இருந்த சங்கர நாயுடு காலத்தில் இங்கு சிவன்கோயில் எழுப்பப்பட்டது என அறிகிறோம். திருப்பாதிரிபுலியூர் கோயிலின் தென்புற தேரோடும் வீதி இவரது பெயரில் இன்றும் உள்ளது. அவரது வழி தோன்றல்கள் இந்நகரை விட்டு சென்றுவிட இக்கோயில் பாழடைந்து கிடந்தது. தற்போது சில ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் பிரதோஷம், சிவராத்திரி, அன்னாபிஷேகம் போன்ற விழாக்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் கோயில் திருப்பணி செய்யப்படாமல் உரித்த சோளக்கதிர் போல் செங்கல் காட்டி நிற்கிறது. இறைவன் ருத்ரேஸ்வரர் கிழக்கு நோக்கிய பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. இதில் நந்தி சிலை வைக்கப்பட்டுள்ளது சமீபத்தில். இறைவி சன்னதி இல்லை. சண்டேசர் சன்னதி உள்ளது. கருவறை கோட்டங்களிலும் சிலைகள் இல்லை. தற்போது தினசரி காலை மாலை கோயில் திறக்கப்படுகிறது, சிறப்பு நாட்களில் பக்தர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது. கோயில் பொறுப்பாளர்கள் விரைவில் திருப்பணிகள் செய்து தர இசைந்துள்ளனர். ‘‘பேணாயாகிலும் பெருமையை உணர்வேன் பிறவேனாகிலும் மறவேன் காணாயாகிலும் காண்பன் என் மனத்தால் கருதாயாகிலும் கருதி நானேல் உன்னடி பாடுதல் ஒழியேன்’’ இணைய நண்பரின் கூடுதல் தகவல்; அந்த இடம் முதலில் பொது வழிப்பாடு தளம் இல்லை. சங்கர நாயுடு குடும்ப வாரிசுகளில் ஒருவன் என்ற முறையில் விவரங்களை தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன். நடுவீரப்பட்டு மற்றும் சென்னப்ப நாயக்கன் பாளையத்திற்கு ஜமீன்தார்ராக இருந்த சங்கரய்ய நாயுடுவிற்கு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ஜமீன்தார் குடும்பத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய ஆங்கிலேய அரசால் அளிக்கப்பட்ட இடமாகும். தற்போது சிவலிங்கம் இருக்குமிடத்தில் ஆதி சங்கரய்யா அடக்கம் செய்யப்பட்டு அதன் நினைவுச்சின்னமாக சிவலிங்கம் அமைக்கப்பட்டது. மற்றபடி அது கோவில் அல்ல. இறந்தவர்களை அடக்கம் செய்ய ஒதுக்கப்பட்ட இடம். 1929 -ம் வருட பாகப்பிரிவினையில் அந்த இடம் பாகப்பிரிவினையில் சங்கர நாயுடுவின் வாரிசுகளில் ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கடலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி